Friday, April 12, 2024

சின்னத்திரை சீரியல்களில் இருந்து விலகுவதாக ‘சித்தி’ ராதிகா திடீர் அறிவிப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகையான ராதிகா சரத்குமார் சின்னத்திரை சீரியல்களிலும், தற்போது நடித்து வரும் ‘சித்தி-2’ சீரியலில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் இன்றைக்கு வெளியிட்டுள்ள செய்தியில்….

இந்த நிமிடத்தில் இருந்து சந்தோஷமும், கவலையும் கலந்த மனநிலையில் ‘சித்தி-2’ மற்றும் மெகா சீரியல்களில் இருந்தும் நான் விடைபெறுகிறேன்.

இத்தனையாண்டுகளாக என்னுடன் இணைந்து தங்களது கடின உழைப்பை நல்கிய சன் தொலைக்காட்சியின்  தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் பை சொல்லிக் கொள்கிறேன்.

‘சித்தி-2’ மேலும் தொடர்ந்து ஒளிபரப்பாகும். கவின், வெண்பா, யாழினி மூவருக்கும் எனது வாழ்த்துகள். எனக்கும் ராடான் நிறுவனத்திற்கும் தொடர்ந்து ஆதரவளித்து வந்த எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் எனது மானசீக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கென்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்ததில், நடிகை ராதிகா இனிமேல் முழு மூச்சாக அரசியலில் இறங்கப் போவதாகவும் அதன் காரணமாகவே அவர் சீரியல்களில் இருந்து விலகுவதாக அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் சரத்குமார் தலைவராக இருக்கும் சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் முன்னோட்டக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தனது கணவர் சரத்குமாருடன் சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார் நடிகை ராதிகா.

இந்தச் சுற்றுப்பயணத்தின்போதுதான் ஓரிடத்தில் பேசும்போது தான் இனிமேல் முழுமையாக அரசியலில் களம் இறங்கப் போவதாக அறிவித்தார் ராதிகா. அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு சின்னத்திரை சீரியல்களில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ராதிகா சமத்துவ மக்கள் கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பிலும் மகளிரணியின் தலைவியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது கட்சிக்காக சரத்குமார் 10 தொகுதிகளைக் கேட்டு வருகிறார். அதில் சரத்குமார் தனக்காக நாங்குநேரி தொகுதியையும், ராதிகாவுக்காக சென்னையில் வேளச்சேரி தொகுதியையும் கேட்டிருக்கிறாராம்.

எப்படியோ, இந்த வருட சட்டமன்றத் தேர்தலில் அரசியல் புள்ளிகளின் மோதல்களைவிடவும் சினிமா புள்ளிகளின் மோதல்தான் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News