தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகள் வாரியாக 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஊக்கத்தொகையும் சான்றிதழும் வழங்கும் விழா சென்னையில் இன்று (ஜூன் 28) நடைபெற்றது. இந்த ஆண்டு, இந்த விழா இன்று மற்றும் ஜூலை 3 என்று இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

இந்நிலையில் விழா நடைபெறும் மண்டபத்திற்கு வருகைதந்த நடிகர் விஜய், நாங்குநேரியில் சாதிய தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னதுரையின் அருகில் அமர்ந்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. விழாவில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விஜய் பேசினார். அவர் கூறியது: எல்லா துறைகளும் சிறந்தவையே; நமக்கு பிடித்த துறைகளை தேர்வு செய்து முழு முயற்சியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம். தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை உள்ளது. தலைவர்கள் என்பதில் அரசியல் மட்டுமல்ல, மாணவர்கள் நீங்கள் செல்லும் துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை.


நல்ல அறிவாளிகள் அரசியலுக்கு வர வேண்டும்; தலைவர்களாக வர வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் பரவல் அதிகரித்துள்ளது. இது ஒரு பெற்றோராகவும், அரசியல் இயக்க தலைவராகவும் எனக்கு கவலையாக உள்ளது. ஆளும் அரசு தவறுகளைப் பற்றிப் பேச நான் இங்கு வரவில்லை; அதற்கான மேடையும் இது இல்லை. நண்பர்கள் யாராவது தவறான பழக்கத்தில் ஈடுபட்டால் அவர்களை திருத்த முயலுங்கள். தவறான பாதையில் யாரும் செல்ல வேண்டாம்; உங்கள் அடையாளத்தை ஒருபோதும் இழக்காதீர்கள். இவ்வாறு அவர் உரையாற்றினார். அதன் பின்னர் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் சான்றிதழும் வழங்கினார்.

