இந்தக் கொரோனா வைரஸ் கோலிவுட்டையும், பாலிவுட்டையும் மட்டுமே பதம் பார்க்கவில்லை. ஹாலிவுட்டையும் சேர்த்தே செய்துவிட்டது.
3, 4 வருடங்களுக்கு முன்பேயே ஒரு படத்தை ரிலீஸ் செய்யும் தேதியை அறிவிக்கும் அளவுக்கு மெகா பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் இந்த கொரோனாவால் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
கோலிவுட்டில் சில நூறு கோடிகள் நஷ்டம் என்றால் ஹாலிவுட்டுக்கு பல ஆயிரம் கோடிகள் நஷ்டம். அதோடு அங்கே பல்வேறு விதமான நஷ்டஈடுகள், இன்ஸூரன்ஸ் திட்டங்கள் இருப்பதால் குறித்த நேரத்தில் குறித்தத் திரைப்படம் வெலியாகாவிட்டால் பலத்த சேதத்தை தயாரிப்பாளர்கள் சந்திக்க நேரிடும்.
இதையெல்லாம் மனதில் வைத்துதான் புகழ் பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வெளியிட வைத்திருந்த 17 திரைப்படங்களை ஒரே நேரத்தில் தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
‘Dune’, ‘Matrix 4’, ‘The Suicide Squad’, ‘Godzilla vs. Kong’, ‘In The Heights’, ’Space Jam: A New Legacy’, ‘Mortal Kombat’, ‘Those Who Wish Me Dead’, ‘The Conjuring: The Devil Made Me Do It’ உள்ளிட்ட 17 திரைப்படங்கள்தான் தற்போது ஒரே நேரத்தில் வெளியாக இருக்கின்றன.
அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக சுழன்றடிக்கும் சூழலில் தியேட்டர்களையே முழுமையாக எதிர்பார்க்க முடியாது என்பதால் ஓடிடி தளங்களிலும் ஒரே நேரத்தில் படத்தை வெளியிட்டு நஷ்டத்தில் இருந்து தப்பிக்க நினைத்திருக்கிறது வார்னர் பிரதர்ஸ்..!
உண்மையில் இது மிகச் சிறந்த முடிவுதான்..!