Saturday, April 13, 2024

சுஹாசினி ஹீரோயினாக அறிமுகமானதில் ‘ஸ்டில்ஸ்’ ரவியின் பங்கு என்ன..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சுஹாசினி மணிரத்னம், இயக்குநர் மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நாயகியாக அறிமுகமானது அனைவரும் அறிந்ததே.

அத்திரைப்படத்தில் அவரை நாயகியாக்கும்படி மகேந்திரனிடம் வற்புறுத்தி சொன்னது தமிழ்த் திரையுலகத்தின் மூத்த புகைப்பட கலைஞரான ஸ்டில்ஸ் ரவி.

இது பற்றி அவர் இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார்.

அவர் பேசும்போது, “சுஹாசினி, என்.கே.விஸ்வநாதனிடம் ஒளிப்பதிவு உதவியாளராக இருக்கும்போதே எனக்குத் தெரியும். அவர் பணியாற்றிய சில படங்களில் நானும் புகைப்பட கலைஞராகப் பணியாற்றியிருந்தேன்.

மகேந்திரன் ஸார் இயக்கிய ‘ஜானி’ படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் நடைபெற்றது. அங்கு நான் போயிருந்தேன். அசோக்குமார்தான் கேமிராமேன். அவரிடத்தில் சுஹாசினியும் ஒளிப்பதிவு உதவியளாராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆண்களுக்கு நிகரா ஷூட்டிங்ல வேலை பார்ப்பாங்க சுஹாசினி.

அப்போது மகேந்திரன் அவரது அடுத்த படமான ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்கு ஹீரோயின் தேடிக் கொண்டிருந்தார். அந்த ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முன்னரே ஒரு ஹிந்தி நடிகையை பிக்ஸ் செய்திருந்தார்கள். ஆனால், திடீரென்று அந்த ஹீரோயினுக்கு வேறு கமிட்மெண்ட் வந்ததால் இதில் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டதால் வேறு ஹீரோயினைத் தேடினார்கள்.

எனக்கு சுஹாசினி மீது ஒரு பிரியம் உண்டு. அவர் அழகாக இருப்பதால் நிச்சயமாக ஹீரோயினாக சினிமாவில் நடித்தால் ஜெயிப்பார் என்று உறுதியாக நம்பினேன். இதனால் நான் மகேந்திரனிடம் சுஹாசினியையே அந்தக் கேரக்டருக்கு நடிக்க வையுங்கள் என்று சொன்னேன். மகேந்திரன் ஏற்கெனவே அசோக்குமார் மூலமாக சுஹாசினியிடம் பேசியிருக்கிறார். ஆனால், அவரோ தனக்கு விருப்பமில்லை என்று சொல்லி மறுத்துவிட்டாராம்.

இதற்கிடையில் ‘ஜானி’ படத்திற்காக ஜெமினி பாலம் அருகேயிருந்த ஒரு அழகு சாதனக் கடையில் ஒரு நாள் ஷூட்டிங் நடைபெற்றது. அந்தக் கடையில் ஆளுயர கண்ணாடி இருந்தது. சுஹாசினி ச்சும்மா இருக்கும்போதெல்லாம் அந்தக் கண்ணாடியில் தன்னை அழகு பார்த்துக் கொண்டேயிருப்பார்.

இதைப் பார்த்தபோது எனக்கு சுஹாசினிக்குள் ஒரு ஆசை இருக்கிறது. ஆனால், அவர்தான் விருப்பம் இல்லாதவராகக் காட்டிக் கொள்கிறார் என்று ஊகித்தேன். இப்போது மறுபடியும் மகேந்திரனிடம் வற்புறுத்தினேன். இப்போ மறுபடியும் கேட்டுப் பாருங்க ஸார்.. என்று அழுத்திச் சொன்னேன்.

இந்த முறை மகேந்திரன் கேட்டு.. அசோக்குமாரும் கன்வின்ஸ் செய்ய.. சுஹாசினி மறுக்கவில்லை. ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நடித்தார். அதிலிருந்து அவரது கேரியர் துவங்கி, இன்று எங்கயோ போய்விட்டது..” என்றார் ஸ்டில்ஸ் ரவி.

- Advertisement -

Read more

Local News