இயக்குநர் பேரரசு ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘பழனி’, ‘திருத்தணி’, ‘திருவண்ணாமலை’, ‘திருப்பதி’ என்று ஊர்ப் பெயர்களிலேயே படம் எடுத்து ஹிட் அடித்தவர்.
வெறுமனே இயக்குநராக மட்டும் இல்லாமல் பாடலாசிரியராகவும் வெற்றி பெற்றவர். நடிகர் விஜய் நடித்த ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ ஆகிய இரண்டு படங்களிலும் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் இவர்தான்.
இது குறித்து நேற்று நடைபெற்ற ‘உதிர்’ படத்தின் விழாவில் பேசிய இயக்குநர் பேரரசு, “என்னை பாடலாசிரியராக்கியது நடிகர் விஜய்தான்..” என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், “இந்த ‘உதிர்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தது. இயக்குநர் ஞான ஆரோக்கியராஜா, என்னையும், டி.ராஜேந்தரையும் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு, படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
முதலில் நான் என் படங்களில் பாடல்கள் எழுத யோசித்தேன். வேறு ஒரு பாடலாசிரியர் மூலம்தான் பாடல் எழுத முயற்சித்தோம். ஆனால், எனக்கு திருப்தியளிக்காததால் நானே பாடல்களை எழுதினேன். ஒரு கட்டத்தில், எனது வரிகளே நன்றாக இருப்பதாக இசையமைப்பாளர் தினா கூறிவிட்டார். அப்படித்தான் நான் பாடலாசிரியரானேன்.
நான் பாடல் எழுத முதல் காரணம், தளபதி விஜய், இரண்டாவது காரணம் இசையமைப்பாளர் தினா. ஒரு பாடலை எழுதி விஜய்யிடம் காட்டியபோது “ஏன் நீங்களே எல்லா பாடல்களையும் எழுதக் கூடாது..?” என்று உற்சாகமூட்டினார். அவர் கொடுத்த உற்சாகத்தில் அனைத்துப் பாடல்களையும் நானே எழுதிவிட்டேன். இது அடுத்தப் படமான ‘சிவகாசி’யிலும் தொடர்ந்தது. அந்த வகையில் என்னை பாடல் ஆசிரியனாக்கியது நடிகர் விஜய்தான்..” என்று பேசினார்.