நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் ‘ஒத்த செருப்பு’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு தனித்துவமான படத்தைத் தயாரித்து இயக்கவிருக்கிறார்.
‘ஒத்த செருப்பு’ படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். இப்போது புதிதாக அவர் எடுக்கவுள்ள படம் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்படவுள்ளதாம். நிறைய நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் வேகவேகமாக நடந்து வருகிறது.
இந்தப் படத்திற்கான செட் அமைக்கும் வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறதாம். கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த செட் அமைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்களாம். இதனை அமைக்கவே 30 நாட்களுக்கு மேலாகுமாம்.
ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன்தான் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் என்பதால் அவருடைய மேற்பார்வையில் அனைத்துத் தொழில் நுட்ப வேலைகளும் நடந்து வருகிறதாம்.
இதற்கிடையில் இந்தப் படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைக்க இருக்கிறார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். பார்த்திபனுக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இடையில் இருக்கும் நட்பினால் இந்தப் படத்திற்கு ரஹ்மான் ஒத்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.
மேலும் இந்தப் படத்தைத் தயாரித்து முடித்தவுடன் உடனேயே தியேட்டர்களுக்குக் கொண்டு வராமல்.. உலகம் முழுவதும் இருக்கும் அனைத்துத் திரைப்பட விழாக்களுக்கும் அனுப்ப இருக்கிறாராம் பார்த்திபன். உலகம் முழுவதும் சுற்றிய பிறகுதான் படம் தியேட்டர்களுக்கு வருமாம்.
இந்தப் படத்தின் கதையையும், வித்தியாசத்தையும் சொன்னால் படத்தைத் தயாரிக்க யாருமே முன் வர மாட்டார்கள் என்பதால் இந்தப் படத்தை தானே தன்னுடைய சொந்தச் செலவில் தயாரித்து வருகிறார் பார்த்திபன்.
‘புதுமை விரும்பி’ என்ற பெயரை வைத்துக் கொண்டு இதுகூட செய்யாவிட்டால் எப்படி..?