இளையராஜாவாக தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் படத்தை ’கேப்டன் மில்லர்’ இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார் என்று நேற்று முன்தினம் நடந்த பயோபிக் தொடக்க விழாவில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த பயோபிக் படத்தின் துவக்க விழாவில் இளையராஜா, தனுஷ் மட்டுமின்றி கமல்ஹாசன், பாரதிராஜா மற்றும் வெற்றிமாறன் உட்பட சிலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதற்கிடையில் கடந்த நான்கு நாட்களாக பழம்பெரும் இயக்குனர் சங்கீதம் சீனிவாச ராவ் அவர்களை கௌரவிக்கும் விழாவை கமல்ஹாசன் அவர்கள் நடத்தி வருகிறார் என்பதும் ஒவ்வொரு நாளும் ஒரு திரைப்படம் குறித்து இந்த விழாவில் பேசப்பட்டு வருகிறது என்பதும் அறிந்த ஒன்று.
நேற்று முன்தினம் நிகழ்ந்த மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் விழாவில் கமல்ஹாசன், இளையராஜா மற்றும் சங்கீதம் சீனிவாச ராவ் கலந்து கொண்டனர். அதில் கமல்ஹாசன் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டதாகவும் அதில் அவர் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை பயணத்தின் பயோபிக் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதுவது நான் தான் என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தாக இணையத்தில் தீயாக செய்திகள் பரவின.
இதுகுறித்து இளையராஜா பயோபிக் பட குழுவில் உள்ள முக்கிய பொறுப்பாளர் ஒருவரை தொடர்புகொண்டு விசாரித்த போது இப்படத்தில் கமல்ஹாசன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரே தவிர அவர் இப்படத்திற்கு திரைக்கதை எழுதவில்லை என தெரிவித்தார். கமல்ஹாசன் அவர்கள் இப்படத்திற்கு திரைக்கதை எழுதுவதாக செய்திகள் பரவிய போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.