வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, யுவன் சங்கர் ராஜா மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார். மேலும், பிரபுதேவா, பிரசாந்த், மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். அவ்வாறே, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் நடிகர் விஜயகாந்த் சில காட்சிகளில் தோன்றி செல்கிறார் என்றும் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.
இதற்கு முன்பு, அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, அப்போது விஜய் மற்றும் அஜித் இருவரையும் சந்திக்க வைத்து, அவர்களது நட்பை இருதரப்பு ரசிகர்களுக்கும் வெளிப்படுத்தியவர். அதனால், இப்பொழுது வெளியாக இருக்கும் படம், விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தியதாக இருப்பதால், நட்பை முன்னிறுத்தி அஜித்தை இப்படத்தில் எப்படியோ ஒரு வகையில் பங்களிக்கச் செய்திருப்பார் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில், வெங்கட் பிரபுவின் நண்பரும் நடிகர்களில் ஒருவரான வைபவ், இப்படத்தில் நடித்துள்ளார். அவர், கோட் படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு முக்கியமான காட்சியில், அஜித்தின் பிரபல வசனத்தை விஜய் பேசி நடித்துள்ளார் என கூறியுள்ளார். அந்த வசனமும் காட்சியும் வந்தபோது திரையரங்கமே அதிரும் என அவர் சஸ்பென்ஸ் வெளியிட்டுள்ளார்.