Touring Talkies
100% Cinema

Sunday, September 14, 2025

Touring Talkies

இயக்குநர் லீனா மணிமேகலையின் ‘மாடத்தி’ படம் ஓடிடியில் வெளியாகிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் லீனா மணிமேகலை பல ஆவணப் படங்களை தயாரித்து, இயக்கியவர். ஏற்கெனவே செங்கடல்’ என்ற படத்தையும் தயாரித்து, இயக்கியிருந்தார்.

இப்போது தனது சொந்த நிறுவனமான கருவாச்சி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அவரே தயாரித்து எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘மாடத்தி’.

கூட்டு நிதியில் தொடங்கப்பட்ட இப்படத்தை பாவனா கோபராஜு, பியூஷ் சிங் மற்றும்  அபிநந்தன் ராமானுஜம் மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.  

இந்தப் படத்தில் அஜ்மினா காசிம், பேட்ரிக் ராஜ், செம்மலர் அன்னம் மற்றும் அருள் குமார் முக்கிய கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்ட மற்ற கதாபாத்திரங்களாக அச்சமூக மக்களே பங்கேற்றுள்ளனர்.

ஜெஃப் டோலென், அபிநந்தன் ராமானுஜம் மற்றும் கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தங்கராஜ் படத் தொகுப்பு செய்ய தபஸ் நாயக் ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். மோகன மகேந்திரன் கலை இயக்கம் செய்ய, இப்படத்திற்கான இசையை கார்த்திக் ராஜா அமைத்துள்ளார். பவிசங்கர் விளம்பர வடிவமைப்பு செய்துள்ளார்.

இந்த ‘மாடத்தி’ படத்தின் திரைக்கதையை லீனா மணிமேகலையுடன் இனைந்து ரஃபிக் இஸ்மாயில் மற்றும் யவனிகா ஸ்ரீராம் எழுதியுள்ளனர். லீனா மணிமேகலை படத்தை இயக்கியிருக்கிறார்.

ஏதிலிகளுக்குத் தெய்வமில்லை. அவரே தெய்வம்’ என்ற மேற்கோளுடன் வரும் இப்படம் தமிழ்நாட்டின் தென்கோடியில், ‘காணத் தகாதோர்’ என்று அடையாளப்படுத்தப்படும் புதிரை வண்ணார்’ சமூகத்தைச் சார்ந்த ஒரு பதின்ம வயது பெண்ணின் பருவ வாழ்க்கையைப் பேசுகிறது. 

தலித் மக்கள் மற்றும் இறந்தவர்களின் துணிகளையும் மாதவிடாய் துணிகளையும் துவைப்பவர்களான இம்மக்கள் எதிர்கொள்ளும் கொடூரமான அடக்கு முறைகளை இப்படம் தோலுரிக்கிறது.

இவர்களைப் பார்த்தாலே தீட்டு என்று மற்றவர்களால் கருதப்படுவதால் மற்ற சமூகத்தினர் கண்ணில்படாமல் ஒளிந்து செல்லும் அவல நிலைக்குள்ளாகிய  இம்மக்களின் துயர வாழ்வின் பின்னணியில் பாலின, சாதி அடையாளங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் வன்முறை ஆகியவற்றை ஆழ்ந்து அவதானிக்கும் ஒரு  ‘அ’தேவதைக் கதைதான் இந்த மாடத்தி’ திரைப்படம்.

இத்திரைப்படம் தென்கொரியாவின் பூசான் திரைப்பட விழா, கோல்கத்தா சர்வதேச திரைப்பட விழா, லத்தீன், அமெரிக்கா திரைப்பட விழா, சிகாகோ தெற்காசிய திரைப்பட விழா, அவுரங்கபாத் சர்வதேச திரைப்பட விழா ஆகிய திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளைப் பெற்றது. பிரான்ஸ் நாட்டின் லெரிம்பாட் விருதுக்கான இறுதிப் பட்டியலிலும் இத்திரைப்படம் இடம் பெற்றிருந்தது.

இந்தப் படத்தின் டீஸரை நடிகைகள் மஞ்சு வாரியார், ஐஸ்வர்யா ராஜேஷ், கீது மோகன்தாஸ், அஞ்சலி மேனன், ரீமா கல்லிங்கால், ரோகிணி, எழுத்தாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கப்பாண்டியன், நடிகர் பிருத்விராஜ், இயக்குநர்கள் சேரன், ஆஷீக் அபு, பா.ரஞ்சித், வசந்த பாலன், சி.எஸ்.அமுதன், எழுத்தாளர் ஷோபா சக்தி, இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் வெளியிட்டுப் பெருமைப்படுத்தினார்கள்.

இத்திரைப்படம் வருகிற ஜூன் 24-ம் தேதி நீஸ் ட்ரீம்’ என்னும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

- Advertisement -

Read more

Local News