Friday, April 12, 2024

“ராவணனால் கெடுக்க முடியாத சீதையை ஆனந்த்ராஜ் கெடுத்தார்” – வில்லத்தனத்துக்கு ஒரு விளம்பரம்…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்ச் சினிமாவில் 35 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடித்து வருபவர் நடிகர் ஆனந்த்ராஜ். சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் வில்லனாகவே பெரிதும் அறியப்பட்டவர் ஆனந்த்ராஜ்.

தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் ரேப் செய்யும் வில்லன் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்திருந்ததால் ‘ரேப் ஸ்பெஷலிஸ்ட்’ என்றே பெயர் எடுத்திருந்தார் ஆனந்த்ராஜ். ஆனால், அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதுதான் தனக்கு மிகவும் சிரமமாக இருந்ததாகச் சொல்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழச்சிக்கு பேட்டியளிக்கும்போது இது தொடர்பான சில சுவாரஸ்யமான சம்பவங்களைச் சொல்லியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.

அவர் அளித்துள்ள பேட்டியில், “என்கிட்ட எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. பாண்டிச்சேரில பொறந்து, வளர்ந்து வந்திருந்தாலும் சிகரெட், மது என்ற பழக்கமே என்னிடம் இல்லை. திடீர்ன்னு வில்லனாக்கி நடிக்க வைச்சதால் இந்த ரேப் சீன்ல நடிக்கும்போது மட்டும் நமக்கு கை, காலெல்லாம் டான்ஸ் ஆடும்.

1990-ல் ‘பெரிய இடத்துப் பிள்ளை’ன்னு ஒரு படத்துல நடிச்சேன். அந்தப் படத்துல தூர்தர்ஷன்ல வந்த ‘ராமாயணம்’ தொடரில் சீதையாக நடித்த தீபிகாவும் ஒரு ஹீரோயினா நடிச்சாங்க.

கதைப்படி நான் அவங்களோட கணவன். அவங்களை கற்பழிச்சிட்டு பிள்ளையைக் கொடுத்திட்டு ஓடிருப்பேன். அந்தப் பிள்ளையை அர்ஜூன் எடுத்து வளர்ப்பார். இதுதான் கதை.

இந்தப் படத்துல நான் நடிச்ச ரேப் சீனுக்கு அப்போது தினத்தந்தில ஒரு விளம்பரம் கொடுத்தாங்க. அதுல “ராவணனால் கெடுக்க முடியாத சீதையை ஆனந்த்ராஜ் கெடுத்தார்” என்று எழுதியிருந்தார்கள். இப்படியொரு கொடூரமான விளம்பரத்தை அதுக்கப்புறம் நான் பார்த்ததே இல்லை.

இதேமாதிரி ‘என் தங்கச்சி படிச்சவ’ படத்துல ஒரு சீன் இருக்கும். மாட்டு வண்டில ரூபிணியோட அண்ணனை கட்டிப் போட்டிருப்பாங்க. அந்த வண்டியோட முன் பக்கமா நின்னு ரூபிணி கடிவாளத்தைப் பிடிச்சிட்டிருப்பாங்க. அப்போ நான் வில்லத்தனமா பேசிக்கிட்டே அவங்க வயித்தைத் தடவணும். அப்போ அவங்க கையை விட்டுட்டாங்கன்னு அவங்க அண்ணன் செத்துருவான்.. இப்படியொரு சீன் வைச்சிருந்தார் வாசு ஸார்.

எனக்கு அதுல நடிக்க முதல்ல பயம். “வேண்டாமே ஸார்”ன்னு சொல்லி பார்த்தேன். வாசு சார் கேக்கலை. “சீன் வைச்சாச்சு நடி”ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. “ஸ்டார்ட் கேமிரா ஆக்சன்”னு சொல்லிட்டாரு. எனக்குக் கையெல்லாம் நடுங்குது. கை போகவே மாட்டேங்குது.

கேமிராமேன் தயாளன் ஓடி வந்து என்னைத் திட்டினாரு.. “பிலிமை வேஸ்ட் பண்ணாத.. ச்சும்மா வைச்சுத் தடவிரு”ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. எனக்கு தயக்கமோ தயக்கம். அப்படியே என்னமோ செஞ்சேன்.. அதையே குளோஸப் ஷாட்.. லாங் ஷாட்டுன்னு மாத்தி, மாத்தி எடுத்தாங்க.. ரூபிணியைவிட நான்தான் அந்த சீனப்போ டயர்டாயிட்டேன்.

இதே படத்தை தெலுங்குல எடுத்தப்ப அங்கேயும் நான்தான் வில்லன். அங்க விஜயசாந்தி. அப்பவும் எனக்கு கை வர மாட்டேங்குது. டைரக்டர் திட்டுறாரு.. விஜயசாந்தி என்கிட்ட “ஒரே ஷாட்ல நடிச்சிருங்க ஸார்”ன்னு சொல்றாங்க. எனக்கு கை நடுங்குது. முடியல.. நடுங்கிக்கிட்டே கையை அப்படி, இப்படி வைச்சுட்டேன்.. விஜயசாந்தி சிரிச்சுக்கிட்டே ஓடிட்டாங்க..

அப்புறம் ‘ஜல்லிக்கட்டுக் காளை’ படத்துல கனகாவை ரேப் பண்ற மாதிரி சீன். அப்போதான் ஸ்டெடி கேமிரா புதுசா வந்த சமயம். அதைக் கையில வைச்சுக்கிட்டு கனகா பின்னாடியே அவரை விரட்டிட்டுப் போய் பெட்டுல தள்ளிவிடுறதுதான் காட்சி. அதுக்கப்புறம் ரேப் பண்ணணும். பெட்ல தள்ளிவிட்டு வசனத்தை பேசிட்டு  “தள்ளிப் படும்மா”ன்னு சொல்லிட்டேன். கனகாவும் தள்ளிருச்சு.. டைரக்டர் மணிவாசகம் ஸார் தலைல அடிச்சுக்கிட்டாரு. மொத்த யுனிட்டும் சிரிச்சிருச்சு. இப்படித்தான் நம்ம வில்லத்தனம் காமெடில முடிஞ்சிருக்கு..

இயக்குநர் பில்லா கிருஷ்ணமூர்த்தி ஸார் டைரக்டர் செஞ்ச “தாய்ப் பாசம்” படத்துல ஒரு சீன். ரூபிணியை ரேப் பண்ற மாதிரியிருக்கும். அதுல பாவாடையை கிழிக்கணும்ன்னு சொன்னாங்க. நான் ரூபிணிகிட்ட “பாவாடையைக் கிழிக்கிறதுக்குப் பதிலா லேசா பாவாடையே கீழே இழுக்குறேன். நீ கப்புன்னு பிடிச்சுக்க…” என்று சொன்னேன். ஸோ ஸ்வீட்டுன்னு சொன்னாங்க. ரேப் பண்றவன்ல “ஸோ ஸ்வீட்டு”ன்னு பேர் வாங்கினது நானாத்தான் இருப்பேன்.

கட்டக் கடைசீல ஒரு நாள் சென்சார் போர்டுலேயே கற்பழிப்பு காட்சிகளுக்கு தடை போட்ட பின்னாடிதான் ‘அப்பாடா  பொழைச்சோம்டா சாமி’ன்னு நான் மூச்சுவிட்டேன்..” என்று சொல்லிச் சிரிக்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.

- Advertisement -

Read more

Local News