நடிகை குஷ்பூ இன்று திடீரென்று நடிகர் பிரபுவின் வீட்டிற்குச் சென்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மரியாதை செலுத்துவிட்டு வந்தது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை குஷ்பூ தற்போதைய தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவின் சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். 10 ஆண்டு கால குஷ்புவின் அரசியல் வாழ்க்கையில் இப்போதுதான் முதன்முறையாக தேர்தலில் நிற்கிறார்.
குஷ்பூ வேட்பு மனுவைத் தாக்கல் செய்த கையோடு மிகத் தீவிரமாக பிரச்சாரமும் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை திடீரென்று சென்னை தி.நகரில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டிற்கு ஒரு விஸிட் அடித்துள்ளார் குஷ்பூ.
அங்கே நடிகர்கள் பிரபு, மற்றும் ராம்குமார் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து தனது அரசியல் களத்திற்கு குஷ்பூ ஆதரவு கேட்டாராம்.
பிரபு, ராம்குமார் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரிடமும் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
பிரபுவின் அண்ணன் ராம்குமார் தற்போது பா.ஜ.க.வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் குஷ்பூவுக்கு ஆதரவாக ஆயிரம் விளக்கு தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்யவுள்ளாராம்.


