தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் தயாரிப்பில் மெகா இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ‘சீயான்’ விக்ரமின் நடிப்பில் 2005-ம் ஆண்டில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘அந்நியன்’.
200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.
இந்தப் படத்திற்காக நடிகர் விக்ரம் அம்பியாகவும், அந்நியனாகவும் மல்டி ஸ்பிலிட் பெர்சனாலாட்டி என்னும் மருத்துவ ரீதியிலான குணத்தைக் கொண்டவராக சிறப்பாக நடித்திருந்தார். இது அவரது சிறந்த படங்களில் ஒன்றாக இன்றளவும் இருந்து வருகிறது.
இத்திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. படத்தை இயக்கப் போவது சாட்சாத் இயக்குநர் ஷங்கர்தான். விக்ரம் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது ரன்வீர் சிங் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான ஜெயந்திலால் கடா தயாரிக்கிறார்.

இந்தப் படம் பற்றிய அறிவிப்பை நேற்றைக்கு தனது டிவீட்டர் பக்கத்தில் இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.
அந்த ட்வீட்டில், “இந்த நேரத்தில், என்னை விட யாரும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். இந்தப் படத்தின் மூலம் மிகப் பெரிய சினிமா அனுபவத்தை மீண்டும் கொண்டு வருவார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..” என்றும் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.