Thursday, April 11, 2024

விமர்சனம்: சாகுந்தலம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

காளிதாசர் எழுதிய புராணக்கதையான அபிஞான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு, சமந்தா, தேவ் மோகன் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம்  சாகுந்தலம்.

விஸ்வாமித்திர முனிவரின் தவம் கலைக்க நடனமாடிய மேனகையால் ஈர்க்கப்பட்டு, அவருடன் விஸ்வாமித்திரர் இணைந்து வாழ்ந்ததன் விளைவாக பிறந்த குழந்தை சகுந்தலா

தன் தவத்தைக் கலைக்க இந்திரனால் மேனகை அனுப்பப்பட்டதை அறிந்து விஸ்வாமித்திரர் மேனகையை விட்டுச் செல்ல, தங்களுக்குப் பிறந்த குழந்தை சகுந்தலையை மேனகை கன்வ முனிவரின் ஆசிரமம் அருகே விட்டுச் செல்கிறார்.

அங்கு சகுந்தலை எனப் பெயரிடப்பட்டு வெளியுலகமே தெரியாமல் வளரும் சகுந்தலா, ஆசிரமத்துக்கு எதிர்பாராதவிதமாக வருகை தரும் ஹஸ்தினாபுர அரசர் துஷ்யந்தனுடன் (தேவ் மோகன்) காதலில் விழுந்து, அவரை காந்தர்வ திருமணம் செய்துகொண்டு, அவரது குழந்தைக்குத் தாயாகிறார்.

தன் ராஜ்ஜியத்துக்குச் சென்று வந்து சகுந்தலாவை அனைவருக்கும் தெரிய திருமணம் செய்துகொண்டு அழைத்துச் செல்கிறேன் என உறுதியளித்துச் செல்லும் துஷ்யந்தன், துர்வாச முனிவர் அளித்த சாபத்தால் சகுந்தலை பற்றி நினைவுகளை முற்றிலுமாக மறக்க, அதன் பின் என்ன நடக்கிறது? சகுந்தலையும் துஷ்யந்தனும் மீண்டும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை!

சகுந்தலையாக சமந்தா. பட்டாம்பூச்சிகளும் பூக்களும் சூழ இன்ட்ரோ கொடுத்து, புலி, மயில், மான், முயல், மரங்கள் என அனைத்துடனும் நட்பு கொண்டு, வனத்தில் ஓடியாடி துஷ்யந்தனுடன் சேர்ந்து நம்மையும் காதலில் விழ வைக்கிறார் சமந்தா.

இரண்டாம் பாதியில் துயரம், விரக்தி, கோபம் என அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி காண்போரை படத்துடன் ஒன்ற வைக்கிறார். க்ளோஸ் அப் காட்சிகளிலும் 60களின் கதாநாயகிகள் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி சமந்தா அட்டகாசமாக ஸ்கோர் செய்துள்ளார்.

சகுந்தலையைக் கண்டதும் காதலில் விழும் துஷ்யந்தனாக தேவ் மோகன். சூஃபியாக நம்மைக் கவர்ந்த தேவ் மோகனின் அடுத்த படம் இது. துஷ்யந்த மகாராஜா கதாபாத்திரத்தில் பொருந்திப் போய் இருக்கிறார். ஆனால் இன்னும் சற்று நன்றாக நடித்திருக்கலாம்.

சமந்தாவின் தோழியாகவும் நடிகை அதிதி பாலன். கதைக்குள் கதை, முன்கதை, பின் கதை என கதை கதையாகச் செல்லும் புராணக்கதையை நடு நடுவே காண்போருக்கு விளக்கி நமக்கும் உதவி செய்துவிட்டு போகிறார்.

இவர்கள் தவிர, பாசக்கார வளர்ப்புத் தந்தை, கன்வ மகரிஷியாக சச்சின் கெதேக்கர், கோபக்கார துர்வாச முனிவராக மோகன் பாபு, அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹா ஆகியோர் படத்தின் கதை ஓட்டத்துக்கு உதவுகின்றனர். ஆனால் வளர்ப்பு அன்னையாக வரும் கௌதமி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் படத்தில் வெறுமனே வந்து செல்கின்றனர்.

மணிசர்மா இசையில் பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன, பின்னணி இசை தொலைக்காட்சி நாடகம் பார்க்கும் உணர்வைத் தருகிறது. புராணக்கதையை முதல் பாதியில் சற்று சுவாரஸ்யமாகவே கடத்தியிருக்கிறார்கள், குறிப்பாக காதல் காட்சிகள், சமந்தா – தேவ் மோகன் இடையேயான கெமிஸ்ட்ரி ஆகியவை படத்துக்கு வலு சேர்க்கின்றன. புலி, மான், முயல், மயில் என விஎஃபெக்ஸில் குழந்தைகளைக் கவரும் அத்தனை அம்சங்களும் உள்ளன.

ஆனால் ஜவ்வென இழுக்கும் இரண்டாம் பாதி, சீரியல்களை மிஞ்சும் சோகம், காதலித்து பிரிந்தது முதல் துயரத்தை மட்டுமே சந்திக்கும் சமந்தாவின் நிலை என நாம் வெகு நேரம் ஏதோ இந்தி டப்பிங் சீரியல் பார்க்கிறோம் என்ற உணர்வும் சலிப்புமே ஏற்படுகிறது. இமயமலை, ஆசிரமக் காட்சிகளில் குளிர்ச்சியாக இருந்தாலும், விஎஃப்க்ஸ் காட்சிகள் விளம்பரப்படுத்தப்பட்ட அளவுக்கு இல்லை.

நீங்கள், கணவனே கண் கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், சத்தியவான் – சாவித்திரி போன்ற படங்களை பார்த்து ரசித்து வளர்ந்த நபர்கள், தொலைக்காட்சி புராண சீரியல்களின் ரசிகர்கள் என்றால் இந்தப் படத்தை நிச்சயம் ரசிக்க முடியும். மற்றவர்கள் அப்படியே யூ டர்ன் அடித்து திரும்பிவிடுங்கள். இல்லை “உயிர் உங்களுடையது தேவி” என சமந்தாவுக்காக எதையும் செய்யத் தயாரான ரசிகர்கள் நிச்சயம் துணிந்து திரையரங்குகளுக்கு படையெடுக்கலாம்.

- Advertisement -

Read more

Local News