சல்மான்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ராதே’ திரைப்படம் ரம்ஜான் பண்டிகையொட்டி நாளை வெளியாவதால் இந்தியா முழுவதும் தற்போது டிரெண்ட்டாகியுள்ளது.
இந்தப் படத்தில் சல்மான் கான் உடன் திஷா பதானி, ஜாக்கி ஷெராப், பரத், ரன்தீப் ஹூடா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். பாலிவுட்டின் வெற்றிக் கூட்டணியான பிரபுதேவா-சல்மான்கான் ஜோடி இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.
2009-ம் ஆண்டு ‘வாண்டட்’ படத்தின் மூலம் சல்மான் கான் – பிரபுதேவா கூட்டணி முதல்முறையாக இணைந்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து சல்மான்கான் நடிப்பில், பிரபுதேவா இயக்கத்தில் ‘தபாங் 3’ வெளியானது. இந்தப் படமும் வெற்றி பெறவே மீண்டும் மூன்றாவது முறையாக இருவரும் இந்த ‘ராதே’ படத்தில் இணைந்துள்ளார்கள்.
இந்த ‘ராதே’ திரைப்படம் 2019 அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டு 2020 அக்டோபர் மாதம் முடிக்கப்பட்டது.
வருடா வருடம் ரம்ஜான் தினத்தன்று நடிகர் சல்மான்கான் தனது படத்தை வெளியிடுவது வழக்கம். அதனால் இந்தாண்டு ரம்ஜான் தினத்தன்று அந்த ‘ராதே’ படத்தைத் திரைக்குக் கொண்டு வரும் வேலைகளில் ஈடுபட்டிருந்தது படக் குழு. ஆனால் எதிர்பாராதவிதமாக இந்தாண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்குதலினால் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டதினால் சிக்கல்கள் எழுந்துள்ளன.
இதனால் வேறு வழியில்லாமல் ஓடிடி தளத்தில் இந்தப் படம் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜீ பிளக்ஸ்’ என்ற பணம் கொடுத்துப் பார்க்கும் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் தியேட்டர்கள் திறந்திருந்தால் அந்தத் தியேட்டர்களில் இத்திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். இதனால் இந்தப் படத்தின் வசூல் நிச்சயமாகப் பாதிக்கப்படும். எப்போதும்போல் கிடைக்கும் வசூல் வராது என்பதை சல்மான்கானே ஒத்துக் கொண்டுள்ளார்.
இதனால் தனது சமூக வலைத்தளத்தில் “ராதே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாது. இதன் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் ஜீரோ என்பது எனக்கு இப்போதே தெரியும். என்னுடைய படங்களில் இதுதான் மோசமான பாக்ஸ் ஆபீஸ் ஹிட்..” என்று குறிப்பிட்டுள்ளார் சல்மான்கான்.
அதோடு படத்தில் நடப்பதற்காக தனக்குத் தரப்பட்ட சம்பளத்தில் 40 கோடிகளை இப்போது விட்டுக் கொடுத்துள்ளார் சல்மான்கான்.
இந்த ‘ராதே’ படத்தின் திரையரங்கு, சேட்டிலைட், டிஜிட்டல் உரிமைகள் ஜீ நிறுவனத்துக்கு 230 கோடிகளுக்கு விற்கப்பட்டிருந்தது. இப்போது படம் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், இதில் 40 கோடிகளை சல்மான்கான் குறைத்துக் கொள்ள மொத்த பிஸினஸ் 190 கோடிகளுக்கு முடிவாகியுள்ளதாக மும்பையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு நடிகர்.. இப்படி தனது சம்பளத்தை தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக குறைத்துக் கொள்வதெல்லாம், இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க விஷயம்.
இதை அனைத்து மொழி நாயகர், நாயகிகளும் பின்பற்றினால் இந்திய சினிமா சிறப்பாக இருக்கும்.