இப்போதெல்லாம் ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராகச் சேர்வதற்காக பல இளைஞர்கள் மணிக்கணக்கில் அந்த இயக்குநரின் அலுவலகத்தில் காத்துக் கிடக்கிறார்கள்.
இயக்குநர்கள் அவர்களது தோற்றம், கல்வித் தகுதி, சினிமா ஆர்வம் இது எல்லாவற்றையும் தாண்டி ஏதாவது குறும்படம் எடுத்திருக்கிறீர்களா என்று கேட்டு அதை வாங்கிப் பார்த்த பின்புதான் தேர்வு செய்கிறார்கள்.
இதுவே முப்பதாண்டுகளுக்கு முன்னால் எப்படியிருந்திருக்கும்.. இதோ பாண்டியராஜன் சொல்கிறார்.
“நான் பாக்யராஜ் ஸாரின் தீவிர ரசிகன். அவருடைய ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தைப் பார்த்துவிட்டு இப்படியெல்லாம் மிக எளிமையா படம் பண்ண முடியுமா என்று ஆச்சரியப்பட்டேன். சினிமாவுக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் தோற்றுவித்த திரைப்படமும் அதுதான்.
அதற்குப் பிறகு அவரைப் பார்க்க பல முறை முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. சோர்ந்துபோய் ஒரு திரைப்பட கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். வேலை என்றால் காபி, டீ, பஜ்ஜி வாங்கிக் கொடுக்கும் அட்டெண்ட்டர் வேலைதான்.
அந்த நிறுவனத்தில் புதிய படம் தயாரித்தார்கள். அதற்கு “டிஸ்கஷன் நடக்கப் போகிறது…” என்று மட்டும் சொன்னார்கள். இயக்குநர் யாராக இருக்கும் என்று நானே யோசித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று பாக்யராஜ் ஸாரே அங்கே வந்தார். “அவர்தான் அந்தப் படத்தை இயக்கப் போகிறார்” என்றார்கள்.
எனக்குப் புல்லரித்துவிட்டது. நான் யாரிடம் உதவியாளராக வேலைக்குச் சேர வேண்டும் என்று காத்திருந்தனோ அவரே என் அருகில் வந்துவிட்டாரே என்று சந்தோஷப்பட்டேன்.
அவர்களுடைய அறையில் டிஸ்கஷன் நடக்கும்போதெல்லாம் வெளியில் போய் பஜ்ஜி உட்பட ஸ்நாக்ஸ்களை நான்தான் வாங்கி வந்து அந்த அறையில் வைப்பேன்.
அறையைவிட்டு வெளியே போனாலும் கதவை லேசாக திறந்து வைத்திருப்பதுபோல ஏற்பாடு செய்துவிட்டு அவர்கள் பேசுவதையும் ஒட்டுக் கேட்பேன். அப்போதே எனக்குள் அஸிஸ்டெண்ட் டைரக்டரா போயே தீரணும் என்ற ஆசை கொளுந்துவிட்டு எரிந்தது.
இந்த நேரத்தில் என் கம்பெனியில் அஸோசியேட்டாக இருந்த சுப்ரமணி என்பவர் என்னிடத்தில் சீன் பேப்பர்களைக் கொடுத்து காப்பியெடுக்கச் சொன்னார். நானும் சினிமா பாணியிலேயே சீன் பேப்பர்களை தயார் செய்து கொடுத்தேன். அதைப் பார்த்துவிட்டு அவர் என்னிடம் விசாரித்தார். நானும் சினிமாவில் இயக்குநராகும் ஆசையில் இருப்பதை அவரிடத்தில் சொன்னேன்.
அவர் பாக்யராஜ் ஸாரிடம் என்னை அழைத்துப் போய் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு என்னை உதவி இயக்குநராகச் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டார். ஆனால், பாக்யராஜ் ஸார் அப்போது மறுத்துவிட்டார். “இப்பவே என்கிட்ட நிறைய பேர் இருக்காங்க. வேண்டாம். அடுத்தப் படத்துக்குப் பார்த்துக்கலாம்…” என்று சொல்லிவிட்டார்.
ஆனாலும், சுப்ரமணயம் என்னை ‘விடியும் வரை காத்திரு’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரச் சொல்லிவிட்டார். அங்கேயும் இதே டீ, பஜ்ஜி வாங்கிக் கொடுக்கும் வேலையைச் செய்து வந்தேன்.
அங்கேயும் ஒரு முறை பாக்யராஜ் ஸாரிடம் சுப்ரமணியம் எனக்காக பேசி பார்த்தார். ஆனால் அப்பவும் பாக்யராஜ் ஸார் மறுத்துவிட்டார். என்னிடம் “பொறுமையா இருப்பா…” என்று தைரியம் சொன்னார் சுப்ரமணியம்.
அடுத்து சில நாட்கள் கழித்து அதே படத்தின் பாடல் காட்சி ஒன்றை அடையாறில் ஓரிடத்தில் படமாக்கினார்கள். அப்போதும் என்னை அங்கே வரச் சொன்னார் சுப்ரமணியம். திடீரென்று என்னிடம் கிளாப் போர்டை கொடுத்து “நீயே இந்த ஷாட்டுக்கு கிளாப் அடி…” என்று ரகசியமாகச் சொன்னார் சுப்ரமணியம்.
நானும் தைரியமாகப் போய் கிளாப் அடித்தேன். ஆனால் என் குரல் வித்தியாசமாக இருக்கவே பாக்யராஜ் ஸார் என்னைக் கூர்ந்து பார்த்து, அருகில் அழைத்தார். “நான்தான் உன்னை வேண்டாம்ன்னு சொன்னனே..?!” என்றார். அவர் சொல்லி முடிப்பதற்குள்ளாக அவரது காலில் விழுந்து கதறிவிட்டேன்.
“ஸார்.. சினிமால சேர்றதுதான் ஸார் என் லட்சியம்.. எனக்கு சம்பளமே வேணாம் ஸார்.. சும்மா உங்களோட இருந்து தொழில் கத்துக்குறேன் ஸார்..” என்று கண்ணீர்விட்டு அழுதேன். பாக்யராஜ் ஸார் என்னைத் தூக்கிவிட்டு “சரி.. இருந்துக்க.” என்றார்.
அந்த ஒரு வார்த்தையினால்தான் இன்றைக்கு நான் இந்த நிலைமையில் இருக்கிறேன்..” என்று கண்ணீர் மல்க சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.பாண்டியராஜன்.