Thursday, April 11, 2024

தி லெஜண்ட் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னை ஐ.ஐ.டி.யில் மைக்ரோ பயாலாஜி படித்து ஆண்ட்டி பயாடிக் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய இளம் விஞ்ஞானி டாக்டர் சரவணன். வெளிநாடுகளில் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு அழைத்தும் அங்கே போகாமல் தான் பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்பதற்காக தான் பிறந்த ‘பூஞ்சோலை’ என்ற ஊருக்கே திரும்பி வருகிறார்.

வந்த இடத்தில் தன்னுடைய குடும்பம் நடத்தும் கல்லூரியில்  கணிதப் பேராசிரியராக இருக்கும் கீதிகாவைப் பார்த்தவுடன் காதல் கொள்கிறார் சரவணன். இந்தக் காதல் பறந்து கொண்டிருக்கும்போது சரவணனின் மிக நெருங்கிய நண்பனான ரோபோ சங்கர் நீரிழிவு நோயால் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி மனைவியைவிட்டுவிட்டு இறந்து போகிறார்.

தனது நண்பனின் மரணத்தால் அதிர்ச்சியாகும் சரவணன், இந்த நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த, கணையத்தில் இன்சுலினை தினமும் தானாகவே சுரக்க வைக்க ஒரு மாற்று மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

ஆனால், உலகம் முழுக்க நீரிழிவு நோய்க்கு மருந்துகளை சப்ளை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் மருத்துவ மாபியா கும்பல் ஒன்று இதனை எதிர்க்கிறது.

சரவணனின் ஆராய்ச்சியை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டுகிறது. இதில் பாதிக்கப்படும் சரவணன் நேரடியாக அந்தக் கும்பலுடன் மோதுகிறார். இறுதியில் அவர் ஜெயித்தாரா, இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

ஒரு படத்தின் காட்சிகளை யாராலும் எளிதாக கிண்டல் செய்துவிட முடியும். மீம்ஸ்களாக போட முடியும். ஆனால், ஒரு முழு படத்தையுமே மீம்ஸாக, கேலி, கிண்டல், நக்கல் செய்யும் வாய்ப்புள்ளதாகக்  கொடுத்தால் என்ன செய்வது..!? அதுதான் இந்தப் படத்திலும் நடந்திருக்கிறது.

படத்தில் சரவணனின் அறிமுகக் காட்சியில் அப்படியே மைதா மாவில் செய்த பொம்மையைப் போல நடந்து வரும்போதே நமக்கு சப்பென்றாகிவிட்டது. ஆனால் அவருடைய உடல் வாகுவும், தோற்றமும் அதுதான் எண்ணும்போது, நாம் எதுவும் சொல்ல முடியாதுதான்.

நடிப்பென்று பார்த்தால் இயக்குநர்கள் எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு அவரை நடிக்க வைத்து சமாளித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆக்‌ஷன், சென்டிமென்ட், கோபம், அழுகை, விரக்தி என எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தி நடிப்பதற்கான காட்சிகள் படத்தில் இருக்கின்றன. ஆனால், அவரோ எல்லாவற்றுக்கும் ஒரேயொரு ரியாக்‌ஷனை மட்டுமே நம்மிடம் காண்பித்திருக்கிறார்.

இரண்டு கதாநாயகிகளும் வட இந்திய நடிகைகள் என்பதோடு, தாராளம்’ காட்டுவதற்கு தயங்க மாட்டார்கள் என்பதால், ரொமான்ஸ் காட்சிகளிலாவது மனிதர் பிரித்து மேய்ந்திருப்பார் என்று எதிர்பார்த்தால், டி.ராஜேந்தர் கணக்கில் எட்ட நின்று தொட்டுப் பார்த்து காதலிக்கிறார். இக்காலத்திய இளசுகளுக்கு படத்தின் மீது எழுந்திருக்கும் கோபமே இதனால்தான்..!

சரவணன் நடனக் காட்சிகளில் பல நாட்கள் பயிற்சியெடுத்து ஆடியிருக்கிறார் போலும். நன்றாகவே உள்ளது. கீதிகா திவாரி, லட்சுமி ராய், ஊர்வசி ரவுத்தலா மூவருடனும் இவர் போட்டிருக்கும் ஆட்டம் முன்னொரு காலத்தில் தெலுங்கு சினிமாவில் பார்த்த காட்சிகளைப் போல இருந்தது..!

அனல் அரசுவின் திறமையான இயக்கத்தால் சண்டை காட்சிகள் அனைத்துமே சிறப்பாக இருக்கின்றன. சரவணனும் உடலை வருத்திக் கொண்டு சண்டையிட்டிருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இது மட்டும் போதுமா என்ன..?

காதலியாக, மனைவியாக நடித்திருக்கும் கீதிகாவின் முகமே பேரிளம் பெண்ணாக இருக்கிறது. ஆனாலும் டப்பிங் வாய்ஸ் கச்சிதமாக ஒத்துப் போயிருப்பதால் சிறப்பாகவே நடித்திருப்பதுபோல தோன்றுகிறது. வில்லனின் இடத்தில் கீதிகா இருக்கும்போது அவருடைய சோக நடிப்பும் இயக்குநர்களின் திறமையால் சிறப்பாகத்தான் உள்ளது.

வில்லியாக வரும் ஊர்வசி ரவுத்தலாவின் அழகில் ஸ்கிரீனே ஜொலிக்கிறது. நடனம், நடிப்பு இரண்டிலும் அம்மணி கெலித்திருக்கிறார் என்றே சொல்லலாம். இவரை வில்லியாக பார்க்கும் இடம் கொஞ்சம் அதிர்ச்சிதான். ஆனால் கடைசியில் சண்டையெல்லாம் போட வைத்து இவரையும் அதிரடி நாயகியாக மாற்றியிருக்கிறார்கள்.

மேலும் அப்பாவாக விஜய்குமார், பாட்டியாக சச்சு, அண்ணனாக பிரபு, நண்பனாக ரோபா சங்கர், விவேக், யோகிபாபு என்று பலரும் இவரைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்து நடித்திருக்கிறார்கள். விவேக் நடித்த கடைசி படம் இது என்பதால் அவரை மிஸ் செய்கிறோமே என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிட்டது இந்தப் படத்தில் அவரது நடிப்பும், இருப்பும்.

ரோபா சங்கர் தனது குணச்சித்திர நடிப்பைக் காண்பித்திருக்கிறார். தேவதர்ஷிணி தனது கணவரை இழந்த தருணத்தில் சோகத்தைப் பிழிவதுபோல நடித்திருக்கிறார். கீதிகாவின் அப்பாவாக நடித்திருக்கும் தம்பி ராமையா வழக்கம்போல தனது பண்பட்ட நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

யோகிபாபு இடைவேளைக்கு பின்பு விவேக் இல்லாத குறையைப் போக்குவதற்காகவே உள்ளே கொண்டு வரப்பட்டார் போலும். சின்னச் சின்ன ஸ்மைலியை காட்டுவதற்கு உதவியிருக்கிறார் யோகிபாபு. நாசர் அவ்வப்போது சரவணனுக்கு ஊக்கம் கொடுப்பவரைப் போல நடித்து. கடைசியில் காலை வாரிவிடுகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜின் அதிரடியான பாடல் இசை, அதே போன்ற பின்னணி இசை, ஊர்வசி ரவுத்தேலாவின் கவர்ச்சி, யோகி பாபு சில இடங்களில் செய்யும் காமெடி என்று படத்தில் சொல்வதற்கும் சிலவைகள் இருக்கவே செய்கின்றன.

யாஷிகா ஆனந்த் உடன் ஆடும் மொசலு மொசலு’ பாடலும், ராய் ல‌ஷ்மியுடன் நடனமாடும் வாடி வாசல் வாடி’ பாடலும், ஊர்வசியுடன் ஆடும் பாடலும் கலர்ஃபுல்லாக படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் ரிச்னெஸ் பாடல் காட்சிகளிலும், போட்டிருக்கும் செட்களிலுமே தெரிகிறது. மிக நீண்ட நாட்கள் படமாக்கப்பட்டிருப்பதால் ஷூட்டிங் செலவும் அதிகமாகவே ஆகியிருக்கிறது.

இந்தப் படத்தின் மிகப் பெரிய பிரச்சினையே சம்பந்தம் இல்லாமல் காட்சிகள் வருவதுதான். பார்வையாளர்களுக்கு முழுப் படமாக இல்லாமல், தனித் தனி காட்சிகளாக துண்டு, துண்டாக கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர்கள். ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத காட்சிகளால் கதை திடீரென்று ஜம்ப் ஆகி வேறு பக்கம் செல்கிறது.

படத்தின் முதல் பாதி எதை நோக்கி செல்கிறது என்றே புரியவில்லை. இண்டர்வெல் பிளாக்கில்தான் அடுத்து என்ன நடக்கும் என்பதையே சொல்லியிருக்கிறார்கள். வெறும் காட்சிகளாக எழுதி, படமாக்கிவிட்டு பின்னர் அதை ஒட்டி, ஒட்டி சேர்த்திருக்கிருக்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.

இந்தக் கதையை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஜோடிகளான ஜேடி – ஜெர்ரி அஜீத் நடித்திருந்த ‘உல்லாசம்’ படத்தை இயக்கியவர்கள். மேலும் 600-க்கும் மேற்பட்ட புகழ் பெற்ற விளம்பரங்களை உருவாக்கியிருக்கியவர்கள்.

அந்த விளம்பரப் படங்களில் இருக்கும் ரிச்னெஸ்ஸை இந்தப் படத்தில் காட்சிக்குக் காட்சி செட் செய்து வைத்து படத்தைப் பிரம்மாண்டம் என்று சொல்ல வைத்திருக்கிறார்கள். படத்தில் வரும் பல ஒன் லைன் பன்ச் வசனங்களும் அதே விளம்பர பாணியில் இருக்கின்றன என்பதும் உண்மைதான்.

வில்லனான சுமன் நடத்தும் அந்தக் கொடூர சிறைச்சாலையை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. இதெல்லாம் சாத்தியம்தானா என்ற கேள்வியும் எழுகிறது. கமர்ஷியல் திரைப்படங்களின் லாஜிக் எல்லை மீறலில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துவிட்டது இந்தக் காட்சி.

ஆனாலும், ஒரேயொரு விஷயத்துக்காக தயாரிப்பாளர், நடிகரான அருள் சரவணனுக்கு நமது நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

இதுவரையிலும் தமிழ்ச் சினிமாவில் மருத்துவ உலகத்தில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள். மருத்துவ இன்சூரன்ஸில் நடக்கும் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இந்தப் படத்தில்தான் முதல்முறையாக டயாபடீஸ்’ என்ற சர்க்கரை வியாதியை முன் வைத்து உலகம் முழுவதும் நடந்து வரும் மருந்து தயாரிக்கும் மாபியா கும்பலைப் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள். இதுவரையிலும் பேசாத விஷயத்தைப் பேசியதற்காகவே இந்தப் படத்தின் இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர் சரவணனுக்கும் நமது நன்றிகள்.

இப்போது உலகம் முழுவதும் நடந்து வரும் ‘டயாபடீஸ்’ நோய்க்கான ஒரு ஆண்டுக்கான மருந்து விற்பனை மட்டுமே 1 லட்சம் கோடி என்கிறார்கள். இந்த அளவுக்கு பணம் புழங்கும் இந்தத் துறையில் இந்த ‘டயாபடீஸ்ஸை’ வைத்து மருத்துவர்கள் அடிக்கும் கொள்ளையையும் இந்தப் படம் சொல்லிக் காட்டுகிறது. இதனால், ‘சர்க்கரை வியாதி’ பற்றிய ஒரு விழிப்புணர்வை இந்தப் படம் கொடுத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

RATINGS : 3 / 5

- Advertisement -

Read more

Local News