Saturday, April 13, 2024

VPF பிரச்சினை – முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கொரோனா லாக் டவுனால் கிட்டத்தட்ட 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்கள் இன்றைக்கு திறக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், புதிய தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

காரணம், “புதிய படங்களை நாங்கள் திரையிட மாட்டோம்” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து அறிவித்த முடிவுதான்.

“சினிமா தியேட்டர்களில் படங்களை வெளியிடும் புரொஜெக்டருக்கான கட்டணமாக இதுவரையிலும் கோடிக்கணக்கான பணத்தை தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு கொடுத்திருப்பதால் இனிமேல் அந்தத் கட்டணத்தை நாங்கள் தர மாட்டோம்…” என்று தயாரிப்பாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்கள்.

ஆனால், “இது திரையீட்டுக்கான கட்டணம்தானே ஒழிய.. புரொஜெக்டருக்கான கட்டணம் இல்லை…” என்பது திரையரங்கு உரிமையாளர்களின் வாதம்.

இந்த முடிவுறாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கடந்த சில நாட்களாக திரையரங்கு உரிமையாளர்கள், கியூப் நிறுவனம், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது “வெளிநாடுகளில் ஹாலிவுட் படங்களுக்கு வி.பி.எஃப். கட்டணம் கிடையாது. ஆனால், இங்கே மட்டும் கியூப்புக்கு நாங்கள் ஏன் பணம் கட்ட வேண்டும்..?” என்று தயாரிப்பாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.

இதற்குப் பதிலளித்த தியேட்டர்காரர்கள், “அப்போ ஹாலிவுட் படங்களுக்குத் தருவதுபோல நாம் பங்கு பிரித்துக் கொள்ளும் பெர்சேண்ட்டேஜை வைத்துக் கொள்வோமா..?” என்று எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்கள். ஆனால், இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.

இதற்கிடையில் கியூப் நிறுவனம் தனது தற்போதைய கட்டணத்தில் இருந்து 50 சதவிகிதத்தை தள்ளுபடி செய்வதாக இறங்கி வந்தது. இதையும் தியேட்டர்காரர்கள் 60 சதவிகிதமாக்கச் சொல்ல அதையும் கியூப் ஏற்றுக் கொண்டது. “இதுவும் டிசம்பர் 31-ம் தேதிவரையிலுமே…” என்று சொன்னார்கள் கியூப் நிறுவனத்தார்.

ஆனால், இதனை தயாரிப்பாளர்கள் ஏற்க மறுத்து “அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரையிலும் வேண்டும்…” என்றார்கள். இதனை தியேட்டர்காரர்களும், கியூப் நிறுவனத்தினரும் ஏற்றுக் கொண்டாலும் தயாரிப்பாளர்கள் மேலும் ஒரு கோரிக்கை வைத்தார்கள்.

“அந்த மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு நாங்கள் இந்தக் கட்டணத்தைக் கட்டவே மாட்டோம். இதை ஒரு நிபந்தனையாக வைக்கிறோம்…” என்றார்கள். ஆனால், இதனை கியூப் நிறுவனமும், தியேட்டர் உரிமையாளர்களும் ஏற்க மறுத்துவிட்டார்கள்.

பேச்சுவார்த்தையின் இன்னொரு கட்டத்தில், “தியேட்டர் உரிமையாளர்களே வி.பி.எஃப். கட்டணத்தை கட்டிக் கொள்ளட்டும். படத்தைத் திரையீட்டு முடிந்த பிறகு தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஷேர் தொகையில் அந்தப் பணத்தை அவர்கள் கழித்துக் கொள்ளட்டும்…” என்று தயாரிப்பாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

“அப்படியென்றால் எந்தவொரு பெரிய படத்திற்கும் தியேட்டர்காரர்களிடமிருந்து தயாரிப்பாளர்கள் முன் பணம் பெறக் கூடாது.. இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொண்டால் நாங்கள் வி.பி.எஃப். கட்டணத்தைக் கட்டத் தயார்…” என்று தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இதனை தயாரிப்பாளர்கள் ஏற்காததால் இந்த வாதமும் தோல்வியாகிவிட்டது.

கடைசியாக இந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப்படாமல் முறிந்து போனது.

இதையடுத்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் “எங்களது சங்கம் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியும் நமது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பதால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்வரையிலும் எங்களது சங்க உறுப்பினர்களின் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்தது..!

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக இன்று காலை கியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வி.பி.எஃப். கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஆனாலும், இந்தச் சலுகை இந்த நவம்பர் மாதம்வரையிலும்தான் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிபந்தனையை தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை.

இந்த நிலையில் நேற்று கோவில்பட்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ, “தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும். புதிய திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என்றே இந்த அரசு விரும்புகிறது. வி.பி.எஃப். பிரச்சினையில் அரசு தலையிட வேண்டிய கட்டாயம் இருந்தால் நிச்சயமாக சமாதானப் பேச்சுவார்த்தையை அரசு முன்னின்று நடத்தும்..” என்று சொல்லியிருக்கிறார்.

ஆக, இனிமேல் கோட்டையில் நடைபெறப் போகும் பேச்சுவார்த்தையில்தான் இந்த வி.பி.எஃப். பிரச்சினைக்கு ஒரு முடிவு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

Read more

Local News