இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்திற்கான பூஜை அறிவிப்பு வரும்போதே அவர்களிடத்தில் வைக்கப்படும் முதல் கேள்வியே.. “இந்தப் படம் தியேட்டருக்கு வருமா.. அல்லது ஓடிடியில் மட்டுமே வெளியாகுமா..?” என்றுதான்..!
அந்த அளவுக்கு மிகப் பெரிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் படங்களை குறி வைத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஓடிடி சேனல்களின் நிர்வாகத்தினர்.
அதே நேரம் நூற்றுக்கணக்கான மீடியம் பட்ஜெட், சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் கேட்பராற்றுக் கிடக்கின்றன. அவற்றை வாங்கவும், திரைக்குக் கொண்டு வரவும் விநியோகஸ்தர்கள்கூட முன் வரவில்லை. இது போன்ற படங்களை ஓடிடியிலாவது வெளியிடலாம் என்று தயாரிப்பாளர்கள் முயன்றும் ஓடிடி சேனல்களின் நிர்வாகத்தினர் இவர்களை சீந்தக்கூட இல்லை.
இது பற்றி ‘எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் தயாரிப்பாளரான மதியழகன் பேசும்போது, “இப்போதெல்லாம் பெரும்பாலும் ஒரு படத்தில் நடித்த நடிகர் நடிகைகளே அவர்களது பட விழாவிற்கு வருவது இல்லை. அவர்கள் எல்லாம், வேறு ஏதோ உலகத்தில் இருக்கிறார்கள்.
இன்றைய சூழலில் தமிழ் திரையுலகில் ஹீரோக்கள் பற்றாக்குறையா அல்லது அவர்களது டாமினேஷனா என்று சொல்ல முடியாத நிலையில், ஒரு ஹீரோவை சந்தித்து கதை சொல்வதற்குள் பாதி உயிர் போய்விடுகிறது. அந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள் இன்னும் பாதி உயிர் போய்விடுகிறது. அந்த படத்தை ரிலீஸ் செய்வதற்குள் மொத்த உயிரும் போய்விடுகிறது. அந்த அளவிற்கு இன்று படத் தயாரிப்பில் பிரச்சினைகள் இருக்கின்றன.
தற்போதைய சூழலில் ஒரு சில பெரிய தயாரிப்பாளர்களின் படங்களை மட்டுமே அமேசான், நெட்பிளிக்ஸ் போன்றவை தேடி வந்து வாங்குகின்றன சிறிய படங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை.
அவர்கள் மட்டும் மனம் வைத்துக் கை கொடுத்தால் தமிழ்த் திரையுலகம் மீண்டும் செழிக்கத் துவங்கும். குறைந்தபட்சமாக போட்ட காசாவது திரும்பக் கிடைக்கும் என்ற உத்தரவாதம் வந்தாலே போதும்.. மீண்டும் திரைப்படத் தயாரிப்புத் தொழில் புத்துயிர்ம் பெறும். இதற்கான உத்தரவாதத்தை ஓடிடி சேனல் நிர்வாகங்களால்தான் தர முடியும்..” என்று சொல்லியிருக்கிறார்.