Friday, April 12, 2024

ட்ரிப் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

காமெடி, அட்வெஞ்சர், திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த ‘ட்ரிப்’  படத்தை Sai Film Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் A.விஸ்வநாதன் மற்றும் E.பிரவீன்குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் சுனைனா, யோகிபாபு, கருணாகரன், ‘மொட்டை’ ராஜேந்திரன், பிரவீன் குமார், V.J.சித்து, V.J.ராகேஷ், கல்லூரி வினோத், ராஜேஷ், சிவா, அதுல்யா சந்திரா, ல‌ஷ்மி ப்ரியா, சத்யா, மேக் மணி, சதீஷ், அருண் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஜி.உதயசங்கர், படத் தொகுப்பு – எஸ்.தீபக், துவாரக்நாத், இசை – சித்து குமார், கலை இயக்கம் – பாக்யராஜ், சண்டை இயக்கம் – டேஞ்சர் மணி, டி.ஐ. – அட்சல் மீடியா, வி.எஃப்.எக்ஸ். மேற்பார்வை – தேவா சத்யா, ஒப்பனை – ஏ.பி.முகம்மது, புகைப்படங்கள் – ஜி.கே., உடைகள் – பாலாஜி, உடை வடிவமைப்பு – நிவேதா ஜோஸப், டைட்டில் – விளம்பர டிசைன் – சபா டிஸைன்ஸ், நடன  இயக்கம் – தஸ்தா, பாடல்கள் – மோகன் ராஜன், கேஸ்டிங் இயக்குநர் – ஸ்வப்னா ராஜேஸ்வரி, ஒலிக் கலவை – ஜெய்சன் ஜோஸ், ஒலி வடிவமைப்பு – விஷ்ணு நம்பூதிரி, தயாரிப்பு நிர்வாகம் – தேனி தமிழ், அறந்தை பாலா, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா.

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

பேய்க் கதைகள். பிசாசு கதைகள், ஜாம்பி எனப்படும் மனிதர்களையே வேட்டையாடும் மனிதர்களின் கதைகள் என்று போய்க் கொண்டிருந்த தமிழ்ச் சினிமாவில் கொஞ்சம் ஜம்ப் செய்து மனித மாமிசத்தை சாப்பிடும் மனிதர்களின் கதையை இந்தப் படத்தில் உருவாக்கியிருக்கிறார்கள்.

சுனைனா உட்பல நண்பர்கள் பலரும் கொடைக்கானலுக்கு இன்பச் சுற்றுலா வருகிறார்கள்.

அதே நேரம் அதே கொடைக்கானல் பகுதியிலேயே வசிக்கும் கருணாகரனும், யோகிபாபுவும் காட்டுக்குள் இருக்கும் ஒரு பங்களாவிற்கு மராமத்து வேலை செய்ய வருகிறார்கள்.

இதே நேரம் மனிதர்களையே சாப்பிடும் 4 பேர் கொண்ட கும்பல் அந்தக் காட்டிற்கு வருபவர்களை நர வேட்டையாடுகிறார்கள்.

முதலில் கருணாகரனையும், யோகிபாபுவையும் கொலைகாரர்கள் என்று தவறாக நினைக்கிறார்கள் சுனைனா அண்ட் கோ. ஆனால் அது உண்மையில்லை என்று சுனைனா குரூப்பிற்குத் தெரிய வரும்போது மூன்றாவதாக நம்மையே வேட்டையாடும் ஒரு மிருகக் கும்பல் அங்கேயிருப்பது அவர்களுக்குத் தெரிகிறது.

அவர்களிடமிருந்து இவர்கள் அனைவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை.

யோகி பாபு, கருணாகரன் இருவரின் காம்பினேஷன்தான் படத்தில் பாதி நேரத்தை கடத்த உதவியிருக்கிறது. வீட்டுக்குள் நடக்கும் பல்வேறு காட்சிகளில் இவர்கள் இருவரின் டயலாக் டெலிவரியில் அடிக்கடி சிரிக்க முடிகிறது. “டிவி பார்க்குறியா.. பாரு..” என்று சுனைனாவிடம் யோகி பாபு சொல்லும் காட்சி உம்மணாம் மூஞ்சிகளைக்கூட சிரிக்க வைத்துவிடும்.

கருணாகரனும் தனது சரியான டயலாக் டெலிவரியால் சிரிக்க வைத்திருக்கிறார். நர மாமிச வேட்டையாளர்களை மிக எளிதாக காமெடியா செய்வதுபோல் பேசி சமாளிக்கும் காட்சிகளில் ஜமாய்த்திருக்கிறார்கள் இருவரும்.

சுனைனா படம் முழுவதும் டபுள் எக்ஸ் கவர்ச்சிக்காக ஒரு கை வைக்காத பனியனை அணிந்து கொண்டு பவனி வந்திருக்கிறார். படத்தில் இருப்பவர்களிலேயே நடிப்பைக் கணிசமான அளவுக்குக் கொடுத்திருப்பவர் அவர்தான். ஆனாலும், அவ்வப்போது மயங்கி விழுந்துவிடுவதைப் போல காட்சிகள் வைத்திருக்கத் தேவையில்லைதான். அதான் நன்றாக நடிக்கிறாரே.. பிறகென்ன..?

பிரவின்குமார், ஜெனிஃபர். லட்சுமி ப்ரியா என மற்றவர்களும் காட்சிகளை உணர்ந்து நடித்திருக்கின்றனர். பிரவின்குமார் மட்டும் அவ்வப்போது கோபப்பட்டு ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்க விட்டிருக்கிறார். வீட்டுக்குள் நடக்கும் குழு சண்டையில் செம காமெடியை கொணர்ந்திருக்கிறார் இயக்குநர். சண்டை இயக்குநருக்கு இதற்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டு..!

மாமிச வேட்டையாளர்களின் மேக்கப் கொடூரம். பயமுறுத்தலை அவர்களது முகமே காட்டியிருக்கிறது. சுனைனா டீமில் ஜெனீபரிடம் கடலை போடும் நடிகர் கவன ஈர்ப்புடன் நடித்திருக்கிறார்.

படத்தின் துவக்கத்திலேயே நம்பும்படியான ஒரு கதையைச் சொல்லி நர மாமிசம் சாப்பிடுபவர்கள் எப்படி அந்தக் காட்டில் உருவாகியிருக்கிறார்கள் என்பதைச் சொல்லிவிட்டதால் கடைசிவரையிலும் அந்த மாமிசம் சாப்பிடும் கோஷ்டியை நம்மால் ஒத்துக் கொள்ள முடிகிறது.

சுனைனா அண்ட் கோ., யோகி பாபு, கருணாகரன் கோஷ்டியை பார்த்து ஓடுவதும், இவர்கள் அவர்களை விரட்டுவதும்.. சுனைனா இவர்களிடம் தனியாக மாட்டிக் கொள்வதும் சுவையான திரைக்கதையாகவே இருக்கிறது.

ஆனால், அதன் பின்பு ஒவ்வொரு கொலையாக நடக்கும்போதும் மிக அலட்சியமாக “பாடியைத் தூக்கிப் போட்டுட்டு வேற வேலையைப் பாரு…” என்னும் ரீதியில் திரைக்கதையை அமைத்திருப்பது டோட்டலாக லாஜிக்கை டேமேஜ் செய்துவிட்டது.

அந்தப் பெரிய காட்டுப் பகுதியின் அருகில் போலீஸ் ஸ்டேஷனே இல்லை என்பது போலவும், இவர்கள் அவர்களிடத்தில் உதவி கேட்கவில்லை என்பதுபோலவும் சினிமாவுக்காகவே திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.

காட்டுக்குள்ளேயே படமாக்கப்பட்டிருந்தாலும் படம் போரடிக்காமல் செல்கிறது. காதல், டூயட்டுகளெல்லாம் இல்லாமல் இருப்பதினால் திரைக்கதையும் கொஞ்சம் விறுவிறுப்பாக அமைந்திருந்தது.

ஒளிப்பதிவாளர் உதயசங்கரின் கேமிரா அந்தக் காட்டின் பயங்கரத்தையும், காடுகளின் அழகையும் கச்சிதமாகப் படம் பிடித்திருக்கிறது. உயரமான அருவியும், வந்து கொட்டுகின்ற தண்ணீரின் போக்கும் கேமிராவில் பார்க்க அழகாய் இருக்கிறது. இந்த அழகுடனேயே காட்சிகளையும் சேர்த்திருப்பதால் படத்தின் ஒளிப்பதிவு சூப்பர் என்றே சொல்லலாம்.

சித்து குமாரின் பின்னணி இசை மட்டுமே சிறப்பு. திகில் காட்சிகளில் நிஜமான உணர்வைத் தரும் அளவுக்கு பின்னணி இசையில் பயமுறுத்தியிருக்கிறார். பாராட்டுக்கள்.

ரொம்பவும் நீளத்தைச் சேர்க்காமல் மிகக் குறுகிய நேரத்திலேயே படத்தை முடித்திருப்பதால் தலைவலி வராமல் எழுந்து வர வைத்திருக்கிறது இத்திரைப்படம்.

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் கதையை எந்த இடத்திலும் திசை திருப்பாமல் ஒரே கோட்டில் கதையை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது.

மாமிசம் திண்ணும் மனிதர்களின் கதை என்று நினைத்தாலே பயமறுத்தும் கதையை கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சீரியஸ் கலந்து ஒரு எண்ட்டெர்டெயின்மெண்ட் திரைப்படமாக உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

இந்த ட்ரிப் ஒரு முறை ட்ரிப் அடித்துப் பார்க்கக் கூடிய திரைப்படமாகத்தான் இருக்கிறது.


- Advertisement -

Read more

Local News