Thursday, November 21, 2024

தனுஷ் நடித்திருக்கும் ‘ஜெகமே தந்திரம்’ படம் நெட் பிளிக்ஸில் வெளியாகிறது..

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் ‘ஜெகமே தந்திரம்’ திரைப்படம் பலவித இழுபறிகளுக்குப் பிறகு கடைசியில் ஓடிடியில்தான் வெளியாகப் போவதாக உறுதியாகத் தெரிய வந்துள்ளது.

இந்த ஜெகமே தந்திரம் படத்தை YNot Studios நிறுவனம், ரிலையன்ஸ் என்டர்டெயிண்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் சஞ்சனா நடராஜன், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜூ ஜார்ஜ், கலையரசன், செளந்தர்ராஜா, தீபக் பரமேஷ், தேவன், வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த், ராமச்சந்திரன் துரைராஜ், ராஜு பாய், சரத் ரவி, ஜெர்மைன், தன்வீர் கான், நேசந்த் பெர்னாண்டோ, முத்துக்குமார், அஷ்வந்த் அசோக்குமார், ரூபன் நாதன், ராபர்ட் மெக்ரா, கைரன் மெக்கிவர்ன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒரு கேங்ஸ்டர்-திரில்லர் வகையைச் சார்ந்த இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் உருவான நாளில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துதான் வந்துள்ளது.

2018 பிப்ரவரி மாதமே இத்திரைப்படம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது தனுஷ் பல்வேறு படங்களின் படப்பிடிப்பில் மாட்டிக் கொண்டதால் இத்திரைப்படம் ஒரு வருட காலத்திற்கும் மேலாக தள்ளிப் போய் 2019 ஆகஸ்ட் மாதம்தான் படப்பிடிப்புக்கே தயாரானது.

2019 செப்டம்பரில் இங்கிலாந்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெற்றது. 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் இத்திரைப்படம் வெளியீ்ட்டிற்குத் தயாரானது.

2020 மே 4-ம் தேதியன்று இத்திரைப்படம் வெளியாகப் போவதாக முதல் அறிவிப்பு வெளியானது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பினால் திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியாகாத படங்களில் பட்டியலில் இந்தப் படமும் இடம் பிடித்துவிட்டது.

அதன் பிறகு கடந்த 2020 நவம்பர், டிசம்பர் மாதங்களில் படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஓடிடியில் வெளியிடுவதையே தயாரிப்பாளர் விரும்பியதால் பிரச்சினைகள் வலுத்தன.

இந்தப் படம் தியேட்டரில்தான் வர வேண்டும் என்று நாயகன் தனுஷே விரும்பினார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் அதையேதான் சொன்னார். ஆனால், ஓடிடியில் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்திருந்ததால் தியேட்டர்களில் வெளியாவது தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது.

இப்போது கொரோனா 2-வது அலையினால் மீண்டும் தியேட்டர்களில் 50 சதவிகிதம் பார்வையாளர்கள் அனுமதி.. இரவு நேர ஊரடங்கு என்று பல்வேறு பிரச்சினைகள் முளைத்துள்ளதால் இத்திரைப்படம் தற்போது வேறு வழியில்லாமல் ஓடிடியிலேயே வெளியாகவுள்ளது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஜூன் மாதம் இத்திரைப்படம் வெளியாகும் என்று தெரிகிறது. ஜூன் 12 அல்லது 13 ஆகிய இரண்டு நாட்களில் ஒரு நாள் நாள் இத்திரைப்படம் அத்தளத்தில் வெளியாகுமாம். இதற்கு முன்பாக அடுத்த மாதம் மே 14-ம் தேதியன்று இத்திரைப்படத்தின் டிரெயிலர்  வெளியிடப்படும் என்று தெரிகிறது.

இந்தக் கொரோனா பூதம் இன்னும் என்னென்ன மாற்றங்களை தமிழ்ச் சினிமாவில் கொண்டு வரப் போகிறது என்று தெரியவில்லை.

- Advertisement -

Read more

Local News