நடிகர் மோகன்லால் நடித்துள்ள ‘மரைக்காயர் – அரபிக் கடலிண்டே சிம்ஹம்’ என்ற மலையாள படம் 100 கோடி செலவில் தயாராகி உள்ளது. மலையாளத் திரையுலக வரலாற்றில் அதிகப் பொருட் செலவில் உருவாகியுள்ள முதல் திரைப்படமும் இதுதான்.
இந்தப் படத்தில் நடிகர்கள் பிரபு, அர்ஜுன், சுனில் ஷெட்டி, சித்திக், முகேஷ், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், நெடுமுடி வேணு, சுஹாசினி, இன்னசென்ட், மம்முகோயா, அசோக்செல்வன், கே.பி.கணேஷ்குமார், கல்யாணி பிரியதர்ஷன், பிரணவ் மோகன்லால் உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.
இயக்குநர் பிரியதர்ஷன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அந்தோணி பெரும்பாவூர் தயாரித்திருக்கிறார்.
2020-ம் ஆண்டுக்கான சிறந்த டப்பிங் கலைஞர், சிறந்த நடன இயக்கம், சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ்க்கான மாநில அரசின் விருதினைப் பெற்றது.
2021-ம் ஆண்டில் இ்ந்தியாவிலேயே சிறந்த திரைப்படமாகவும், சிறந்த உடையலங்காரம் மற்றும் சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ்க்கான மூன்று தேசிய விருதுகளையும் இத்திரைப்படம் பெற்றது.
இத்திரைப்படம் 2019-ம் ஆண்டிலேயே முடிவடைந்து திரைக்கு வரத் தயாராக இருந்தது. இருந்தாலும் கொரோனா பரவலால் வர முடியாமல் முடங்கிக் கிடந்தது.
இப்போது இந்தப் படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் முடக்கத்தில் இருந்த இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக திரைக்கு வரவிருப்பதாக நடிகர் மோகன்லால் 2 நாட்களுக்கு முன்பாக அறிவித்திருந்தார்.
இதே நேரம் பகத் பாசிலின் ‘மாலிக்’, நிவின் பாலி நடித்துள்ள ‘துறைமுகம்’, துல்கர் சல்மானின் ‘குரூப்’, பிருதிவிராஜின் ‘குருதி’, ‘ஆடு ஜீவிதம்’ உள்பட 10-க்கும் மேற்பட்ட படங்களும் திரைக்கு வர தயாராக இருந்தன.
ஆனால் மோகன்லாலின் ‘அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தை ஆகஸ்டு 12-ம் தேதி முதல் கேரளா முழுவதும் 600 தியேட்டர்களில் 3 வாரங்கள் தொடர்ச்சியாக திரையிடுவது என்றும், அந்த 3 வாரங்களிலும் வேறு எந்த படங்களையும் திரையிட வேண்டாம் என்றும் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் சங்கங்கள் கலந்து பேசி முடிவெடுத்துள்ளன.
கொரோனா முடிவடையும் காலக்கட்டத்தில் ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்க இது மாதிரியான ஒரு பெரிய படம் தேவை என்பதாலும், இந்தப் படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்பதால் தயாரிப்பாளரின் நலன் கருதியும் மலையாளத் திரைப்பட அமைப்புகள் இந்த முடிவை எடுத்துள்ளன.
ஆனால் மற்றைய திரைப்படங்களின் தயாரிப்பாளர்களோ, “இது ஒருதலைப்பட்சமான முடிவு” என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏனெனில் கேரளாவில் தமிழ்நாட்டின் தீபாவளியைப் போன்று ஓணம் பண்டிகை காலம்தான் கொண்டாட்டமான காலம். அப்போதுதான் மக்கள் கைகளில் பணம் புழங்கும். மக்களும் தியேட்டர்களுக்கு ஓடி வருவார்கள். “அந்தக் காலக்கட்டத்தில் எங்களது படம் வெளியாகாவில்லையென்றால் எங்களுக்கும் நஷ்டமாகுமே.. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பெரும் கோடீஸ்வரர். எவ்வளவு நஷ்டம் வந்தாலும் தாங்குவார். எங்களால் தாங்க முடியுமா..?” என்று சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள்.