1988-ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தமிழ்த் திரைப்படம் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’.
ஏவி.எம். நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்தில் பாண்டியராஜன், ஊர்வசி, மனோரமா, எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் ராஜசேகர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
இத்திரைப்படம் மிகப் பெரிய அளவுக்கு வெற்றியடைந்து ஏவி.எம். நிறுவனத்திற்கு மிகப் பெரிய லாபத்தையும் பெற்றுக் கொடுத்தது.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் பாண்டியராஜன் பேசுகையில், “முதல்ல ஒரு மராத்தி படத்தின் கேஸட்டை கொடு்த்து ‘இந்தப் படத்தைப் பாருங்க’ன்னு கொடுத்தாங்க. நானும் பார்த்தேன். தலையும் புரியலை.. வாலும் புரியலை.. அப்புறம் ஒரு தமிழ்ப் படத்தோட கேஸட்டை கொடுத்தாங்க.

அது ‘மாமியார் மெச்சிய மருமகள்’ என்ற படம். முழுசா பார்த்தேன். அந்த மராத்தி படத்தோட தமிழ் ரீமேக்குதான் ‘மாமியார் மெச்சிய மருமகள்’ன்னு அப்புறமாத்தான் தெரிஞ்சது. “இந்தத் தமிழ்ப் படம் அப்போது சரியாக போகவில்லை என்பதால் இப்போது இதனை கொஞ்சம் மாத்தி காமெடிப் படமா எடுக்கலாம்ன்னு இருக்கோம்” என்றார்கள்.
ஏவி.எம். மாதிரி நிறுவனத்துல நடிக்கிறதே பெரிய விஷயமாச்சேன்னுட்டு நானும் நடித்தேன். நடிக்கும்போது எனக்கு எதுவும் தெரியலை. ஆனால் நகைச்சுவையா படம் வந்திருக்குன்னு மட்டும் புரிஞ்சது.
படத்தோட ரிலீஸ் அன்னிக்கு ‘தினந்தந்தி’ பத்திரிகைல கால் பக்கத்துக்குத்தான் இந்தப் படத்தோட விளம்பரம் வந்திருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியாயிட்டேன். உடனேயே ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு ஓடினேன்.

சரவணன் ஸார் நான் வந்த வேகத்தைப் பார்த்திட்டு.. “விளம்பரத்தைப் பார்த்திட்டு வந்தீங்களா..?” என்றவர் என்னை அமர வைத்துவிட்டு யாருக்கோ போன் செய்து அந்தப் போனை என்னிடம் கொடுத்தார்.
என்னிடம் பேசியவர், “நம்ம படத்துக்கு அடுத்த 10 நாட்களுக்கு புக்கிங் ஆயிருச்சு ஸார்..” என்றார். சரவணன் ஸார் என்னிடம், “அதான் பத்து நாளைக்கு தியேட்டர் புல்லாயிருச்சே.. அப்புறம் எதுக்கு முழு பக்க விளம்பரம்ன்னுதான் கொடுக்கலை” என்றார். எனக்கு பெரிய ஷாக். இப்படியொரு சக்ஸஸை நான் முதல் நாளே எதிர்பார்க்கலை.
ஏன்னா ஏவி.எம். நிறுவனம் இந்தப் படத்துக்கு அவ்வளவு விளம்பரம் செஞ்சாங்க. நாங்க படத்துல பயன்படுத்தின அதே காரை தமிழகம் முழுக்க மக்கள் பார்க்குறதுக்காக கொண்டு வந்தாங்க. குழந்தைகளைக் கவர்றதுக்காக இது குழந்தைகளுடன் பார்க்கக் கூடிய திரைப்படம்ன்னு திரும்பத் திரும்ப விளம்பரத்துல சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இதெல்லாம் சேர்ந்துதான் இந்தப் படத்தை சூப்பர் ஹிட்டாக்கியது.

2 வாரம் கழித்து அதே ‘தினத்தந்தி’ல முழுப் பக்கத்துக்கு ஒரு விளம்பரம் வந்துச்சு. ‘குருவுக்கு முந்தானை முடிச்சு.சிஷ்யனுக்கு பாட்டி சொல்லைத் தட்டாதே’ன்னு போட்டு விளம்பரம் பண்ணியிருந்தாங்க. எனக்கு ரொம்பப் பெருமையா இருந்துச்சு..
திரும்பவும் ஏவி.எம். ஆபீஸுக்கு ஓடினேன். இப்பவும் சரவணன் ஸார் “விளம்பரம் பார்த்திட்டு வந்தீங்களா..?” என்றார். “ஆமாம் ஸார்.. ரொம்பவும் பெருமைப்படுத்திட்டீங்க. ரொம்பவும் நன்றி ஸார்…” என்று அவருக்கு நன்றி தெரிவித்தேன்.
இன்றளவும் அந்தப் படம் என் வாழ்க்கையிலும், என் கேரியரிலும் ஒரு முக்கியமான திருப்பு முனையைத் தந்ததுன்னுதான் சொல்லணும்..” என்றார் பாண்டியராஜன்.