தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது.
இடையில் வந்த ‘நிவர்’ புயல் மட்டும் வராமல் இருந்திருந்தால் இந்நேரம் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்திருக்கும். ‘நிவர்’ புயல் 18 மணி நேரம் கடலூர் மாவட்டத்தைவிட்டு அகலாமல் இருந்ததினால் பாண்டிச்சேரியில் கொட்டித் தீர்த்த மழையினால் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு ஒரு வாரம் தடைபட்டுப் போனது.

இப்போது ‘மாநாடு’ என்ற தலைப்புக்கேற்ப மாநாடு கூட்டம் போன்று ஒரு கூட்டத்தை படமாக்கப்பட வேண்டும். அந்தக் காட்சியும், விமானத்தில் எடுக்கப்பட வேண்டிய சில காட்சிகளும் மட்டுமே பாக்கியிருக்கிறதாம்.
‘மாநாடு’ கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான சில காட்சிகளில் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர் இப்போது அறிமுக இயக்குநரான சங்கரின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷூடன் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பே இன்னமும் 20 நாட்கள் உள்ளது.
அதேபோல் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பும் 10 நாட்கள் பாக்கியுள்ளது. இதில் பாரதிராஜா வரும் போர்ஷன் மட்டுமே 8 நாட்கள் இருக்கிறதாம். எனவே, அதிகப்பட்சம் பாரதிராஜா இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போகலாம் என்கிறது கடைசிக் கட்டத் தகவல்.