இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் 2012-ம் ஆண்டு வெளியான இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய முதல் படமான ‘அட்டக்கத்தி’ படம் மூலமாக இசையமைப்பாளராக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானார்.
அதேபோல் இதே ஆண்டில் வெளியான இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் முதல் படமான ‘பீட்சா’விலும் சந்தோஷ் நாராயணன்தான் இசையமைத்திருந்தார்.
அதன் பிறகு இன்றுவரையிலும் இயக்குநர்கள் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் இயக்கிய படங்களுக்கு சந்தோஷ் நாராயாணனே தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.
இந்தத் தொடர் இசையமைப்பு குறித்து சந்தோஷ் நாராயணனிடம் கேட்டபோது, “நான் தமிழ்த் திரையுலகத்திற்குள் வந்ததில் இருந்து இப்போதுவரையிலும் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இவர்களையும் தாண்டி மற்ற இயக்குநர்களின் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறேன்.
ஆனாலும் கார்த்திக் மற்றும் பா.ரஞ்சித் படங்களில் தொடர்ந்து பணியாற்றுவதில் எனக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது பெருமையாகவும் இருக்கிறது. இதுவொரு அலாதி இன்பம் என்றும்கூட சொல்லலாம். அடுத்தடுத்து நல்ல இசையைக் கொடுப்பதால்தானே அவர்களும் என்னை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலென்ன தவறு இருக்கிறது..?” என்று தெரிவித்தார்.