Thursday, November 21, 2024

தந்தை போட்ட சபதத்திற்காக வயலின் கற்றுக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வயலின் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக வாசிக்கக் கூடிய கலைஞர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த வயலின் மூலம் ரசிகர்களோடு பேசிய பெருமை குன்னக்குடி வைத்தியநாதனுக்கு மட்டுமே சொந்தமானது.

காரைக்குடியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முருகன் தலமான குன்னக்குடியைச் சேர்ந்த ராமசாமி சாஸ்திரிகளுக்கு ஐந்தாவது குழந்தையாக 1935-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி அன்று பிறந்தவர் வைத்தியநாதன்.

ராமசாமி சாஸ்திரிகளின் குடும்பம் ஒரு சங்கீதக் குடும்பம். வைத்தியநாதனின் தந்தை ஹரிகதா காலட்சேபம் நடத்துவதில் வல்லவர். வைத்தியநாதனின் மூத்த சகோதரர் கணபதி சுப்ரமணியம் மிருதங்க வித்வானாக இருந்தார் என்றால் அவரது சகோதரிகளான சுப்புலட்சுமியும், சுந்தர லட்சுமியும் ‘குன்னக்குடி சகோதரிகள்’ என்ற பெயரிலே கர்நாடக இசைக் கச்சேரியை செய்து கொண்டிருந்தனர்.

அந்த குடும்பத்தில் சங்கீதத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் வளர்ந்தவர் என்றால் அது குன்னக்குடி வைத்தியநாதன் மட்டும்தான்.

படிப்பிலோ, இசையிலோ கொஞ்சமும் அக்கறை இல்லாமல் தனது மகன் வளர்ந்து வருவதைப் பார்த்து சங்கடப்பட்ட வைத்தியநாதனின் தாயார் “இவன் மேல் மட்டும் நீங்கள் என் அக்கறையே காட்ட மாட்டேன் என்கிறீர்கள்?” என்று தனது கணவரிடம் கேட்காத நாளில்லை. “எல்லாவற்றிற்கும் நேரம் வர வேண்டும்” என்பார் அவர்.

அந்த நேரம் ஒரு வயலின் வித்வான்  மூலம் ஒரு நாள் வந்தது. குன்னக்குடி சகோதரிகளுக்கு எல்லா கச்சேரிகளிலும் வயலின் வாசிக்கக் கூடிய வயலின் வித்வான் அன்றைய கச்சேரிக்கு வரவில்லை. அவர் இல்லாமலே கச்சேரி நடந்து முடிந்தது.

மறுநாள் அந்த வயலின் வித்வான் வந்தபோது முதல் நாள் கச்சேரிக்கு வராத அந்த வயலின் வித்வானை கடுமையாக திட்டித் தீர்த்தார் வைத்தியநாதனின் தந்தை.

“உங்களுடைய பெண்கள் பாடுகிறார்கள்.. பையன் மிருதங்கம் வாசிக்கிறான்.. ஆனா வயலினுக்கு மொத்த குடும்பமும் என்னைத்தான் நம்பிக்கிட்டு இருக்கீங்க..? அதை மனதில் வைத்துக் கொண்டு கொஞ்சம் மரியாதையாகப் பேசுங்கள்” என்று அந்த வயலின் வித்வான் பேசியது ராமசாமி சாஸ்திரிகளின் கோபத்தை உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

அப்போது அந்தப் பக்கமாக வைத்தியநாதன் வர “இன்னும் ஒரே வருடத்தில் இவனைப் பெரிய வயலின் வித்வான் ஆக்கவில்லை என்றால் என் பெயர் ராமசாமி இல்லை” என்று அந்த வயலின் வித்வானிடம் சபதம் போட்டார் அவர்.

அவர் அப்படி சபதம் போட்டதும் அந்த வயலின் வித்வான்கூட சும்மா இருந்தார். ஆனால், வைத்தியநாதனின் சகோதரிகளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதுவரை வயலினைக் கையில்கூட எடுத்துப் பார்த்திருக்காத வைத்தியநாதன் எங்கே வயலின் கற்றுக் கொள்ளப் போகிறார் என்பதுதான் அவர்களது சிரிப்புக்குக் காரணம்.

ஆனால், தந்தையின் சொல்லுக்காக வயலினைக் கையில் எடுத்த வைத்தியநாதன் அவரது சகோதரிகளின் கணிப்பை எல்லாம் மீறி அசுர சாதகம் செய்யத் தொடங்கினார்.

சரியாக ஒரு வருடத்தில் தனது சகோதரிகளான குன்னக்குடி சகோதரிகள் பாட அண்ணன் கணபதி சுப்ரமணியம் மிருதங்கம் வாசித்த கச்சேரியில் அற்புதமாக வயலின் வாசித்து, முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்ற தாரக மந்திரத்திற்கு வலுவினைச் சேர்த்தார் வைத்தியநாதன்.

‘குன்னக்குடி வைத்தியநாதன்’ என்ற பெயரில் பிரபலமாகத் தொடங்கிய வைத்தியநாதனைத் தேடி பல பெரிய வித்வான்களின் பாட்டு கச்சேரிகளில் வயலின் வாசிக்கக் கூடிய வாய்ப்புகள் வரத் தொடங்கின.

இசைக்கு அடுத்தபடியாக சினிமா வைத்தியநாதனை ஈர்த்தது. எந்த புது படம் வந்தாலும் முதல் காட்சியில் தவறாமல் வைத்தியநாதனைப் பார்க்கலாம்.

திரைப்படப் பாடல்களுக்கு ஜலதரங்கம் வாசித்துக் கொண்டிருந்த வெங்கட்ரமணராவ் என்பவர் ஒரு முறை வைத்தியநாதனை சந்தித்தார். எவ்வளவுதான் கச்சேரிகளில் வாசித்தாலும் பெரிதாக பணம் சேர்க்க முடியாது என்று வைத்தியநாதனுக்கு சொன்ன அவர் பணம் சம்பாதிக்க ஒரே வழி சினிமாதான் என்று சொன்னது மட்டுமின்றி சேலத்தில் உள்ள மாடர்ன் தியேட்டர்சில் போய் சேரும்படி வைத்தியநாதனுக்கு யோசனையும் கூறினார். அடுத்த கணமே சேலத்திற்குப் புறப்பட்டுவிட்டார் வைத்தியநாதன்.

வைத்தியநாதனின் திறமை என்ன என்பதை சோதித்துப் பார்த்த பிறகே அவரை சேர்த்துக் கொள்ள முடியும் என்று சொன்ன மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகிகள் அவரது திறமையை சோதித்துப் பார்ப்பதற்காக இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் முன்னாலே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினர்.

“எங்கே வாசி பார்க்கலாம்” என்றார் ஜி.ராமனாதன். இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் அவர்களுக்கு மிகவும் பிடித்த ராகம் சாருகேசி ராகம். அந்த விஷயம் வைத்தியநாதனுக்குத் தெரியாது என்ற போதிலும் அதிர்ஷ்டமும், நேரமும் அவருக்குத் துணை நின்ற காரணத்தாலோ என்னவோ சாருகேசி ராகத்தில் அமைந்த ஒரு பாடலைப் பாடிக் காட்டினார் அவர்.

அதைத் தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் கதவுகள் அவருக்குத் திறக்கப்பட்டன. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பு பொருளாதார ரீதியாக மட்டுமின்றி ஒரு இசையமைப்பாளராக தனது தகுதியை ன் வளர்த்துக் கொள்ளவும் குன்னக்குடி வைத்தியனாதனுக்கு மிகப் பெரிய அளவில் உதவியது.

அந்த அனுபவங்களின் துணையுடன் தனது 17-வது வயதில் சென்னையில் காலடி எடுத்து வைத்த வைத்தியநாதனுக்கு அப்போது பிரபலமாக இருந்த சூலமங்கலம் சகோதரிகளின் அறிமுகம் கிடைத்தது. அவர்களது கச்சேரிகளுக்கு வாசிக்கத் தொடங்கிய வைத்தியநாதனுக்கு தமிழகத்தின் மிகப் பெரிய இசைக் கலைஞர்களாக விளங்கிய செம்மங்குடி, மகாராஜபுரம் சந்தானம், சீர்காழி கோவிந்தராஜன், டிஎன்.ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை உட்பட பல கலைஞர்களோடு இணைந்து கச்சேரி செய்யக் கூடிய வாய்ப்புகள் கிடைத்தன.

1970-ம் ஆண்டு தனியாக வயலின் கச்சேரி செய்யத் தொடங்கியதுதான் குன்னக்குடி வைத்தியநாதனின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

‘சரஸ்வதி ஸ்டோர்ஸ்’ என்ற பெயரில் இசைத் தட்டுக்களை வெளியிடும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்த ஏவி.மெய்யப்ப செட்டியார் ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை தினத்தன்று அவரது அலுவலகத்தில் மிகவும் பிரம்மாண்டமாக பூஜையை நடத்துவது வழக்கம்.

அந்த பூஜையில் பிரபலமான பல பாடகர்கள் பாடுவார்கள். அப்படி பாடிக் கொண்டிருந்த சிதம்பரம் ஜெயராமனுக்கு வயலின் வாசித்துக் கொண்டிருந்த குன்னக்குடி வைத்தியநாதன் அடுத்த பாடலைப பாட சி.எஸ்.ஜெயராமன் இடைவெளி எடுத்துக் கொண்ட சமயத்தில் ‘திருநீலகண்டர்’ படத்திலே தியாகராஜ பாகவதர் பாடிய ‘தீன கருணாகரனே’என்ற பாடலை வயலினில் வாசித்தார்.

அவர் வாசிக்க ஆரம்பித்தவுடன் அவர் பக்கம் திரும்பிய மெய்யப்ப செட்டியார் அவர் வாசித்து முடிக்கின்றவரையில் அடுத்த பக்கம் திரும்பவில்லை.

கச்சேரி முடிந்ததும் குன்னக்குடி வைத்தியநாதனைத் தனியாக அழைத்த அவர் ‘உனக்கு பாகவதர் பாட்டு எல்லவற்றையும் வாசிக்கத் தெரியுமா,,?” என்று கேட்டார். “தெரியும்” என்று வைத்தியநாதன் தலையை ஆட்டியவுடன் சரஸ்வதி ஸ்டோர்ஸ் நிர்வாகியான கண்ணனை அழைத்த செட்டியார் வைத்தியநாதனின் வயலின் வாசிப்பை இசைத் தட்டாக கொண்டு வர ஏற்பாடு செய்யும்படி அவரிடம் கூறினார்.

வைத்தியநாதன் வயலினில் வாசித்த திரைப்படப் பாடல்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து எச்.எம்.வி. நிறுவனத்துக்காக பக்திப் பாடல்களுக்கு இசையமைக்கக் கூடிய வாய்ப்பு குன்னக்குடி வைத்தியநாதனுக்குக் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து பல இசைத்தட்டு நிறுவனங்களுக்காக எண்ணற்ற பாடல்களைத் தனது இசையமைப்பில் உருவாக்கினார் வைத்தியநாதன்.

அப்படி அவர் உருவாக்கிய ஒரு பாடல்தான் தமிழ் சினிமா உலகில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைப்பாளராக அறிமுகமாக பாதை போட்டுத் தந்தது.

குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைப்பாளராகக் காரணமாக அமைந்த அந்தப் பாடலைப் பற்றி அடுத்தப் பதிவில் பார்ப்போம். 

(தொடரும்) 

- Advertisement -

Read more

Local News