Thursday, April 11, 2024

யசோதா – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்ற மாதம் தமிழகத்தில் பல்வேறு தரப்பினரையும்  என்னது.. யார்.. எப்படி.. இது சட்ட ரீதியானதுதானா.. தப்பில்லையா.. என்றெல்லாம் பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்குள் கொண்டு போய் தள்ளியது ‘வாடகைத் தாய்’ விவகாரம்.

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் திடீரென்று வாடகைத் தாய் மூலமாக தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதாக அறிவித்ததையடுத்து, “இந்த வாடகைத் தாய் முறை என்றால் என்ன?” என்பது பற்றி பல்வேறு ரூபங்களில் தேடுதல்கள் தொடர்ந்தன.

அந்த வாடகை தாய் விவகாரத்தை மையக் கருத்தாக வைத்துத்தான் இந்த யசோதா’ படமும் உருவாகியுள்ளது. ஆனால் இது முதல் முறையல்ல.. ஏற்கெனவே 1980-ம் ஆண்டு மே 14-ம் தேதியன்று வெளியான தமிழ்த் திரைப்படமான ‘அவன் அவள் அது’ என்ற படம்தான் இந்த வாடகைத் தாய் விஷயத்தை முதன்முதலாக திரையில் வெளிப்படுத்திய படமாகும்.

இத்திரைப்படம் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய ‘ஒரு சிங்கம் முயலாகிறது’ என்ற நாவலின் திரை வடிவமாக்கும். இந்தப் படத்தில் சிவக்குமாரும், லட்சுமியும் தம்பதிகளாக நடித்திருந்தனர். இவர்களுக்கு வாடகைத் தாய் முறையில் குழந்தையை பெற்றுத் தர வரும் பெண்ணாக நடிகை ஸ்ரீப்ரியா நடித்திருந்தார். தமிழ்த் திரையுலகத்தின் மூத்தத் தயாரிப்பாளரும், இயக்குநருமான முக்தா வி.சீனிவாசன், இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்கியிருந்தார்.

தற்போது உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் இந்த வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுத் தருவதற்கு சட்டப்பூர்வமான அனுமதியுண்டு. இந்தியாவிலும் சில, பல நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளார்கள். இதற்காகவே இந்தியாவின் பல நகரங்களில் இந்த வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றெடுத்துக் கொடுப்பதற்கென்றே பல வர்த்தக மையங்களும் இருக்கின்றன.

இந்த வாடகைத் தாய் முறையில் சமீப ஆண்டுகளில் நடந்து வரும் சில மோசடிகளையும், சட்ட விரோதச் செயல்களையும் வெளிக்காட்டும் படமாகத்தான் இந்த ‘யசோதா’ படம் உருவாகியுள்ளது. ‘யசோதா’ என்று தலைப்பு வைத்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. மகாபாரத்தில் கிருஷ்ணரின் வளர்ப்புத் தாயின் பெயர் ‘யசோதா’. அதனால்தான் இந்த ‘வாடகைத் தாய்’ படத்தின் நாயகியின் பெயரும் ‘யசோதா’வாம். பொருத்தம்தான்.!

நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் சமந்தா, தன் தங்கையின் ஆபரேஷன் செலவுக்காக பணத்திற்கு அல்லாடுகிறார். அந்த நேரத்தில்தான் குழந்தைகள் இல்லாத பணக்கார தம்பதிகளுக்கு வாடகைத் தாயாக கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொடுத்தால் லட்சங்களில் பணம் கிடைக்கும் என்பதை அறிகிறார் சமந்தா.

தனது தங்கையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனது கர்ப்பப் பையை வாடகைக்குவிட முடிவு செய்கிறார் சமந்தா. இது மாதிரியான வாடகைத் தாய்மார்களுக்காக வரலட்சுமி சரத்குமார் நடத்தும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் சமந்தாவுக்கு, அங்கு அவருக்கு அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையில் பிரபலமான தொழிலதிபர் ஒருவர் பிரபலமான மாடலிங் பெண்ணை தனது எஸ்டேட்டுக்கு அழைத்து செல்கிறார். அவர்கள் செல்லும் செல்லும் கார் விபத்துக்குள்ளாகி இருவரும் இறக்கின்றனர். போலீஸ் விசாரணையில் அது விபத்தல்ல; திட்டமிட்ட கொலை என்று தெரிய வருகிறது. உயர் போலீஸ் அதிகாரியான முரளி சர்மாவின் உத்தரவுபடி போலீஸ் அதிகாரிகளான சம்பத்ராஜ், மற்றும் சத்ரு இருவரும் கொலையாளிகளை தேடத் துவங்குகின்றனர்..!

இதே நேரம் சிகிச்சை மூலமாக தன் வயிற்றில் கருவை சுமந்திருக்கும் நிலையில் வரலட்சுமி சரத்குமாரின் மருத்துவமனையில் தங்கியிருக்கிறார் சமந்தா. அந்த மருத்துவமனையில் சமந்தாவைப் போன்ற பல வாடகைத் தாய்மார்களும் இருக்கிறார்கள். இவர்களில் சமந்தாவுடன் நன்றாகப் பேசிப் பழகிய நிறை மாத கர்ப்பிணியான பிரியங்கா சர்மா பிரசவ நேரத்தில் இறந்து போகிறார். மேலும் அவரது குழந்தையும் வயிற்றுக்குள்ளேயே இறந்து விட்டது என்று சமந்தாவிடம், வரலட்சுமி சரத்குமார் சொல்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் சமந்தா இது குறித்து சந்தேகப்படுகிறார். அந்த மருத்துவமனையில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் ரகசிய அறைக்கு சமந்தா சென்று பார்க்க.. அங்கே பிரியங்கா சர்மா உட்பட பல கர்ப்பிணி பெண்கள் பிணமாக இறந்து கிடக்கின்றனர். மேலும், இறந்து போன குழந்தைகளின் சிசுக்கள் பதப்பட்ட நிலையில் இருப்பதையும் பார்க்கிறார்.

வரலட்சுமி இந்த மருத்துவமனையின் மூலமாக வாடகைத் தாய்மார்களுக்கு சிகிச்சையளிப்பதுபோல மருத்துவத் துறையின் வேறொரு ரகசிய வேலையைச் செய்வதாக சமந்தாவுக்குத் தோன்றுகிறது. அடுத்து நடந்தது என்ன..? உண்மையில் இந்த மருத்துவமனையை வரலட்சுமி சரத்குமார் நடத்துவதற்கான நோக்கம்தான் என்ன..? போலீஸ் அதிகாரி சத்ரு தேடிய கொலையாளிகள் கிடைத்தார்களா..? அந்தக் கொலைக்கும் இந்த வாடகைத் தாய் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம்..? மருத்துவமனையில் இறந்து போன குழந்தை சிசுக்கள் பதப்படுத்தப்படுவது ஏன்? மருத்துவமனையில் நடக்கும் இந்த மர்மங்களின் பின்னணியை சமந்தா கண்டுபிடித்தாரா..? இல்லையா..? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் படம்தான் இந்த ‘யசோதா’ திரைப்படம்.

கதையின் நாயகி யசோதா’வாக நடித்திருக்கும் சமந்தா ஒட்டு மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார். தங்கை மீது பாசம் கொண்ட அக்காவாகவும்.. தங்கையின் உயிரைக் காப்பாற்ற வேண்டி தான் கர்ப்பிணியாக முடிவெடுத்து அந்தக் கஷ்டத்தை அனுபவிப்பதும்… ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடி நாயகியாகவும், படம் முழுவதும் நடிப்பில் ஜொலித்திருக்கிறார்..!

சமந்தாவிற்கு இணையான கதாபாத்திரத்தில் அழகான வில்லியாக வரலட்சுமி சரத்குமார் தனது சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். அதிலேயும் கைகளைக் குறுக்கேக் கட்டிக் கொண்டு தலையை ஒரு பக்கமாக சாய்த்துக் கொண்டு அவர் காட்டும் அலட்சிய பாவனை.. படு ஜோர்..! வரலட்சுமியின் காதலனாக உன்னி முகுந்தன், போலீஸ் அதிகாரிகளான சத்ரு, சம்பத் ராஜ் என்று மற்றைய முக்கியக் கதாபாத்திரங்களும் தங்களுக்கான நடிப்பை நல்முறையில் காட்டியிருக்கிறார்கள்.

முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ஒளிப்பதிவாளர் சுகுமாரின் ஒளிப்பதிவு இது ஹாலிவுட் படமா என்று யோசிக்க வைத்திருக்கிறது. பல்வேறு எமோஷன்களில் படம் நகரும்போதெல்லாம் ஒளிப்பதிவும் அதற்கேற்றாற்போல் நமது பார்வையையும் சிதறடிக்காத வண்ணம் படமாகியிருக்கிறது. பாராட்டுக்கள். மணி ஷர்மாவின் இசையில் பாடல்கள் வழக்கம்போல சுமார் ரகம் என்றாலும் பின்னணி இசை அதைவிட சிறப்பாக அமைந்துள்ளது.

வாடகைத் தாய் என்ற தொழிலுக்குப் பின்னால் இருக்கும் சுரண்டல், திருட்டுத்தனம், இவற்றை வெளிப்படையாகப் போட்டுட்டைத்திருக்கிறார்கள். இதற்காக ஏ டூ இஸட்வரையிலும் இது பற்றித் தெரிந்து வைத்துக் கொண்டுதான் இயக்குநர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இதற்காகவே அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்..!

இத்துறையில் நடக்கும் தில்லு முல்லுகளையும், அநியாயங்களையும், சட்ட விரோதங்களையும் படிப்படியாக யசோதாவின் மூலமாக நமக்குக் கடத்துவதை  ஒரு சுவாரசியமான திரைக்கதையில் த்ரில்லிங்கோடு கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர்கள். வேகமான திரைக்கதையில், கிளைமாக்சில் யாரும் யூகிக்க முடியாத திருப்பு முனையாக சமந்தாவின் ‘யசோதா’ கதாபாத்திரம் அமைந்திருப்பதும், அனைவரும் ரசிக்கும்விதமாக ஒரு க்ரைம் த்ரில்லர் கலந்த, அதிரடி ஆக்க்ஷன் படமாகவும் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர்கள் ஹரி – ஹரிஷ்.

லாஜிக் இல்லாத காட்சிகள் பல இருக்கின்றன என்றாலும், இத்திரைப்படம் சொல்ல வந்த விஷயத்துக்காக அவற்றைப் பொறுத்துக் கொண்டு நல்லவைகளை நாம் வாழ்த்துவோம். பாராட்டுவோம்…!

RATING : 3.5 / 5

- Advertisement -

Read more

Local News