Saturday, April 13, 2024

ஐந்து முதல்வர்களை உருவாக்கிய தமிழ் சினிமா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியத் திரைவானில் தமிழ்த்திரை உலகிற்கு மட்டும் ஒரு தனிப் பெருமை உண்டு.

அது என்ன..?

இந்தியத் திரை உலகமே தனது புருவத்தை உயர்த்தி ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்த்த ‘அதிசயக் கலைஞன்’, ‘சிம்மக் குரலோன்’ சிவாஜி கணேசன் அறிமுகமானதும், தனது நடிப்புத் திறனால் வெள்ளித் திரையில் அதிசயங்கள் புரிந்ததும் தமிழ்த் திரையுலகில்தான் என்பதா?

தனது கட்சியை ஆரம்பித்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது மட்டுமின்றி, பதவி ஏற்ற நாள் முதல் இந்தப் பூவுலகை விட்டு மறைந்த நாள்வரை தோல்வி என்பதையே அறியாத வெற்றித் திருமகனாக வலம் வந்த ‘பொன்மனச் செம்மல்’ பல அரிய சாதனைகளை நிகழ்த்தியது இந்தத் தமிழ்த் திரையுலகில்தான் என்பதா?

சிவாஜிக்குப் பிறகு யார் என்ற கேள்விக்கு தனது ஈடு இணையற்ற நடிப்புத் திறனாலும், அர்ப்பணிப்பாலும் பதிலைச் சொல்லி தமிழ்க் கலைஞர்கள் வட்டத்திற்குப் பெருமை சேர்த்து, நடிப்பில் விஸ்வரூபமெடுத்து நிற்கும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தமிழ்த் திரையுலகின் தவப்புதல்வன் என்பதா?

கன்னடம், தெலுங்கு, இந்தி என்று எல்லா மொழிகளிலும் முதலிடத்தில் இருக்கும் கலைஞர்கள் எல்லோருமே ஒரே குரலில் தமிழ்த் உலகிற்கு மட்டுமல்ல – இந்தியத் திரை உலகத்திற்கே ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிதான் என்று உரக்கச் சொல்கின்ற தமிழ்த் திரை உலகின் அதிசயப் பிறவியான ‘ரியல் சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தமிழ்த் திரை உலகினரின் தனிச்சொத்து என்பதா?

இரட்டை ஆஸ்கரை வென்று இதுவரை இசை உலகில் யாரும் செய்யாத அரிய சாதனையைச் செய்த அதிசய இசைக் கலைஞர் ஏ.ஆர்.ரகுமானை வார்த்தெடுத்தது தமிழ்த் திரை உலகம்தான் என்பதா?

இப்படிப் பட்டியல் போடுவதென்றால் தமிழ்த் திரை உலகிலிருந்து புறப்பட்டு இந்தியத் திரைவானில் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் என்று தமிழ்த் திரை உலகினரின் சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல தமிழகம் பெற்றிருக்கும் தனிப் பெருமை ஒன்று உண்டு.

தமிழகத்தின் அரியணைக்குப் பெருமை சேர்த்த ஐந்து முதல்வர்களை உருவாக்கிய அரிய சாதனைதான் அது.

இந்திய அரசியல் வரலாற்றில் கலைத் துறையில் புரட்சிகரமான எழுத்தாளராக அறிமுகமாகி, பின்னர் அரியணை ஏறி, அரிய வரலாற்றைப் படைத்த பெருமைக்குரியவர் அறிஞர் அண்ணா மட்டுமே.

1909-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் நாள் காஞ்சிபுரத்தில் பிறந்த அறிஞர் அண்ணா திரை உலகிலிருந்து நாட்டை ஆள வந்த முதல் முதல்வர் மட்டுமல்ல – திராவிட இயக்கங்களிலிருந்து நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்ற முதல் முதலமைச்சரும் அவர்தான்.

தமிழ் சினிமாக் கலைஞர்களை அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திய வித்தகர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் அறிஞர் அண்ணாதான்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அறிஞர் அண்ணா தனது அபாரமான பேச்சுத் திறனால் மக்களைக் கட்டிப் போடும் வல்லமை படைத்தவராக விளங்கினார்.

‘நல்ல தம்பி’ படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான அவர் ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ உட்பட எண்ணற்ற திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். அறிஞர் அண்ணாவின் ‘ஓர் இரவு’ படத்தைப் பார்த்து விட்டு ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அண்ணாவைப் பாராட்டினார் எழுத்தாளர் கல்கி.

பல இலக்கியப் படைப்புகளைத் தந்த அண்ணா நடிப்புத் துறையையும் விட்டு வைக்கவில்லை. தனது ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ நாடகத்தில் காகப்பட்டராக நடித்தார். இந்த நாடகத்தின் மூலம்தான் வி.சி.கணேசன் ‘சிவாஜி’ கணேசன் ஆனார் என்பது கூடுதல் தகவல்.

இது தவிர, தமிழகத்தைத் தொடர்ந்து ஆண்ட நான்கு முதல்வர்களை உருவாக்கித் தந்த தாய்க் கழகத்தின் காவலர், நிறுவனர் என்ற தனிப் பெருமையும் அண்ணாவிற்கு உண்டு.

1969-ம் ஆண்டு அண்ணாவின் மறைவிற்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி.

அறிஞர் அண்ணா அவர்களுக்குத் திரை உலகத்தோடு இருந்த தொடர்பு என்பது திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியது மட்டுமே. ஆனால் தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா, பாடலாசிரியர் என்று பல தகுதிகளில் திரை உலகோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் கலைஞர் கருணாநிதி. அதைத் தவிர சொந்தமாக நாடகக் குழுவை நடத்தி, அதில் கதாநாயகனாக நடித்த பெருமைக்கும் சொந்தக்காரர் அவர்.

கலை உலகில் மட்டுமே முழு மூச்சோடு பணியாற்றியவர்கள்கூட எளிதில் சாதிக்க முடியாத பல சாதனைகளை அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையிலும் திரையுலகில் கலைஞர் சாதித்தார் என்றால் அதற்குக் காரணம் அவரது கடுமையான உழைப்புதான்.

இலக்கிய உலகிற்கு பல தரமான படைப்புகள் தந்த கலைஞர் முதலில் வசனம் எழுதிய படங்களான ‘ராஜகுமாரி’, ‘அபிமன்யூ’ ஆகிய இரண்டு படங்களிலுமே அவர் வசனத்திற்கு வேறொருவர் சொந்தம் கொண்டாடிய கொடுமை நிகழ்ந்தது.

அதனால் காயமடைந்திருந்த அவரது மனப் புண்ணுக்கு மருந்து போட வந்ததுதான் ‘மந்திரிகுமாரி’ பட வாய்ப்பு.

‘மந்திரிகுமாரி’ முதல் இதுவரை 75-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ள இவர் 5 முறை தமிழ்நாட்டை ஆண்ட பெருமைக்குச் சொந்தக்காரர்.

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா, திருமதி வி.என்.ஜானகி ஆகிய ஐந்து முதல்வர்களுமே தமிழ்த் திரையுலகத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும், இந்தப் பட்டியலில் பின்னால் இடம் பெற்றுள்ள மூவருக்கும் முன்னால் இடம் பெற்றுள்ள இருவருக்கும் உள்ள சிறிய வித்தியாசத்தை இங்கே பதிவு செய்வது அவசியம் என்று நினைக்கிறேன்.

முழு நேர அரசியல்வாதியான அண்ணா கலைத்துறையிலும் தன் கவனத்தைச் செலுத்தி புகழ் பெற்றவர்.

“என்னுடைய கட்சி வேலைகளுக்கு இடையூறு இல்லாமலிருந்தால் திரைப்படத்திற்கு வசனம் எழுத ஒப்புக் கொள்கிறேன்” என்ற நிபந்தனையுடன் தனது முதல் திரைப்பட வாய்ப்பை ஒப்புக் கொண்டவர் கலைஞர் கருணாநிதி.

அறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து கொண்டே கலைத்துறைக்குச் சேவை புரிந்தவர்கள்.

ஆனால் முழுக்க, முழுக்க கலைத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் என்றால் அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்களாக புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு 24 நாட்கள் மட்டுமே முதல்வராகப் பணியாற்றிய வி.என்.ஜானகியையும் மட்டுமே கூற முடியும்.

அதிலும் ஒரு நடிகர் நாடாள முடியுமா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு “முடியும்” என்று அழுத்தம், திருத்தமாக தனது ஆட்சித் திறனால் எம்.ஜி.ஆர். பதில் சொன்னார் என்றால் அந்த நான்கெழுத்து ‘முடியும்’ என்ற வார்த்தைக்குப் பின்னே எவ்வளவு உழைப்பு இருந்தது.. எவ்வளவு தியாகம் இருந்தது.. எவ்வளவு நம்பிக்கை இருந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

திரைப்பட நடிகர்களுக்கு வழங்கப்படக் கூடிய உயர் விருதான ‘பாரத்’ விருதைத் தமிழ்த் திரையுலகிற்குப் பெற்றுத் தந்த முதல் கதாநாயகனான எம்.ஜி.ஆர் 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார்.

1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் நாள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய எம்.ஜி.ஆர், சினிமா, அரசியல் என்று இரட்டைக் குதிரைகளில் 5 ஆண்டுகள் சாமர்த்தியமாக சவாரி செய்த சாகசத்திற்குச் சொந்தக்காரர்.

கட்சி ஆரம்பித்த ஐந்தே ஆண்டுகளில் 1977-ல் ஆட்சியைப் பிடித்த அவரது அசகாயத் திறன் கண்டு இந்தியாவே வியந்தது.

1977-ல் ஆட்சியைப் பிடித்தது மட்டுமல்ல; அதற்குப் பிறகு அவர் மறையும்வரை ‘அவர்தான் எங்களது முதல்வர்’ என்று தமிழக மக்களில் பெரும் பகுதியினர் ஒரே குரலில் சொல்கின்ற அளவில் தமிழ்ச் சமுதாயத்தின் ஒன்று திரண்ட ஆதரவைப் பெற்றிருந்தாரே அது அவரது அபாரமான சாதனை.

புரட்சித் தலைவரின் மறைவிற்குப் பிறகு சில காலம் தமிழகத்தை ஆளும் வாய்ப்பைப் பெற்ற அவரது துணைவியார் வி.என். ஜானகி தமிழ்க் கலை உலகின் பிரதிநிதி என்பதும் எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களின் கதாநாயகி என்பதும் தமிழ்ப்பட உலகம் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய ஒன்று.

1991-ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற ‘புரட்சித் தலைவி’ ஜெயலலிதா.. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என்று பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

புரட்சித் தலைவரோடு அதிகமான திரைப்படங்களில் ஜோடியாக நடித்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான இவர் அரசியல் ஆர்வம் காரணமாக 1982-ல் அ.இ.அ.தி.மு.க.வில் உறுப்பினரானார்.

‘பெண்ணின் பெருமை’ என்ற தலைப்பில் அண்ணா தி.மு.க.வின் அரசியல் மாநாட்டில் அவர் பேசிய பேச்சு பெண்ணினத்தின் பெருமையை மட்டுமின்றி புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் அபாரமான அறிவுத் திறனையும், பேச்சாற்றலையும் அரசியல் உலகிற்கு அறிவிப்பதாக அமைந்தது.

கட்சியில் சேர்ந்த ஓராண்டிலேயே அண்ணா தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராகப் பதவி ஏற்ற ஜெயலலிதாவை அவரது அபாரமான ஆங்கிலப் புலமை காரணமாக ராஜ்யசபா உறுப்பினராக ஆக்கினார் எம்.ஜி.ஆர்.

புரட்சித் தலைவரின் மறைவிற்குப் பிறகு தங்களை அன்பு காட்டி, அரவணைத்து ஆதரவு தரக்கூடிய அன்புத் தாயாகவும், எதிர்க் கட்சிகளின் தாக்குதல்களிலிருந்து கட்சியைக் காக்கக் கூடிய வீராங்கனையாகவும் புரட்சித் தலைவி ஜெயலலிதாவைப் பார்த்தனர் அண்ணா திமுகவின் கோடான கோடி தொண்டர்கள்.

1989-ம் ஆண்டில் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை அலங்கரித்த முதல் பெண்மணி என்ற அடையாளத்துடன் சட்டசபைக்குள் அடியெடுத்து வைத்த புரட்சித் தலைவி ஜெயலலிதா அடுத்து ஆட்சியைப் பிடிக்க எடுத்துக் கொண்டது இரண்டே ஆண்டுகள்தான்.

வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் என்ற தனிப் பெருமையுடன் 1991-ம் ஆண்டு தமிழகத்தை ஆள்கின்ற பொறுப்பை அவர் ஏற்றுக்  கொண்டார் .

2016-ம் ஆண்டில் ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஆறாவது முறையாக முடி சூடிய ஜெயலலிதா, தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க உறுதி பூண்டு அதற்காகக் கடுமையாக உழைத்தவர்.

1967-ம் ஆண்டில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பு தமிழ்த் திரையுலகப் பிரதிநிதியான அறிஞர் அண்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு அடுத்த 50 ஆண்டுகளில் பிரதிநிதிகள் மாறினாலும் ஆட்சிப் பொறுப்பை கலை உலகப் பிரதிநிதிகளிடமிருந்து யாராலும் பறிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

- Advertisement -

Read more

Local News