தமிழ்ச் சினிமாவின் நகைச்சுவைச் சக்கவர்த்தியான கவுண்டமணி வெளியுலகத்துடன் தொடர்பே இல்லாமல் ஒதுங்கயிருந்தாலும் அவரை யாரும் விடுவதாக இல்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே திடீர், திடீரென்று அவரது உடல் நிலை பற்றிய வதந்திகளை யாராவது பரப்பி விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் “ஐயா.. நான் நல்லாத்தான்யா இருக்கேன்…” என்று தனது மக்கள் தொடர்பாளர் மூலமாக அறிக்கை வெளியிடுவதும் அவருக்கும் வழக்கமாகிவிட்டது.
இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக அவரை வைத்து ரஜினி என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டிருக்கிறார்கள்.

டிவிட்டரில் கவுண்டமணி பெயரில் @ActorGoundamani என்ற ஒரு அக்கவுண்ட்டை ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த 4-ம் தேதிதான் அது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எடுத்த எடுப்பிலேயே “நட்பே துணை” என்னும் தலைப்பிட்டு செந்திலும், கவுண்டமணியும் இருக்கும் புகைப்படத்தை மெர்ஜ் செய்து வெளியிட்டுள்ளனர்.

இதற்கடுத்து கடந்த 5-ம் தேதியன்று நடிகர் ரஜினியும், கவுண்டமணியும் அமர்ந்து மது அருந்துவது போன்ற புகைப்படத்தைப் போட்டு “நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த புகைப்படத்தை எனது கேலரியில் பார்க்கிறேன் @rajinikanth அவர்கள். அன்று எப்படியோ இன்றும் அப்படியே!!!” என்று எழுதியிருக்கிறார்கள்.
இது நிச்சயம் போலி முகவரியாகத்தான் இருக்கும் என்பதற்கு இதுவே சான்றாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் நீண்ட பரிச்சயம் உள்ள அனைவருக்குமே இது ஒரு பேக் ஐடி என்பது கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது.
இந்த நேரத்தில் எதற்கு கவுண்டமணியை வம்புக்கு இழுக்க வேண்டும் என்று யோசித்தால்.. பேக் ஐடியின் இலக்கு கவுண்டரல்ல. ரஜினி என்பது புரிகிறது.

ரஜினி மது அருந்துவது போன்ற புகைப்படத்தைப் போட்டு அவரை அவமானப்படுத்த நினைத்தவர்கள், கவுண்டமணியை ச்சும்மா ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது..! புரிகிறது..!
இது குறித்து நடிகர் கவுண்டமணியிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டால், மிக எரிச்சலுடன் “அது நான் இல்லப்பா…” என்று சொல்லி டொக்கென்று போனை வைக்கிறார்.
நேற்றில் இருந்து எத்தனை போன் அழைப்புகளை அவர் எதிர்கொண்டாரோ என்னவோ.. பாவம்..!
இப்போது இதுவும் சைபர் கிரைம் போலீஸுக்கு போகும்போல தெரிகிறது..!