2008-ம் ஆண்டு இதே ஜூலை 4-ம் தேதி வெளியான படம் ‘சுப்பிரமணியபுரம்’. இந்தப் படத்தில் இயக்குநர் சசிகுமார், ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவான படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். சசிகுமாரே இயக்கியிருந்தார்.
1980-களின் மதுரையில் ‘சுப்ரமணியபுரம்’ என்ற பகுதியில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இதன் கதை, திரைக்கதையாக்கம், கலை இயக்கம், நடிப்பு, இசை ஆகியவற்றுக்காக படம் பெரிதும் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்தப் படம் வெளிவந்த பின்புதான் அரிவாள்களைத் தாங்கிய வன்முறை கலாச்சாரமும் தமிழ்ப் படங்களில் அதிகமானது என்பது உண்மைதான்.
இந்தப் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆனதையொட்டி டிவீட்டரில் இயக்குநர் சசிகுமார் இதனைக் குறிப்பிட்டு, “ஜூலை-4. இந்த நாளில்தான் எனது முதல் படமான ‘சுப்ரமணியபுரம்’ வெளியானது. 12 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தப் படத்தின் உருவாக்கத்திற்கு உதவியவர்களுக்கும், படத்தின் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் எனது நன்றிகள்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையொட்டி படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களும், ரசிகர்களும், சமூகவலைத்தளவாசிகளும் சசிகுமாருக்கு வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.