Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

‘மாயப்புத்தகம்’ படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைப்பட இயக்குநர் ஆகமுயலும் முருகா அசோக் கனவில் பழமையான புத்தகமும் சீறும் பாம்பும் வருகின்றன. கனவுக்குப் பலன் கேட்க சந்நியாசியிடம் செல்கிறார். அவர், தன் கனவில் பார்த்த புத்தகத்தைக் கொடுத்து, அதிலிருக்கும் கதையைப் படமாக்கச் சொல்கிறார். தயாரிப்பாளரையும் அடையாளம் காட்டுகிறார். அதை நம்பியும் நம்பாமலும் தனது குழுவுடன் காந்தாரா மலைக்குச் சென்று ஹாரர் படம் இயக்க முயல்கிறார். அந்த முயற்சி என்னவானது என்பது கதை.

தற்காலத்தில் வாழும் கதாபாத்திரங்கள், பூர்வ ஜென்மத்தை உணரும் தருணங்கள், முற்பிறப்பின் முடிவுறாத வாழ்க்கையின் தொடர்ச்சி நிகழ்காலத்தில் எந்த எல்லையை நோக்கிச் செல்கிறது என்ற அவற்றின் பயணமும் ‘வெல்டன்’ என்று சொல்லும் விதமாக பிடிமானத்துடன் எழுதப்பட்டிருக்கின்றன.

தீவிரமான வெவ்வேறு லட்சியத்துடன் இருக்கும் முதன்மைக் கதாபாத்திரங்கள், அவர்களுக்குக் கச்சிதமாக உதவும் துணைக் கதாபாத்திரங்கள், அழுத்தமான சம்பவங்களைக் கொண்ட காட்சியமைப்புகள் என ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராம ஜெயப்பிரகாஷ். வித்தகன் என்கிற திரைப்பட இணை இயக்குநராகவும் படத்தில் வருகிறார். குறைந்த பட்ஜெட்டில் அழுத்தமான கதையை, ‘விஷுவல் ட்ரீட்’ ஆக கொடுத்திருக்கும் இயக்குநரின் ‘எக்ஸிக்யூஷ’னுக்கு பாராட்டு.

‘முருகா’ அசோக், சிறந்த பரதக் கலைஞர் என்பதை ‘கண்ணால் கண்ணால் பேசி’ பாடலில் அற்புதமாக ஆடி நிரூபித்திருக்கிறார். மனிதப் பிறவியெடுத்த பஞ்சமாதேவியாக வரும் அபர்னதி, தனது கதாபாத்திரத்தின் இரு பரிமாணத் தன்மையை வெளிப்படுத்தியிருக்கும் விதத்தில் குறையில்லை. பிளாஷ் பேக் கதையில் யோக நரசிம்மனாக வரும் காந்த் எதிர்பாராத சர்ப்பிரைஸ்.

ரவி விஜயானந்தின் பாடல்கள் திரைக்கதைக்கு வலிமை ம் சேர்த்திருக்கின்றன. ஆனால், பின்னணி இசையில் பழைய பாணி சறுக்கல். கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் ஒளிப்பதிவை வழங்கியிருக்கும் ஆறுமுகம், 2 மணி நேரத்துக்குள் படத்தொகுப்பில் கூர்மை காட்டியிருக்கும் ப்ரியன் ஆகியோரின் பங்களிப்பு படத்துக்கு முதுகெலும்பு. புராண, தற்கால உலகங்களைக் கச்சிதமாக இணைத்திருக்கும் மறு ஜென்மக் கதைக் களத்தில், ஏமாற்றம் அளிக்காத திரை அனுபவத்தைக் கொடுக்கிறது இந்தப் படம்.

- Advertisement -

Read more

Local News