Friday, April 12, 2024

வேட்டை நாய் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுரபி பிலிம்ஸ் மற்றும் தாய் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

ஆர்.கே.சுரேஷ்  கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் ராம்கி, சுபிக்ஷா, ரமா, நமோ நாராயணன், ஜோதிமணி, விஜய் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார். ராஜகுருசாமி பாடல்களை எழுதியுள்ளார். அறிமுக இயக்குநரான  ஜெய்சங்கர் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். நேரம் : 2 மணி 02 நிமிடங்கள்.

சிறு வயதிலேயே அம்மா, அப்பாவை இழந்து தனது அத்தை-மாமாவான ரமா-நமோ நாராயணன்  தம்பதியரின் வளர்ப்பில் வளர்ந்து வந்திருக்கிறார் படத்தின் ஹீரோவான ஆர்.கே.சுரேஷ். எந்த வேலைக்கும் போகாமல் அந்தப் பகுதியில் தாதாயிஸத்தை நடைமுறைப்படுத்தி வரும் நடிகர் ராம்கியிடம், அடிதடி செய்யும் ஆளாக இருக்கிறார் சுரேஷ்.

இவருக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து வைப்போம் என்ற எண்ணத்தில் பக்கத்து ஊருக்கு சென்று பெண் தேடுகிறார்கள் ரமா, நமோ கூட்டணி. போய்த் தங்கிய வீட்டிலேயே நாயகி சுபிக்சா 12-வது படிக்கும் மாணவியாக சுரேஷுக்கு அறிமுகமாகிறார்.

பார்த்தவுடன் காதலாகி சுபிக்சாவைத் திருமணம் செய்ய விரும்பி பெண் கேட்கிறார் சுரேஷ். முதலில் மறுக்கிறார்கள் அவரது குடும்பத்தினர். பின்பு பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்பு திருமணம் நடக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு சுரேஷ் அடிதடி வேலைக்குப் போவதை அறியும் சுபிக்சா, அந்த வேலைக்கு இனிமேல் போகக் கூடாது என்று தடுக்கிறார். மனைவி சொல்லைத் தட்ட முடியாத சுரேஷ் ராம்கியிடம் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்கிறார்.

இதே நேரம் தனக்கு அறிமுகமாகும் விஜய் கார்த்திக்கிடம் இணைந்து அவரது காய்கறி, பழ விற்பனையில் ஈடுபடுகிறார் சுரேஷ்.

இந்த நேரத்தில் தன்னிடமிருந்து விலகிச் சென்றதால் சுரேஷ் மீது கொலை வெறி கோபத்தில் இருக்கிறார் ராம்கி. அதே நேரம் முன்பு எப்போதோ நடந்த ஒரு கொலைக்காக சுரேஷை தீர்த்துக் கட்ட ஒரு கும்பல் முயற்சிக்கிறது. சுரேஷ் மீது பொறாமை கொண்ட உடன் இருக்கும் ஒரு நண்பனும் சுரேஷை கொலை செய்ய முயற்சிக்கிறான்.

இப்படி மூன்று புறமும் எதிரிகளால் சூழப்பட்டு வாழும் சுரேஷுக்கு கடைசியில் நான்காவது எதிரியாக தற்போது வேலை கொடுத்திருக்கும் விஜய் கார்த்திக்கே வர.. சுரேஷூக்கு நெருக்கடி அதிகமாகிறது.

இவர்களிடமிருந்து சுரேஷ் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் மீதமுள்ள திரைக்கதை.

அடியாள் கேரக்டருக்கு ஆர்.கே.சுரேஷ் கச்சிதமாகப் பொருந்துகிறார். அந்த உடற்கட்டும், முரட்டுத் தோற்றமும், கர்ண கொடூரமான முகம் இதற்கு உதவியாக இருக்கிறது. ஆனால் இதே முகத்தை வைத்துக் கொண்டு காதலிக்கவும் செய்யும்போது திரையில் அது உவப்பாக இருக்கிறது.

அடிதடி சண்டையில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் சுரேஷ். சண்டை இயக்குநரின் உதவியால் இந்தத் திறமையை வளர்த்துக் கொண்டே போகிறார் சுரேஷ். பாராட்டுக்கள்.

இடைவேளைக்குப் பின்னான சில காட்சிகளில் தன்னால் நடிக்கவும் முடியும் என்பதையும் காட்டியிருக்கிறார். இயக்குநரின் அதீத இயக்கத்தால் சில காட்சிகள் பாயாசத்திலேயே ஜீனியைக் கொட்டிய கதையாக திகட்டியிருக்கிறது. இதனால் சுரேஷின் நடிப்பும் கொஞ்சம் ஓவராகத் தெரிகிறது.

நாயகி சுபிக்சாவின் அழகான நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். கணவரை அடியாள் வேலைக்குப் போக வேண்டும் என்று தடுப்பதாகட்டும்.. கருவைக் கலைக்க முயற்சிப்பதாகட்டும்.. நேர்மையாக உழைத்துச் சம்பாதித்துக்  காசு கொண்டு வந்தால் அதில் சமைத்து சாப்பிடத் தயாராக இருப்பதாக சொல்லும் அந்தக் கோபத்திலும் அழகான நடிப்பைக் காண்பித்திருக்கிறார் நாயகி சுபிக்சா.

இன்னொரு பக்கம் அத்தையாக நடித்திருக்கும் ரமா பொறுப்பான மனைவி.. அத்தை.. என்று இரண்டு பக்கமும் பேலன்ஸ் செய்து நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பிலும், டயலாக் டெலிவரியிலுமே படம் இடைவேளைக்கு முன்பு கச்சிதமாக நகர்கிறது.

இன்னொரு பக்கம் இவரது கணவராக நடித்திருக்கும் நமோ நாராயணன் தன் பங்குக்குக் கொஞ்சம் சிரிக்கவும் வைத்திருக்கிறார். சிறப்பான நடிப்பையும் காண்பித்திருக்கிறார்.

நடிகர் ராம்கி லோக்கல் தாதாவாக அவ்வப்போது கோபத்தைக் காட்டுபவராக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்புப் பயிற்சியும் அவருக்குப் பெரிதும் உதவியிருக்கிறது.

கேரளத்து இளைஞராக நடித்திருக்கும் விஜய் கார்த்திக்கும் தனது மென்மையான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். நாயகியின் அம்மாவான ரேகாவும் தனக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சின்படி மிக இயல்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். “அடுத்தத் தடவை வரும்போது இது மாதிரி அரிசியெல்லாம் கேட்காத…” என்று பொறுப்புடன் சொல்லும் காட்சியில் இயக்குநர் எதிர்பார்த்த அந்த பீலிங்கை நாம் உணர முடிகிறது.

கதை நடைபெறும் இடம் கொடைக்கானல் என்றாலும் அதிகமாக நகரப் பகுதிகளைக் காட்டாமல் வீடுகள் இருக்கும் பகுதிகளிலேயே படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஈஸ்வரனின் ஒளிப்பதிவில் குறைவில்லை. ஆனால் இன்னமும் முனைப்பு காட்டியிந்திருந்தால் கொடைக்கானலின் முழு அழகையே காட்டியிருக்கலாம்.

இன்னொரு பக்கம் இசை பரவாயில்லை ரகம். ஆனால் பின்னணி இசை பாராட்டத்தக்கது. படத்தின் கதை, திரைக்கதையுடனேயே பயணிக்கும் அளவுக்குக் கச்சிதமாக இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

தாதாவிடம் அடியாளாக இருந்தவன் எப்படி திருந்துகிறான் என்பதை மையப் புள்ளியாகக் கொண்ட இத்திரைப்படம்… இடைவேளைக்குப் பின்பு மனைவியின் காதலனிடமிருந்து மனைவியை எப்படி மீட்கிறான் என்பதாகத் திசை திரும்பியதுதான் படத்தினால் ஏற்பட்ட குழப்பத்திற்குக் காரணம்.

இதை மட்டும் கொஞ்சம் கவனம் எடுத்து மாற்றியமைத்திருந்தால் படம் முழுவதும் ஒரே பேட்டர்னில் வெளிவந்திருக்கும். இப்போது முதல் பாதியில் ஒரு கதை.. இரண்டாம் பாதியில் இன்னொரு கதையாகவும் வந்திருப்பதால் படம் சூப்பர் என்றோ.. சிறப்பு என்றோ.. பார்க்க வேண்டிய திரைப்படம் என்றோ சொல்ல முடியவில்லை.

- Advertisement -

Read more

Local News