“இன்றைக்கு சினிமாவே தெரியாதவர்கள்தான் படமெடுக்க வருகிறார்கள்” என்று இயக்குநர் பேரரசு குற்றம்சாட்டிப் பேசியுள்ளார்.
புதுமுகங்களான அருண்குமார், டிக் டாக் புகழ் இலக்கியா நடித்திருக்கும் நீ சுடத்தான் வந்தியா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது, “இன்று நாடே தேர்தல், கூட்டணி என்று பரபரப்பாக இருக்கின்ற இந்த நேரத்தில் இந்த பட விழா நடக்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருப்பதாகச் சொன்னார். அவர் விருப்பப்பட்டு வரவில்லை. வேறு வழியில்லாமல் வந்திருப்பதாகத் தனது சூழ்நிலையைக் கூறினார்.
இன்று ஆளாளுக்கு கதாநாயகன் ஆகவேண்டும் என்று ஆசையில் வருகிறார்கள். ஆசைப்படுபவர்கள் எல்லாம் கதாநாயகனாக முடியாது. ஆசைப்பட்டால் மட்டும் போதாது.
முன்பு குறும்படத்திலிருந்து சினிமாவுக்கு வந்தார்கள். இப்போது டிக்டாக்கில் இருந்து சினிமாவுக்கு வருகிறார்கள். இதுவும் ஒரு கால மாற்றம்தான். இலக்கியா டிக்டாக்கில் இருந்து வந்திருக்கிறார்.
நாம் விதவிதமான உடைகள், உடுத்துகிறோம். ஆனால் எல்லாம் மானத்தை மறைப்தற்காகத்தான். அது போல பல வகையான படங்கள் எடுத்தாலும் சினிமா என்பது பொழுது போக்கிற்காகத்தான். அது காதலைச் சொல்லலாம், நகைச்சுவையைச் சொல்லலாம். அரசியல் பேசலாம். நல்ல கருத்துகளைச் சொல்லலாம். எதுவாக இருந்தாலும் சினிமா பொழுதுபோக்கிற்காகத்தான்.
சினிமா பொழுதுபோக்காக இருக்க வேண்டும். அரசியலில் பொறுப்புடன் இருக்க வேண்டும். இன்று பொழுதுபோக்கு நிறைந்த சினிமாவில் பொறுப்பு வந்துவிட்டது. இன்று அரசியல் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது.
அதுபோல சினிமாவில் கவர்ச்சியும் ஓர் அங்கம். இந்த படத்தின் கவர்ச்சி வியாபாரத்துக்காக என்று புரிந்து கொள்ள முடிகிறது.
திரையரங்கில் வர வேண்டிய படம் ஓடிடியில் வெளியானதோ அன்றே சினிமா முழுக்க முழுக்க வியாபாரம் என்றாகிவிட்டது. இவர் சினிமா தெரியாமல் படமெடுக்க வந்தாலும் இப்போது அனுபவத்தில் கற்றுக் கொண்டு இருப்பார்.
ஆனால், இன்றைக்கு சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாமல்தான் 90 சதவீதம் பேர் சினிமா எடுக்க வருகிறார்கள். அவர்களுக்குச் சினிமா தெரியாது. அப்படிப்பட்டவர்கள்தான் இன்று படம் எடுக்கிறார்கள்…” என்றார் இயக்குநர் பேரரசு.