தமிழ்த் திரையுலகத்தில் கலைச்செல்வி என்றழைக்கப்படும் நடிகை ராதிகா நேற்றோடு திரையுலகத்தில் அடியெடுத்து வைத்து 43-வது வருட நிறைவைக் கொண்டாடினார்.
கடந்த 1978-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 10-ம் தேதிதான் ராதிகா நடித்த முதல் திரைப்படமான ‘கிழக்கே போகும் ரயில்’ வெளியானது. இன்றோடு அத்திரைப்படம் வெளியாகி 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
ராதிகா சினிமாத் துறைக்கு வந்து 43 வருடங்கள் ஆனதையொட்டி, அவர் தற்போது நடித்து வரும் ‘அருண் விஜய் 33’ படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக் குழுவினர்.
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள் எனும் அடையாளத்தை எல்லாம் தாண்டி திரைத்துறையில் தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கியவர் ராதிகா.
பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த ராதிகா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.
ராதிகா தற்போது இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் 33-வது படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படப்பிடிப்புத் தளத்தில் இடைவேளையின்போது ராதிகாவிற்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் அளித்துள்ளனர்.

அந்த் தருணத்தில் கேக் வெட்டிய ராதிகாவிற்கு ஹரி, அருண்விஜய், தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், இணை தயாரிப்பாளர் ஜி.அருண்குமார், ஒளிப்பதிவாளர் கோபிநாத், யோகிபாபு, ராஜேஷ், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி மற்றும் அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ராதிகா இத்திரைப்படம் மட்டுமன்றி, கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவிற்கு அம்மாவாக நடிக்கிறார். தெலுங்கில் ஊர்வசியுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் அதர்வா நடிக்கும் புதிய படத்திலும் அவருக்கு அம்மாவாக ராதிகா நடிக்கவிருக்கிறார்.