Friday, April 12, 2024

‘மண் வாசனை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை டி.ராஜேந்தரால் இழந்த நளினி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தயாரிப்பாளரும், இயக்குநருமான சித்ரா லட்சுணன் தனது ‘காயத்ரி பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் ‘மண் வாசனை’.

இத்திரைப்படத்தில்தான் நடிகை ரேவதி நாயகியாக தமிழ்ச் சினிமாவிற்குள் அறிமுகமானார்.

“இத்திரைப்படத்தில் நாயகியாக நடிகை நளினி நடித்திருக்க வேண்டிய சூழலை இயக்குநர் டி.ராஜேந்தர் தடுத்துவிட்டார்…” என்கிறார் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

இது குறித்து தனது ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் தளத்தில் இருந்து வெளிவரும் ‘எனக்குள் ஒருவன்’ நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியிருக்கிறார்.

அவர் பேசும்போது, “1983-ம் ஆண்டில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் இயக்கத்தில் எனது தயாரிப்பில் உருவான முதல் படமான ‘மண் வாசனை’ படத்தில் நடிப்பதற்காக நாயகியைத் தேடி நான் அலைந்து கொண்டிருந்தேன்.

அப்போதுதான் டி.ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படம் தயாராகிக் கொண்டிருந்தது. அத்திரைப்படத்தில் நாயகியாக நடித்த நளினிக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் அனுராதா என்னும் பின்னணி கலைஞர்.

அவரிடம் ஒரு நாள் நான் பேசிக் கொண்டிருக்கும்போது புது நாயகியைத் தேடி நான் அலைவதைப் பற்றி அவரிடம் சொன்னேன். அப்போது அவர், “நான் இப்போது ‘உயிருள்ளவரை உஷா’ என்ற படத்திற்கு டப்பிங் செய்து கொண்டிருக்கிறேன். இதில் நளினி என்ற பெண் அறிமுகமாகியிருக்கிறார். நல்லா நடிச்சிருக்கார். நீங்க போய் பாருங்க.. உங்களுக்குப் பிடிக்கும்..” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டபோதே நமக்கு ஒரு நாயகி கிடைத்துவிட்டார் என்ற சந்தோஷத்திற்கே போய்விட்டேன். மறுநாளே அந்தப் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த ஏ.பி.நாகராஜனின் டப்பிங் தியேட்டருக்கு  நளினியின் நடிப்பைப் பார்ப்பதற்காக சென்றேன்.

ஆனால், அங்கே இருந்த படத்தின் இயக்குநரான டி.ராஜேந்தர் என்னை உள்ளே அனுமதிக்கவே இல்லை. தான் அறிமுகப்படுத்தும் நாயகியை வேறு யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் அவர் அவ்வளவு உறுதியாக இருந்தார்.

டி.ராஜேந்தரின் பிடிவாதத்தால் என்னால் அப்போது நளினியை பார்க்க முடியவில்லை. ‘உயிருள்ளவரை உஷா’ படம் வெளியான பின்புதான் பார்த்தேன். முன்பேயே நளினியின் நடிப்பைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தால், ஒருவேளை அவரே ‘மண் வாசனை’யில் நடித்திருப்பார். இந்த நல்ல வாய்ப்பைக் கெடுத்தது இயக்குநர் டி.ராஜேந்தர்தான்..” என்று சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News