Saturday, April 13, 2024

சினிமா வரலாறு-18 எம்.எஸ்.வி.க்குத் தெரியாத ராகத்தைச் சொல்லிக் கொடுத்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனது 6-வது வயதிலேயே இசைப் பயணத்தைத் தொடங்கிய இசை மேதை மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணாவை, வெறுமனே ‘பாடகர்’ என்ற ஒரு கூட்டுக்குள் மட்டுமே  அடக்கிவிட முடியாது.   

மற்றவர்கள் எடுத்தாளாத பல இராகங்களை இயற்றிப் பாடியிருக்கும் இந்த இசைச் சக்ரவர்த்தி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.  

கர்னாடக இசை உலகின் ஜாம்பவானான இவர் 1930-ம் ஆண்டு ஜுலை மாதம் ஆறாம் தேதியன்று ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சங்கரகுப்தம் என்ற ஊரில் பிறந்தார். அந்த ஊரில் ஊற்றெடுத்த அந்த இசை நதி பின்னர் இசை வெள்ளமாக மாறி உலக நாடுகள் பலவற்றில் உள்ள இசை ரசிகர்களை தனது பரவசமூட்டும் இசையால் திக்கு முக்காடச் செய்தது என்பதுதான் உண்மை.

உலகின் பல்வேறு நாடுகளில் 25,000-க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ள பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்  400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர்.

இசைக் கருவிகள் பலவற்றை இசைக்கின்ற திறமையும் பெற்றிருந்த பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் திரைப்படத்திற்காக பாடிய முதல் பாடல் ‘சதி சாவித்திரி’ என்ற தெலுங்குப் படத்திலே இடம் பெற்றது. பின்னணிப் பாடகி லீலாவுடன் இணைந்து அந்தப் படத்திலே பாடினர் அவர்.

அதைத் தொடர்ந்து ‘திருவிளையாடல்’, ‘கலைக்கோவில்’, ‘கவிக்குயில்’, ‘நவரத்தினம்’ என்று பல திரைப்படங்களில் பாடியுள்ள இவரை திரைப்படத்தில் நடிக்க  வைத்த பெருமை ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்களையே சேரும். 

ஏவி.எம்.மின் தயாரிப்பான  ‘பக்த பிரகலாதா’ எனும் தெலுங்கு திரைப்படம்தான் இவர்  நடித்த முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் தமிழ், இந்தி, கன்னடம் என பிற மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னர் பல பட வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தன. ஆனால், அந்த வாய்ப்புகளை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

பின்னர் ‘சந்தினே செந்தின சிந்தூரம்’ என்னும் மலையாளத் திரைப்படத்தில் மட்டும் பாடகர் வேடத்திலேயே  நடித்திருந்தார்.

‘திருவிளையாடல்’ படத்தில் இடம் பெற்ற ‘ஒருநாள் போதுமா’ பாட்டை பாடியது இவர்தான் என்பதை நம் அனைவரும் அறிவோம். அந்தப் பாட்டை பாடுவதற்கான வாய்ப்பு முதலில் இவரைத் தேடி வரவில்லை. சீர்காழி கோவிந்தராஜனைத்தான் அந்தப்  பாடலைப் பாடச் சொல்லி கேட்டார் ‘திருவிளையாடல்’ படத்தின் இயக்குநரான ஏ.பி.நாகராஜன்.

ஆனால்,  சீர்காழி கோவிந்தராஜன்,  “என் பாட்டு எப்போதும் தோற்காது. தோற்கிற மாதிரியான பாடலை நான் பாட மாட்டேன்” என்று மறுத்துவிட்டார். அதன்  பின்னர்தான் அந்தப் பாடலை பாலமுரளி கிருஷ்ணாவை வைத்துப் பாட வைத்தார் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன். சீர்காழி கோவிந்தராஜன் அந்தப் பாடலை பாட மறுத்ததும், அவர் ஏன் பட மறுத்தார் என்பதும் பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்குத் தெரியும். நான் பாடுகின்ற பாடல் படத்திலே தோற்கின்ற பாடலாக இருந்தாலும், அது ஈசன் திருவிளையாட்டால் தோற்கடிக்கப்படுகின்ற பாட்டே தவிர தோற்கின்ற பாடல் அல்ல என்று சொல்லி அந்த பாடலைப் பாடிக் கொடுத்தார் பாலமுரளி கிருஷ்ணா.  

ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஒரே டப்பாங்குத்து பாடலான ‘குருவிக்காரன் பொஞ்சாதி’ என்ற பாடல் ஏபி.நாகராஜன் இயக்கிய ‘நவரத்தினம்’ என்ற படத்திலே இடம் பெற்றது.  அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல வயலின் கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதன்.

கர்னாடக இசை உலகில் பலரும் பழைய சம்பிரதாயங்களிலேயே உழண்டு கொண்டிருந்தபோது இசையிலே பல ஆராய்ச்சிகளை நடத்தி ஸித்தி, சுமுகம், ஸர்வஸ்ரீ, ஓம்காரி, கணபதி என்ற பெயர்களில் பல புதிய ராகங்களைப் படத்த இசை  பிரம்மன் பாலமுரளி கிருஷ்ணா.

அதனால்தான் இசை சம்பந்தமாக எந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தங்களது சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள  முதலில் பாலமுரளி கிருஷ்ணா அவர்களை  நாடுவதை  பல இசைக் கலைஞர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

‘அபூர்வ ராகங்கள்’ படத்திலே எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்த ‘அதிசய ராகம்’ என்ற பாடலுக்கான ராகத்தை விஸ்வநாதன் அவர்களுக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததுகூட பாலமுரளிகிருஷ்ணா அவர்கள்தான் என்பது திரையுலகில் மிகச் சிலரே அறிந்த ஒரு செய்தி. 

‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் பாடல் கம்போசிங்கின்போது அதுவரை யாரும் பயன்படுத்தாத ஒரு ராகத்திலே அந்தப் படத்திலே ஒரு பாட்டு இடம் பெற  வேண்டும் என்று இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கூறினார் படத்தின் இயக்குநரான கே.பாலச்சந்தர்.

அதாவது அந்த ராகம் அபூர்வ ராகமாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்திலே அந்த ராகத்தை அதுவரை யாரும் சினிமாவில் பயன்படுத்தி இருக்கவும் கூடாது என்பது அவரது எண்ணமாக இருந்தது.

அப்படி ஒரு ராகத்தை தீவிரமாக தேடிக் கொண்டிருந்த விஸ்வநாதன் தெலுங்கு புத்தாண்டு நிகழ்ச்சிக்காக வானொலியில் ஒரு பாடல் ஒலிப்பதிவு செய்ய அகில இந்திய வானொலி நிலையத்திற்கு சென்றார். அந்தப் பாடலை பாட இருந்தவர் பிரபல சங்கீத வித்வானான பாலமுரளி கிருஷ்ணா.  

அவரைப் பார்த்தவுடனேயே தான் கடந்த இரண்டு நாட்களாக மனதுக்குள் கேட்டுக் கொண்டு இருந்த கேள்விக்கு விடை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை விஸ்வநாதனுக்கு பிறந்தது.

 “இதுவரை இசையமைப்பாளர்கள் யாரும் பயன்படுத்தாத புதிய ராகம் ஒன்றை சொல்லுங்கள்” என்று  அவரிடம் கேட்டார் எம்.எஸ்.வி. 

“க ப நி என்று மூன்று ஸ்வரத்தில் ஒரு ராகம் இருக்கிறது. அந்த ராகத்திற்கு மகதி என்று பெயர்” என்று சொன்ன  பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் சொன்னதோடு நில்லாமல் அந்த ராகத்தைப் பாடியும் காட்டினார்.

அதைக் கேட்டவுடனே அளவில்லாத ஆனந்தம் அடைந்த எம்.எஸ்.விஸ்வநாதன் அந்த மேதை கூறிய அந்த ‘மகதி’ என்ற அபூர்வ ராகத்தில் அமைத்த பாடல்தான் ‘அதிசய ராகம்; ஆனந்த ராகம்’ என்று தொடங்கும் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் பாடல்.  ஜேசுதாஸ் அந்த  பாடலைப் பாடியிருந்தார்.

பாலமுரளி கிருஷ்ணாவை ஒரு இசைக் கடல் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இசைக் கடல் நம்மிடையே இன்று இல்லை என்றாலும், அவரது இசை அலைகள் என்றும் ஓயாது.

.

- Advertisement -

Read more

Local News