Friday, April 12, 2024

பழம் பெரும் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் காலமானார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல மலையாள திரைப்பட இயக்குநரான கே.எஸ்.சேதுமாதவன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 90.

தனது படைப்புகளுக்காக 10 தேசிய திரைப்பட விருதுகள், சிறந்த இயக்கத்திற்கான 4 விருதுகள் உட்பட 9 கேரள மாநில விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார் இயக்குநர் சேதுமாதவன்.

1962-ல் நடிகர் கமல்ஹாசனை மலையாளத்தில் ‘கண்ணும் காரலும்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சேது மாதவன்.  

சிவக்குமார் மற்றும் ராதா நடிப்பில் இவர் இயக்கிய ‘மறுபக்கம்’ என்ற தமிழ் திரைப்படம் 1991-ல் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.

கமலின் ‘நம்மவர்’, எம்.ஜி.ஆரின் ‘நாளை நமதே’, உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

அதோடு 2009-ம் ஆண்டு ஜே.சி.டேனியல் விருதையும் பெற்றார் இயக்குநர் சேது மாதவன்.

இயக்குநர் சேது மாதவனின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், “காலத்தால் அழியாத காவியங்களை திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்று முகம். மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர். தன் கலைச் சாதனைகளால் என்றென்றும் நினைவு கூறப்படுவார். என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் இயக்குநர் சேது மாதவனுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிவக்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அகில இந்திய அளவில் தங்கத் தாமரை விருது வென்ற முதல் தமிழ்ப் படமான “மறுபக்கம்” என்ற திரைக்காவியத்தை உருவாக்கியவர். இந்திரா பார்த்தசாரதி அவர்களின் குறு நாவலான “உச்சிவெயில்”தான் அந்தப் படத்தின் முலக்கதை, அதன் நாயகன் வேம்பு அய்யராக என்னை நடிக்க வைத்த மரியாதைக்குரிய இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் அவர்களின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு. அவர் ஆன்மா சாந்தியடைய திரையுலகின் சார்பில் வேண்டுகிறேன்..” என்றார்.

- Advertisement -

Read more

Local News