Friday, April 12, 2024

மருத்துவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் என்னால் கேட்க முடியும்-மன்றத்தினருக்கு அதிர்ச்சியளித்த ரஜினி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி மக்கள் மன்றத்தின் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்று பல விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

“காசு சம்பாதிக்கணும்னு வர்றவங்க என்னை நம்பி வராதீங்க. மன்றத்துலேயும் இருக்காதீங்க. வேண்டாம்… போயிடுங்க.

ஏற்கனவே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் இப்போதைய கொரோனா காலத்தில் டாக்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் நான் செய்ய முடியும்.

மன்ற நிர்வாகிகள் பலரும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். எனக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்துகிறார்கள்.. அவங்களோட லிஸ்ட்டு என்னிடம் இருக்கு. இனிமேல் நான் கடுமையான  நடவடிக்கை எடுப்பேன். சரியில்லாத மாவட்ட நிர்வாகிகளை மாற்றப் போகிறேன். புதிய மாநில நிர்வாகிகளை நியமிக்கப் போகிறேன்.

நான் உங்களை அழைத்தால் இங்கே வந்து நன்றாகப் பேசுகிறீர்கள். ஆனால், ஃபீல்டுக்குப் போனால்… சொதப்பி விடுகிறீர்கள். உங்களுக்கு அரசியலில் அனுபவம் போதாது. உங்களில் 15 சதவிகிதம் பேரின் செயல்பாடுகள்தான் சரியாக இருக்கின்றன. இன்னும் பலரது செயல்பாடுகள், வேலைகளில் எனக்குத் திருப்தியில்லை.

மக்கள் நலத் திட்டப் பணிகளைத் தீவிரமாக செய்வீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனால், நீங்கள் சரி வரச் செய்யலை. இப்போ இந்த ஒரு வருஷமா நான் அரசியலுக்கு வர மாட்டேன்னு நினைச்சு பலரும் மன்ற வேலைல இருந்த ஒதுங்கீட்டீங்க.

அப்படியே நாம் தேர்தலில் போட்டியிட்டாலும் மிக அதிபட்சமாக 15% ஓட்டுகளை வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இப்படி 10-15% ஓட்டு வாங்குவதால் எந்தப் பயனுமே இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் சினிமாவில் ஜெயித்திருக்கிறேன். அதனால் அரசியலுக்குப் போனாலும் தேர்தலுக்குப் போனாலும் நான் ஜெயித்தாக வேண்டும். அது சாத்தியமே இல்லை என்கிறபோது எதற்காகக் கட்சியை தொடங்க வேண்டும்..?

நான் தெருவுக்கு வந்து பிரசாரம் செய்தால்தான் ஜெயிக்க முடியும்னு நினைக்கிறேன். கொரோனா சீஸன் என்பதாலேயே யோசிக்கிறேன்..” என்று சொல்லியிருக்கிறார் ரஜினி.

இதற்கு நிர்வாகிகள் “சமூக வலைதளங்களில் விஷுவல் மீடியாவில் பிரசாரம் செய்யலாம்… என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை ரஜினி ஏற்றுக் கொள்ளவில்லையாம். “அதெல்லாம் சரிப்பட்டு வராது. மக்கள் என்னை நேரில் எதிர்பார்ப்பார்கள். அத்தனை தொகுதிகளுக்கும் நேரில் போகத்தான் வேண்டும்..” என்றாராம்.

கடைசியாக, “நீங்கள் அரசியலில் கால் வைக்கச் சொன்னால் வைக்கிறோம்.. வேண்டாம் என்றால் இதுவரையிலும் எப்படியிருந்தோமே அது போலவே இருந்து கொள்கிறோம்…” என்று பெருவாரியான மாவட்டச் செயலாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதனால் அரசியலில் இறங்கலாமா.. வேண்டாமா.. என்பது பற்றி முடிவெடுக்கம் அதிகாரத்தை ரஜினியிடமே விட்டுவிட்டார்கள்.

ரஜினியின் இன்றைய வெளிப்படையான பேச்சுக்களால் ஆடிப் போயிருக்கிறார்கள் மக்கள் மன்ற நிர்வாகிகள்.

- Advertisement -

Read more

Local News