வரும் பொங்கல் தினத்தன்று ‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ உள்ளிட்ட சில தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
“இதற்காக திரையரங்குகளில் 100 சதவிகித டிக்கெட்டுகளுக்கு அனுமதியளிக்க வேண்டும்” என்று தயாரிப்பாளர் சங்கங்கள், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.
அதேபோல் தமிழக முதலமைச்சரை ரகசியமாக சந்தித்துப் பேசிய நடிகர் விஜய்யும் இதே கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வைத்துள்ளார்.
இப்போது நடிகை குஷ்புவும் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
இன்று காலை சென்னையில் நடைபெற்ற ‘மாயத்திரை’ படத்தின் இசை வெளியீ்ட்டு விழாவில் பேசிய நடிகை குஷ்பூ, “தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். நீங்கள் இப்போது டாஸ்மாக் பார்களையே திறந்துவிட்டீர்கள். அதேபோல் தியேட்டர்களிலும் 100 சதவிகித டிக்கெட்டுகளை கொடுக்க அனுமதிக்க வேண்டும்.
இதற்காக தமிழக அரசு சொல்லும் அனைத்து வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்ளத் தயார். இது தமிழ்த் திரைப்படத் துறைக்கு தற்போதைக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்…” என்றார்.