தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடந்தாண்டு நவம்பர் 22-ம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையிலான அணி பெரும் வெற்றியைப் பெற்றது. ஆனால், இந்த அணியின் சார்பாக செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ராதாகிருஷ்ணனும், பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட சந்திரபிரகாஷ் ஜெயினும், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கதிரேசனும் போட்டியிட தகுதியில்லாதவர்கள் என்று எதிரணியினர் பலரும் புகார் தெரிவித்தனர்.
ஏனெனில் இந்தச் சங்கத்தின் விதிமுறைப்படி சங்க நிர்வாகத்திற்குப் போட்டியிடுபவர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதாவது ஒரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருக்க வேண்டும்.
ஆனால், இவர்கள் மூவருமே கடந்த ஐந்தாண்டுகளுக்காக எந்தவொரு படத்தையும், தயாரித்து வெளியிடவில்லை என்று எதிரணியினர் புகார் அளித்தனர். ஆனால், இந்த மூன்று தயாரிப்பாளர்களும் ஏதோ ஒரு படத்தை வெளியிட்டதாக போஸ்டர்களை காண்பித்தனர். சந்திரபிரகாஷ் ஜெயின் ஒரு திரைப்படத்தை பாண்டிச்சேரியில் ஒரேயொரு ஷோ மட்டும் ஓடியதாகக் கணக்குக் காட்டியிருந்தார்.
மேலும் இவர்கள் மூவருமே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளுக்குப் பின்பே தங்களது படங்களை தியேட்டர்களில் வெளியிட்டதாக எதிரணியினர் ஆதாரம் காட்டியிருந்தார்கள். அதனால் இவர்கள் தேர்தலில் நிற்கவே முடியாது என்று துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சிங்காரவேலன் தேர்தல் அலுவலரிடம் புகார் செய்தார்.
ஆனால், தேர்தல் அலுவலர் இந்தப் புகார்களை ஏற்றுக் கொள்ளாமல் அவர்களது வேட்பு மனுக்களை அனுமதித்தார். அதோடு தேர்தலும் நடந்து, அவர்கள் மூவருமே வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.
இதனை எதிர்த்து தயாரிப்பாளர் சிங்காரவேலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கதிரேசன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மூவரும் சங்கத்தில் அந்தந்தப் பதவிகளில் தொடர்வதற்கு தடை விதித்தது.
இதையடுத்து இன்று காலை இந்தச் சங்கத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் மற்றும் தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் மூவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது டி.ராஜேந்தர் பேசும்போது “தற்போதைய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், துணைத் தலைவர் கதிரேசன் மூவருக்கும் அந்தப் பதவியில் தொடர்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இவர்கள் தேர்தலில் நிற்பதற்கே தகுதியற்றவர்கள் என்று நாங்கள் வேட்பு மனு பரிசீலனையின்போதே எதிர்ப்புத் தெரிவித்தோம். ஆனால், எங்களது எதிர்ப்பையும் மீறி தேர்தல் அலுவலர் அவர்களது வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டார். இதுவே முதல் தவறு. அன்றைக்கே இவர்களது வேட்பு மனுவை தள்ளுபடி செய்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
இப்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செயலாளரும் இல்லை. பொருளாளரும் இல்லை. துணைத் தலைவர்களில் ஒருவரான கதிரேசனும் பொறுப்பில் இல்லை. இதனால் சம்பந்தப்பட்ட மூன்று தயாரிப்பாளர்களும் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மேலும், அந்தத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களின் முழுப் பட்டியலும் தரப்படவில்லை. வாக்களித்தவர்களை சரி பார்க்க சிசிடிவி புட்டேஜ் கேட்டும் கொடுக்கவில்லை. எனவே இந்த அணி இனிமேல் பதவியில் நீடிக்கவே கூடாது.
உடனடியாக அவர்கள் ராஜினாமா செய்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்…” என்று கோரிக்கை வைத்துள்ளார்.