துல்கர் சல்மான் நடித்த 2022ஆம் ஆண்டு வெளியான “சீதாராமம்” திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் பிரபலமடைந்தவர் நடிகை மிருணாள் தாக்கூர். நேற்று அவரது பிறந்தநாளாக இருந்ததால் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இவர் 2014லேயே சினிமாவில் நுழைந்து, ஆரம்பத்தில் மராத்தி படங்களில் நடித்தார். பின்னர் 2018ல் இருந்து தொடர்ந்து ஹிந்தியில் நடித்துவருகிறார். “சீதாராமம்” படத்தின் வெற்றிக்குப் பிறகு “ஹாய் நன்னா”, “தி பேமிலி ஸ்டார்” உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அடுத்ததாக தமிழில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சல்மான் கான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிருணாள் தாக்கூரின் கையை விட்டு நழுவிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 2016ஆம் ஆண்டு வெளியான சல்மான் கான் நடித்த “சுல்தான்” படத்தில் நடிக்க மிருணாள் தாக்கூர் அழைக்கப்பட்டார். ஆனால் படத்தின் கதாநாயகி ஒரு விளையாட்டு வீராங்கனை என்பதால், அவரது ஃபிட்னஸ் அந்த வேடத்துக்கு பொருந்தவில்லை. இதனால் அவர் நடிக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் அனுஷ்கா சர்மா நடித்தார். இந்த விஷயத்தை சல்மான் கான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கூறியிருக்கிறார் இது தற்போது வைரலாகி வருகிறது.