Friday, April 12, 2024

விநோயத சித்தம்- விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘நான்’ என்ற ஆணவத்தை அழியச் செய்யும் ஓர் அற்புத படைப்பு இந்த ‘விநோதய சித்தம்’. இயக்குநர் சமுத்திரக்கனி இயக்குநர் சிகரம் பாலசந்தரின் சிஷ்யன் என நிரூபித்து காட்டியிருக்கும் படம் என்றும் சொல்லலாம்.

“இந்த வீடே என்னால்தான் இயங்குகிறது. இந்த கம்பெனி நான் இல்லாவிட்டால் இல்லை…” என்று மார் தட்டிக் கொண்டு 24 மணி நேரமும் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களை நாம் நிறையச் சந்தித்து இருப்போம்.. ஏன் நாம்கூட அப்படியான மனிதர்கள்தான்.

இந்தப் படத்தின் நாயகன் தம்பி ராமையாவும் அப்படியான மனிதர்தான். தான் எடுக்கும் முடிவே சரி… தன்னால்தான் இங்கு இருப்பவற்றை சரியாக்க முடியும் என்ற நம்பிக்கை உடையவர். ஒரு நிமிட தாமதத்திற்குக்கூட ஓவர் சீன் போடும் பேர்வழி!

அப்படியான தம்பி ராமையாவிடம் காலன் வந்து,  “உன் டைம் முடிஞ்சி போச்சு வா” என்று அழைக்கிறான். “அய்யயோ நான் வந்துவிட்டால் என் குடும்பம், என் கம்பெனி எல்லாம் என்னவாகும்?” என்று துடிக்கிறார் தம்பி ராமையா. 

அதற்கு காலனாக வரும் சமுத்திரகனி, “நீ இல்லாவிட்டாலும் இங்கு எல்லாமே நடக்கும்” என்று சொல்ல… தம்பி ராமையா அதை மறுத்து  தனக்கு  எக்ஸ்ட்ரா டைம் கேட்கிறார். அந்த எக்ஸ்ட்ரா  நேரத்திற்குள் தான் நினைத்ததை எல்லாம் தம்பி ராமையா செய்து முடித்தாரா.? காலனின் கணக்கை தம்பி ராமையா எப்படி எதிர் கொண்டார்..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

இந்தப் படம் தம்பி ராமையாவிற்கு கிடைத்த ஒரு வாழ்க்கைப் பொக்கிசம்.. மிகத் திறம்பட நடித்திருக்கிறார். நடை, உடை, பாவனை என ப்ரேம் டூ ப்ரேம் கலக்கியுள்ளார்.

காலனாக வரும் சமுத்திரக்கனி கேரக்டரும் வலுவாக எழுதப்பட்டுள்ளதால் அவரும் அசத்தி இருக்கிறார். முனிஷ்காந்த் காமெடியனாக இல்லாமல் ஒரு வில்லத்தனம் நிறைந்த கேரக்டரில் நச்சென முத்திரைப் பதித்துள்ளார். சஞ்சிதா ஷெட்டி உள்பட படத்தில் நடித்துள்ள அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்திற்கு இசையும், ஒளிப்பதிவும் மிகவும் முக்கியம். அதை உணர்ந்து வெகு சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரமும், இசை அமைப்பாளர் சத்யாவும்.

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஷாட்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஷாட் க்ளைமாக்ஸ் ஷாட். அதை ஒரு வாழ்வியல் கவிதை எனலாம்.

அதேபோல் சத்யாவின் இசையொலியும் படம் முழுவது ஒரு புது உணர்வை தந்தபடியே இருக்கிறது.

சமுத்திரக்கனி பேசும் ஒவ்வொரு வசனமும் பேரர்த்தம் நிறைந்ததாக இருக்கிறது. வாழ்வை ப்ளான் பண்ணியெல்லாம் வாழ முடியாது. அது கூடவும் கூடாது. ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். பிறருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வாய்ப்பு நமக்கிருந்தால் கொடுத்தும் வாழ வேண்டும். நாம் கொடுப்பதுதான் நமக்கு திருப்பி வரும். என்பன போன்ற கருத்துக்கள் மனதில் ஆழமாக இறங்குகிறது சமுத்திரக்கனி திரை எழுத்து.

 பொதுவாக வாழ்வில் நடக்கும் சுவாரஸியமான சம்பவங்களைப் பற்றி பலரும் படம் எடுப்பார்கள். ஒட்டு மொத்தமாக ஒரு வாழ்வையே வாழ்வின் பயன் & மற்றும் பலன்களையே கதையாக்கி ஒரு நல்ல படைப்பாக்கி இருக்கிறார் சமுத்திரக்கனி.

உளவியல், வாழ்வியல் என படம் இருந்தாலும் அவற்றை எல்லாருக்கும் பிடித்த வகையிலும் புரியும்படியும் எடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி.

இப்படி ஒரு  தத்துவார்த்த படத்தைப் பார்த்து எத்தனை நாளாச்சு என்ற எண்ணம் படம் முடிந்ததும் நம் மனதில் தோன்றும். அதுதான் இந்த விநோதய சித்தம்’ படத்தின் ஆகப் பெரும் வெற்றி..! 

இப்படியொரு படைப்பைத் தந்த இயக்குநர் சமுத்திரக்கனிக்கு சமுத்திரம் அளவிலான நன்றிகள்!

RATINGS : 4 / 5

- Advertisement -

Read more

Local News