ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘பூமி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது.
படத்தில் ஜெயம் ரவி நாசாவில் பணியாற்றும் விண்வெளிப் பயணம் செல்லவிருக்கும் ஒரு விஞ்ஞானியாக நடித்திருந்தார். அவருக்கு தாய் நாட்டில் விவசாயம் மற்றும் விவசாயிகள் மீதிருந்த பற்று, பாசம் காரணமாக நாசாவில் இருந்து விடுபட்டு தமிழகத்தில் தன்னுடைய சொந்த ஊரில், சொந்த நிலத்தில் விவசாயத்தில் ஈடுபடுகிறார்.
நிலம் மலடாகி விடக் கூடாது, விவசாயிகள் அழிந்து விடக் கூடாது, விவசாயத் தொழில் கார்பரேட்டுகளின் கைகளில் போய் விடக் கூடாது என்பதற்காக ஜெயம் ரவி போராடுவார். இதுதான் பூமி படத்தின் கதைக் கரு.
இந்தப் படத்தின் விமர்சனங்களில் பலரும் “கார்ப்பரேட்டுகளை எதிர்த்து தயாரித்த ஒரு படத்தை இன்னொரு கார்ப்பரேட் தளத்திலேயே வெளியிட்டு பார்க்கச் சொல்கிறார்கள்…” என்னும் அளவுக்குக் கிண்டல் செய்திருந்தார்கள்.
டிவிட்டரில் ஒரு சினிமா ரசிகர் இந்தப் படம் பற்றிய தனது விமர்சனத்தை “ஒன்றுமே புரியவில்லை” என்று எழுதி இதை ‘பூமி’ படத்தின் இயக்குநரான லஷ்மணுக்கும் டேக் செய்திருந்தார்.
இதற்குப் பதிலளித்திருக்கும் இயக்குநர் லஷ்மண், “ “சார், நான் எதுக்காக அந்த படம் பண்ணனும்..? நம்ம எல்லாரும், எதிர்கால தலைமுறையினரும் நன்றாக இருக்கட்டும்னு நெனச்சேன்.. உங்களுக்காகத்தான் எடுத்தேன் சகோ.! ரோமியோ ஜூலியட் எடுத்த எனக்கு கமர்சியல் தெரியாதா..? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் சகோ..! நீங்க சூப்பர் சகோ. நீங்க ஜெயிச்சிட்டிங்க. நான் தோத்துட்டேன்..” என்று விரக்தியாக சொல்லியிருக்கிறார்.
