இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் இந்தியாவின் முதன்மை பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா நேற்று அதாவது ஜூலை மாதம் 12ஆம் தேதி பிரம்மாண்டமாக நடை பெற்றது. இந்நிலையில் திருமணக் கொண்டாட்டம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்தே உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் திருமணக் கொண்டாட்டத்தினை அம்பானி குடும்பம் செய்திருந்தது. இந்தியாவின் அனைத்து துறை பிரபலங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.
சினிமா பிரபலங்கள் தொடங்கி கிரிக்கெட் வீரர்-வீராங்கனைகள் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் அனைவரும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தெல்லாம் இந்த நிகழ்ச்சிக்காக இந்தியா திரும்பிக் கொண்டு உள்ளனர். குறிப்பாக ஷாருக்கான் வெளிநாட்டில் நடந்து கொண்டு இருந்த தனது படப்பிடிப்பினை நிறுத்தி விட்டு வந்துள்ளார். அதேபோல் அமெரிக்காவில் செட்டில் ஆகி, தற்போது ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருந்த பிரியங்கா சோப்ராவும் தனது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தனது கணவருடன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வந்துள்ளார். அமிதாப் பச்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அவர் குடும்பத்துடன் கலந்துகொண்டார்.
ஜவான் படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் காலடி எடுத்து வைத்தது மட்டும் இல்லாமல் வெற்றிக்கொடி நாட்டிய நயன்தாராவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். அதேபோல் நடிகர் சூர்யா தனது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவுடன் கலந்து கொண்டார். நடிகர் பிருத்விராஜ் தனது மனைவியுடன் ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொண்டார்.