Friday, April 12, 2024

இளையராஜாவின் அறையை இடித்துத் தள்ளிய பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘இசைஞானி’ இளையராஜா 35 வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோவின் உள்ளேயிருக்கும் பிரசாத் ரிக்கார்டிங் தியேட்டரைத்தான் தான் இசையமைக்க பயன்படுத்தி வந்தார்.

ஓராண்டுக்கு முன்பாக அவருக்கும், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் தான் 35 ஆண்டுகளாகப் பயன்படுத்திய அறையில் ஒரு மணி நேரம் தியானம் செய்யவும், அங்கேயிருக்கும் தன்னுடைய பொருட்களை வெளியில் எடுத்துச் செல்லவும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார் இளையராஜா.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் இளையராஜா தன்னுடைய அறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், தனக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும் அனுமதியளித்தது.

இதையொட்டி இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் இன்று காலை 9 மணிக்கு பிரசாத் ஸ்டூடியோவுக்கு வருகை தந்தனர். அவர்கள் வந்து பார்த்தபோதுதான் இளையராஜா ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் பயன்படுத்தி வந்த தனிப்பட்ட அறையையே பிரசாத் நிர்வாகம் இடித்துவிட்டது தெரிந்தது.

அந்த அறையில் இருந்த பொருட்களையெல்லாம் வேறொரு இடத்தில் குவித்து வைத்திருந்தார்களாம்.

உடனேயே இது பற்றி இளையராஜாவுக்கு அவரது வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்தபோது அவர் மிகவும் மனமுடைந்துவிட்டார். “இந்த நிலைமையில் நான் வந்து பார்ப்பதற்கும், தியானம் செய்வதற்கும் ஒன்றுமில்லை. இது எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது..” என்று சொல்லி இன்றைக்கு இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவுக்கு அனுமதியிருந்தும் வராமலேயே இருந்துவிட்டார்.

அவரது சார்பில் வந்த வழக்கறிஞர்கள் இளையராஜாவுக்குச் சொந்தமான பொருட்கள், ஷீல்டுகள், இசைக் குறிப்புகளை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றிருக்கிறார்கள்.

தமிழ்ச் சினிமாவுக்கே அடையாளம் சேர்ப்பித்த ஒரு சாதனையாளருக்கு அதே போன்ற சாதனையாளர் குடும்பத்தில் பிறந்தவர்கள் செய்திருக்கும் இந்த மரியாதையை நினைத்து அழுவதா.. சிரிப்பதா.. என்றே தெரியவில்லை..!

- Advertisement -

Read more

Local News