Friday, April 12, 2024

“மாஸ்டர்’ வேண்டுமெனில் ‘ஈஸ்வரன்’ படத்தைத் திரையிடக் கூடாது…” – விநியோகஸ்தர்களின் மிரட்டல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வரும் ஜனவரி 13-ம் தேதி நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படமும், அதற்கடுத்த நாளான ஜனவரி 14 பொங்கல் தினத்தன்று சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படமும் வெளியாகவுள்ளது.

இந்த அறிவிப்பையடுத்து பல தியேட்டர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துவக்கியிருக்கிறார்கள். தமிழக அரசு கடைசி நிமிடத்தில் நிச்சயமாக 100 சதவிகித டிக்கெட்டுகள் விற்பனைக்கும், கூடுதல் சிறப்பு ஷோக்களுக்கான அனுமதியையும் நிச்சயமாக வழங்கும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த 2020-ம் ஆண்டின் மார்ச் மாதம் முதல் கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால், பலத்த நஷ்டத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். தற்போது தியேட்டர்களைத் திறந்தும்கூட எந்தப் படமும் அதிக அளவுக்கு ஓடவில்லை. எதிர்பார்த்த கூட்டமும் தியேட்டருக்கு வரவில்லை. திறந்த வேகத்தில் பாதிக்குப் பாதி தியேட்டர்கள் மூடப்பட்டன.

இந்த நேரத்தில் வரும் பொங்கல் பண்டிகை தினத்தில் மாஸ்டர்’ படமும், ‘ஈஸ்வரன்’ படமும் வெளியாகவிருப்பது அவர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்திருக்கிறது.

அதே நேரம் ‘மாஸ்டர்’ படத்தின் வியாபாரம் தியேட்டர்களை கட்டுப்படுத்துவதுபோல அமைந்துவிட்டது என்பது உண்மைதான்.

“மாஸ்டர்’ படத்தை பொங்கலுக்கு கொண்டு வருவதாக இருந்தால் ‘மாஸ்டர்’ படம் மட்டுமே வெளிவர வேண்டும்…” என்ற கோரிக்கையை அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் முன்பாக முன் வைத்தனர்.

“தியேட்டர்களில் 50 சதவிகிதம் டிக்கெட்டுகளுக்குத்தான் அனுமதி. கொரோனா பீதி. கூட்டமும் வராமல் இருக்கிறது. இந்தச் சூழலில் மாஸ்டர்’ படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருப்பதால் வேறொரு பெரிய பட்ஜெட் படம் அந்த நேரத்தில் வெளியாகக் கூடாது…” என்ற நிபந்தனையை முன் வைத்தார்கள் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள்.

இதனை ஆட்சேபிக்கக்கூட தயாரிப்பாளர்கள் இல்லாமல் போனதும் மாஸ்டர்’ தயாரிப்பாளர்களுக்கு வசதியாக இருந்தது. ஆனால், ‘ஈஸ்வரன்’ படத்தின் தயாரிப்பாளர் தானும் பொங்கல் ரேஸில் கலந்து கொள்வதாக அறிவித்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்தப் பிரச்சினையில் தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் சமரசம் செய்ய முயன்றும் முடியாமல் போய்விட்டது. காரணம் ‘ஈஸ்வரன்’ படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளரின் பின்னணியில் சமீபத்தில் டி.ராஜேந்தர் உருவாக்கிய தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம் இருப்பதுதான்.

‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார் பாரதிராஜா தலைமையிலான நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர். இப்படி “இரண்டுவித தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் இதில் நீங்களே சமரசப் பேச்சினை நடத்திக் கொள்ளுங்கள்…” என்று விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் நழுவிக் கொண்டனர்.

ஆனால், “எந்த சமரசமும் இதில் இல்லை…” என்று ‘ஈஸ்வரன்’ படத் தயாரிப்பாளர் தரப்பில் உறுதியாகச் சொல்லிவிட்டதால் இந்தப் படம் பொங்கலுக்கு வருவது உறுதியானது.

தமிழகத்தில் 700-ல் இருந்து 800 தியேட்டர்கள்வரையிலும் ‘மாஸ்டர்’ ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் ‘ஈஸ்வரன்’ படம் 200-ல் இருந்து 300 தியேட்டர்கள்வரையிலும் வெளியாகும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

இந்த நேரத்தில் இந்த பொங்கல் ரேஸ் படங்கள் பற்றி சில தியேட்டர் உரிமையாளர்கள் சமூக வலைத்தளங்களில் பலவித செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் ‘நெல்லை ராம் முத்துராம்’ திரையரங்கின் ட்விட்டர் பக்கத்தில், “மாஸ்டர்’ திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலை இருமுறை திரையிட முடிவு செய்திருக்கிறோம்…” என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

அதேபோல் கோயம்பேடு ‘ரோகிணி’ தியேட்டரின் டுவிட்டர் பக்கத்தில், “மாஸ்டர்’ திருவிழாவை இப்போது ஆரம்பித்து விட்டோம்…” என்று குறிப்பிட்டுள்ளனர்.

குரோம்பேட்டையில் உள்ள ‘வெற்றி’ திரையரங்கின் உரிமையாளரான ராகேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஜனவரி 13-ம் தேதி ’மாஸ்டர்’ திரைப்படத்தையும், ஜனவரி 14-ம் தேதி ஈஸ்வரன்’ திரைப்படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக” பதிவு செய்தார்.

இந்த டிவிட்டர் செய்தியைப் பார்த்ததும் ‘மாஸ்டர்’ படத்தை சென்னை, செங்கல்பட்டு ஏரியாவில் விற்பனை செய்திருக்கும் பிரபல விநியோகஸ்தரான ‘படூர்’ ரமேஷ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராகேஷின் டிவிட்டருக்கு எதிர்ப்புத் தெரிவித்த படூர்’ ரமேஷ், “மாஸ்டர்’ படத்தை திரையிடும்போது, உங்களுக்கு ஈஸ்வரன்’ திரைப்படத்தை திரையிட அனுமதி கொடுத்தது யார்…? ’மாஸ்டர்’ திரைப்படத்தை வெற்றி காம்ப்ளக்ஸில் இரு திரையரங்குகளிலும் திரையிடவிட்டால் ’மாஸ்டர்’ திரைப்படம் வெற்றி தியேட்டருக்குக் கிடையாது…” என்று மிரட்டல் விடுக்கும் வகையில் ஒரு செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் சூடான வாக்குவாதங்கள் போய்க் கொண்டிருந்த நிலையில், திடீரென்று இருவருமே தங்களது டிவிட்டர் செய்தியை நீக்கிவிட்டனர்.

இது பற்றியறிந்த சிம்புவின் ரசிகர்கள், “ஒரு திரைப்படத்தைக் கொண்டு வருவதற்காக இன்னொரு திரைப்படத்திற்கு தியேட்டரே கொடுக்கக் கூடாது என்று சொல்வதெல்லாம் எந்த வகையில் நியாயம்…?” என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.

2019-ம் வருடம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 10-ம் தேதியன்று ‘விஸ்வாசம்’, ‘பேட்ட’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகி இரண்டுமே வெற்றி பெற்றது போல், இப்போது மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் தியேட்டர்களில் சம அளவு வாய்ப்பு அளித்து இரண்டையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நடுநிலையான சினிமா ரசிகர்களும் குறிப்பிட்டு வருகின்றனர்.

என்ன நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ.. அதுவே நடக்கும்..!

- Advertisement -

Read more

Local News