Friday, November 22, 2024

‘சார்பட்டா’ வட சென்னையின் குத்துச் சண்டை வரலாற்றின் கதைதான்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் வட சென்னையில் ‘பாக்ஸிங்’ என்னும் குத்து சண்டை பிரபலமாக இருந்தது. அதைப் பின்னணியாக வைத்துதான் இயக்குநர் பா.ரஞ்சித் ‘சார்பட்டா’ என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

ஏற்கனவே  “நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்” என்று நட்பு ரீதியாக ஆர்யா சொல்லி இருக்கிறார். அதை மனதில் வைத்திருந்தார் ரஞ்சித்.

தற்செயலாக பாக்ஸிங் பற்றிய படம்தான் அடுத்தது என்று அவர் தீர்மானித்தவுடன், அந்த கதாநாயகனுக்குரிய உடலமைப்பு ஆர்யாவுக்கு இருக்கும் கூடுதல் சிறப்பு சேர்ந்து கொள்ள இருவரும் இணைந்துள்ளனர்.

இந்தப் படம் பற்றி பா.ரஞ்சித் பேசும்போது, “ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வட சென்னை பகுதியில் இருந்து குத்துச் சண்டையைப் பற்றிய படம்தான் இது. இரண்டு பரம்பரையினருக்கும் இடையில் நடக்கும் பகையும், சண்டையும்தான் படத்தின் கதை.

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பின்னால் இருக்கும் பகுதிதான் கதையின் களம். நாயகன் குடியிருக்கும் பகுதியை ரேவ் என்று சொல்வார்கள்.

படத்தின் பெயரான சார்பட்டா என்பது உருது வார்த்தை என்கிறார்கள். நான்கு கத்திகளைக் கொண்டு செய்யும் சண்டையைக் குறிக்கும் சொல்லாம். சர் பட்டத்தை வென்ற ஒருவர் முதன்முதலாக இதில் போட்டியிட்டு வென்றார் என்பதால் சார்பட்டா என்று மருவியதாகச் சொல்கிறார்கள். ஆனால், பல்லாண்டுகளாக இந்தப் பெயர் வடசென்னை வாசிகளிடையே புழக்கத்தில் உள்ளது.

வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன்பேயே இங்கே சென்னையில் குத்துச் சண்டை போட்டி நம் தமிழர்களிடையே இருந்திருக்கிறது. அப்போது முகத்தில் மட்டுமே குத்துவார்களாம். ஆனால், ஆங்கிலேயர்கள் வந்த பிறகு அது மாறிவிட்டது.

1995வரையிலும் இந்த விளையாட்டு வட சென்னையில் மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. அதன் பிறகுதான் மோதல் அதிகரித்ததால் நிறுத்தியிருக்கிறார்கள். இதற்கு மிகப் பெரிய கலாச்சாரப் பின்புலம் இருக்கிறது.

இது அத்தனையையும் இரண்டரை மணி நேர சினிமாவில் சொல்லிவிட முடியாது. என்னால் முடிந்த அளவுக்குச் சொல்லப் போகிறேன். இந்தப் படத்தின் தொடர்ச்சிகூட வரலாம். ஏனெனில் இதில் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் அவ்வளவு இருக்கிறது..” என்றார்.

காலா’விற்குப் பிறகு ‘பிர்ஸா முண்டா’ என்ற ஒரு இந்திப் படத்திற்கான திரைக்கதை வேலையில் மூழ்கியதால் இரண்டு வருட இடைவெளி விழுந்து விட்டதாகவும் இந்த தமிழ் படத்தை முடித்துவிட்டு மீண்டும் ஹிந்திப் பக்கம் போவதாக செல்லவிருப்பதாகவும் சொல்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

- Advertisement -

Read more

Local News