Friday, April 12, 2024

“உச்சி வகுந்தெடுத்து’ பாடல் எங்கேயிருந்து, எப்படி வந்தது..?”

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநரும், நடிகருமான விஜய் கிருஷ்ணராஜ் முதலில் நாடக கதை ஆசிரியராக திரையுலகத்திற்குள் கால் வைத்தவர். ‘இதயம்’, ‘கல்தூண்’ என்ற இரண்டு புகழ் பெற்ற நாடகங்களே அவரை தமிழ்த் திரையுலகத்திற்குள் கொண்டு வந்தன.

நடிகர் சிவக்குமாரின் 100-வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்கு இவர்தான் திரைக்கதை அமைத்திருந்தார். “அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே தமிழக கிராமங்களில் மக்கள் பாடிய நாடோடி பாட்டுக்கள், ஒப்பாரி பாட்டுக்கள், கூத்துக்களில் பாடப்பட்ட பாடல்கள்தான்…” என்கிறார் விஜய் கிருஷ்ணராஜ்.

இது குறித்து அவர் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், “நான் எழுதிய ‘கல்தூண்’ நாடகத்தைப் பார்க்க சிவக்குமார் வந்திருந்தார். அதைப் பார்த்துவிட்டு என்னை மிகவும் பாராட்டிய அவர், தன்னுடைய 100-வது படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்துக்கு திரைக்கதை எழுதித் தரச் சொன்னார். அதோடு அந்தப் படத்தில் ஒரு இணை இயக்குநராகவும் நான் பணியாற்றினேன். சில காட்சிகளில் நடித்தும் இருக்கிறேன்.

அந்தப் படத்தில் இடம் பெற்ற பல கிராமத்து சொலவடைகள் அனைத்தும் கிராமத்துப் பெண்கள் பேசும் பேச்சுக்கள்தான். அதில் பலவற்றை நடிகர் சிவக்குமாரின் அம்மாவே எங்களிடம் சொன்னது. அதையும் படத்தில் சேர்த்திருந்தோம்.

படத்தில் இருக்கும் ஒவ்வொரு பிரேமிலும் அந்தப் பகுதி மக்களின் வாழ்வியலையும் சேர்த்துதான் கொடுத்திருந்தோம். நான் அந்தப் படத்தில் கலை இயக்குநர் வேலையைக்கூட சேர்ந்து செய்திருந்தேன்.

அந்தப் படத்தில் இருக்கும் புகழ் பெற்ற பாடலான ‘உச்சி வகுந்தெடுத்து’ பாடல் கிராமங்களில் பெண்கள் பாடும் ஒப்பாரி பாடலில் இருந்துதான் உருவானது. அந்த இசைக்கு பாடல் வரிகளை எழுதும்போது நான் இளையராஜாவிடம் அந்த ஒப்பாரி பாடல் வரிகளைப் பாடிக் காட்டினேன்.

“பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க..”

“வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க..”

பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க..”

இப்படி இந்தப் பாடல்களைப் பாடிக் காட்டினேன்.

அப்போது அந்தப் பாடலை எழுத வந்த கவிஞர் புலமைப்பித்தன் இந்தப் பாடல்களை மிக லாவகமாக அந்தப் பாடலில் இணைத்துக் கொண்டார்.

இன்றுவரையிலும் அந்தப் பாடல் தமிழ்ச் சினிமாவில் ஒரு மறக்கவியலாத பாடலாக அமைந்திருக்கிறது..” என்றார்.

- Advertisement -

Read more

Local News