Friday, April 12, 2024

தீதும் நன்றும் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

NH சில்வர் ஸ்க்ரீன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் H. சார்லஸ் இம்மானுவெல் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ராசு. ரஞ்சித்தும், ஈசனும் நாயகர்களாக நடிக்க, நாயகிகளாக அபர்ணா பாலமுரளியும், லிஜோமோல் ஜோஸும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் இன்பா, சந்தீப் ராஜ், காலயன் சத்யா, கருணாகரன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – சி. சத்யா, பாடல்கள் – முத்தமிழ், ஒளிப்பதிவு – கெவின் ராஜ், படத் தொகுப்பு – ராசு ரஞ்சித், மக்கள் தொடர்பு – யுவராஜ்.

கூடா நட்பு கேடாய் முடியும் என்ற கருத்தாக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநரான ராசு. ரஞ்சித் இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ளார்.

மீன் மார்க்கெட்டில் வேலை செய்கிறார்கள் தமிழ் எனும் ஈசனும், சிவா எனும் ராசு. ரஞ்சித்தும். இடையிடையே, மாறன் எனும் சந்தீப் ராஜுடன் இணைந்து, முகமூடி அணிந்து சிறு சிறு கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தான் காதலித்த சுமதி எனும் அபர்ணா பாலமுரளியின் வீட்டிற்கே சென்று, நண்பன் சிவாவின் துணையுடன் சுமதியை அழைத்துக் கொண்டு வந்து திருமணம் செய்து கொள்கிறான் ஈசன்.

ஈசனுக்கும், தமிழ் எனும் லிஜோமோல் ஜோஸுடன் காதல் மலர்கிறது. லிஜோமோல் ஜோஸும் காதலுக்கு சம்மதம் தெரிவித்துவிடும் நிலையில், இன்னொரு கொள்ளைக்குத் திட்டம் தீட்டுகின்றனர் நண்பர்கள் மூவரும்.

கர்ப்பிணியான சுமதி, கணவன் ஈசனைக் கொள்ளையடிக்கப் போவதில் இருந்து தடுக்கிறாள். அப்படியும் மனைவி தூங்கியதும், டாஸ்மாக்கிற்கு முகமூடி அணிந்து சென்று கொள்ளையில் ஈடுபடுகின்றனர் நண்பர்கள்.

டாஸ்மாக்கில் பணத்தைத் திருடி விட்டு வெளியேற நினைக்கும்பொழுது, ரோந்துக்கு வரும் காவல்துறையினரிடம் சிக்குகின்றனர். தப்பியோட முயற்சி செய்கையில், ஈசனுக்குக் காலில் அடிபட, அவனைத் தூக்கிக் கொண்டு சிவா ஓடுகிறான். மாறனோ இவர்களைக் காப்பாற்றாமல் வாகனத்தில் ஏறி, தான் மட்டும் தப்பித்துக் கொள்கிறான்.

ஈசன் காவல்துறையிடம் சிக்கிக் கொள்ள, நண்பனை விட்டுப் பிரிய மனமில்லாத சிவாவும் சரணடைகிறான். காவல்துறை, ஈசன் வீட்டிற்குச் சென்று, அவனது வீட்டிலுள்ள ஆடம்பரப் பொருட்கள், நகைகள் என அனைத்தையும் அள்ளிக் கொண்டு வருகின்றனர்.

போதாக்குறைக்கு, ஈசன் தன் அம்மா நினைவாக மனைவிக்கு அணிவித்த செயினையும் பறிமுதல் செய்துகொள்ள, கர்ப்பிணியான சுமதி வேலைக்குச் சென்று சமாதிக்கும் அவலநிலை நேருகிறது.

தண்டனை முடிந்து சிறையில் இருந்து வரும் ஈசனை, சுமதி ஏற்க மறுக்கிறாள். இனியொருமுறை கொள்ளையில் ஈடுபடுவதில்லை என்று ஈசன் வாக்களித்த பின், குழந்தையைப் பார்க்க அனுமதிக்கிறாள்.

அந்தக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, சனுக்குப் பண நெருக்கடி ஏற்படுகிறது. ஓடிப் போன மாறன் மீண்டும் வந்து நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டு, கடைசியாக ஒரு கொள்ளையில் ஈடுபடலாம் எனக் கெஞ்சுகிறான். முதலில் மறுக்கும் ஈசன், குழந்தையின் நிலையை எண்ணி ஒப்புக் கொள்கிறான்.

கொள்ளையடிக்கப் போகும் இடத்தில், மாறன் ஒரு கொலையை செய்துவிட, ஈசனும் சிவாவும் ஸ்தம்பித்துப் போகின்றனர். அந்தக் கொலை, ஈசனையும் சிவாவையும் எங்குக் கொண்டு செல்கிறது என்பதுதான் படத்தின் கதை.

இப்படம், 2018-ல் தொடங்கி 2019-ல் முடிக்கப்பட்டுள்ளது. மிகுந்த சிரமத்திற்குப் பின்பு, இப்படத்தைத் தற்போதுதான் வெளியிட்டுள்ளனர். 2016-ல் வெளிவந்த ஃபஹத் ஃபாசிலின் ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தில், அபர்ணா முரளி மற்றும் லிஜோமோல் ஜோஸ் இருவரும் நடித்திருந்தனர்.

அந்தப் படத்தில் அவர்களது நடிப்பைப் பார்த்து வியந்த இயக்குநர் ராசு. ரஞ்சித், இந்தப் படத்தில் அவர்கள் இருவரையும் நடிக்க வைத்துள்ளார். அவரது எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும்விதமாக இருவருமே மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

வேறு பெரிய நடிகர்கள் யாருமில்லாமல், முற்றிலும் புதுமுகங்களை நம்பிக் களமிறங்கி இருந்தாலும், இயக்குநர் ராசு. ரஞ்சித் தனது மேக்கிங்கால் கவருகிறார். பரீட்சயமான கதைக் களம் என்றாலும், நடிகர்கள் தேர்வாலும், மேக்கிங் ஸ்டைலாலும் பார்வையாளர்களைக் கட்டிப் போடுகிறார்.

சிவாவின் நன்பன் ஆறுவாக நடித்திருக்கும் இன்பா தோன்றும் காட்சிகளெல்லாம் கலகலப்பிற்கு உத்திரவாதம் அளிக்கின்றது. மாறனாக நடித்திருக்கும் சந்தீப் ராஜின், குற்றம் செய்யத் தூண்டில் போடும் நடிப்பில் அசத்தியுள்ளார். அவரது உருவமும் கதாபாத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.

ஒரு சம்பவத்தால் வாழ்க்கையின் போக்கே மாறிவிடும் என சீரியசாகவும், சென்ட்டிமென்டலாயும் பயணிக்கும் படம், அதன் பிறகு வன்முறையைத் தீர்வாய் மொழியும் வழக்கமான தமிழ் சினிமா போக்கில் ஐக்கியமாகிவிடுகிறது.

ஒரு புது டீமைக் கொண்டு, இயக்குநர் ராசு. ரஞ்சித்தால் ஒரு நேர்த்தியான மேக்கிங் கொண்ட படத்தைத் தர முடிந்திருப்பது அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

தீதும் நன்றும் – நல்ல மேக்கிங்..! 

- Advertisement -

Read more

Local News