Wednesday, April 10, 2024

ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம்:  மாநகராட்சி நடவடிக்கை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் கடந்த 10.09.2023 ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடியிருந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும், பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டுச் சென்றதாகவும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும் இதுபோன்ற ஒரு மோசமான இசை நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை என்றும் சில ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதோடு கூட்டத்தில் பெண்கள் சிலருக்கு பாலியல் ரீதியான அத்துமீறல்கள் நடந்ததாக அதிர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இதுபோன்று ஏகப்பட்ட குளறுபடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட அது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், மன்னிப்பு கோரியது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான், டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள் தங்களது டிக்கெட் நகலைப் பகிரவும், குறைகள் குறித்து எங்கள் குழு பதிலளிக்கும் என்றும் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தார். பிறகு “நானே பலி ஆடாக மாறுகிறேன்” எனவும் இன்ஸ்டாகிராம் மூலம் வேதனை அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே ஏ.ஆர். ரஹ்மானை சிலர் விமர்சித்து வந்த நிலையில் அதைக் கண்டித்து ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்தி, குஷ்பு, சரத்குமார், தங்கர் பச்சான், சீமான் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டனர்.

இருப்பினும் ஏ.ஆர். ரஹ்மான் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளானதால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம், “ஏ.ஆர். ரஹ்மானுக்கும் இந்த குளறுபடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நடந்த குளறுபடிகளுக்கு நாங்களே பொறுப்பேற்கிறோம். இதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்கிறோம்” என ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. இதில் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹேமந்த் பேசியிருந்தார்.

இதையடுத்து டிக்கெட் இருந்தும் நிகழ்ச்சியைக் காண முடியாத ரசிகர்களுக்கு கட்டணத்தைத் திருப்பி அளிக்கும் பணி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு காவல்துறைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கியுள்ள கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதில் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும், 400க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் ஈடுபட வேண்டும் எனவும், காவல்துறை இந்த நிகழ்ச்சிக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தாம்பரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஏசிடிசி நிறுவனம் கேளிக்கை வரியை செலுத்தாததால் விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி சார்பில் அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இசை நிகழ்ச்சிக்கான கேளிக்கை வரியை அந்நிறுவனம் குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்தத் தவறினால் விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News