தற்போது நடந்து முடிந்திருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் ‘மக்கள் நீதி மையம்’ கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை கோவை தெற்கு தொகுதியில் தோற்கடித்த பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளரான வானதி சீனிவாசனுக்கு உடனடியாக வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் நடிகை கவுதமி.
நடிகர் கமல்ஹாசனுடன் பல ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தவர் நடிகை கவுதமி. கமல்ஹாசனின் மனைவியாக அறிவிக்கப்படாவிட்டாலும் மனைவியாகவே இருந்தவர். திடீரென்று கமலுடன் ஏற்பட்ட திடீர் கருத்து வேறுபாட்டால் அவரிடமிருந்து விலகிச் சென்றுவிட்டார். தற்போது தனது மகளுடன் தனியே வாழ்ந்து வருகிறார் கவுதமி.
அதோடு பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து மிகத் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். இந்தச் சட்டப் பேரவைத் தேர்தலில் கவுதமிக்கு ராஜபாளையம் தொகுதியை பெற்றுத் தருவதாக அக்கட்சியின் தலைவர்கள் உறுதியளித்திருந்தனர்.
இதையடுத்து ராஜபாளையத்திலேயே கடந்த 2 மாதங்களாக வீடு எடுத்துத் தங்கி ஊர், ஊராகச் சென்று பாரதீய ஜனதா கட்சிக்கு பெரும் பிரச்சாரம் செய்து வந்தார் கவுதமி. ஆனால் தொகுதி உடன்பாட்டில் அந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்க அதிமுக மறுத்துவிட்டதால் கவுதமியால் போட்டியிட முடியவில்லை.
வேறு தொகுதியும் கவுதமிக்குக் கிடைக்காததால் தன் கட்சி சார்பாகப் போட்டியிடுபவர்களில் குஷ்பூவைத் தவிர மற்றவர்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தார் கவுதமி.
இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவியான வானதி சீனிவாசனிடம் வெறும் 1490 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இதையடுத்து நடிகை கவுதமி வானதி சீனிவாசனுக்கு முகநூல் வாயிலாக வாழ்த்துச் செய்தி சொல்லியிருக்கிறார்.
அந்தச் செய்தியில், “கோவை தெற்கு தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துகள். திருமதி வானதி அவர்கள் அரசியலில் பலருக்கும் முன்மாதிரி மற்றும் மக்களுடன் இணைந்து செயல்படுபவர். அவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பாஜக சொந்தங்களுக்கு வாழ்த்துகள்..” என்று தெரிவித்துள்ளார்.
இது கமல்ஹாசனின் தீவிர ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. “கமல்ஹாசன் ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து இன்னமும் ஹோட்டலுக்குக்கூட போய்ச் சேரவில்லை. அதற்குள்ளாக அவரை தோற்கடித்தவருக்கு வாழ்த்துச் சொல்லி ஏன் கமலை நோகடிக்க வேண்டும்..? கவுதமிக்கு நாகரீகம் தெரியாதா..? அவருக்கு நன்றி கூடவா இல்லை..?” என்று சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.